நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்துவந்திருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த 'போகோ ஹரம்' (Boko Haram) பயங்கரவாத அமைப்பினர் 110 விவசாயிகளைக் கட்டிவைத்து, தலையைத் துண்டித்து, உடல் உறுப்புகளை அறுத்து சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மிகவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் மக்கள் உணவுக்கு வழியின்றி பசியில் தவித்துவருகின்றனர். அதேவேளையில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பினர், அந்தப் பகுதியில் ஐ.எஸ் அமைப்பை நிறுவ முயன்றுவருகின்றனர். நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹரம், ஐ.எஸ் பயங்கரவாதிகளும் மோதிக்கொள்வதில் அப்பாவி மக்கள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. மக்கள் அரசுக்கு தங்களைப் பற்றித் தகவல்கள் தருகிறார்கள் என்ற கோபத்தில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் மக்கள் மீதான மனிதத் தன்மையற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் நிலவும் பஞ்சம் காரணமாக, 600 மைல் பயணித்து வடகிழக்குப் பகுதியில் விவசாயக்கூலிகளாக வேலை செய்துவருகின்றனர். குறிப்பாக, போகோ ஹரம் பயங்கரவாதிகள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதுவரை 30,000 விவசாயிகள் இம்மாதிரியான தாக்குதல்களில் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நைஜீரியாவின் போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியிலுள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவசாயிகள், விவசாய நிலங்களில் வேலை பார்த்துவந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த போகோ ஹரம் பயங்கரவாதிகள், விவசாயப் பணிகளை செய்துகொண்டிருந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
போகோ ஹரம் பயங்கரவாதிகள் அங்கிருந்த 110 விவசாயிகளை கடத்தி, கை கால்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள். அதையடுத்து 110 விவசாயிகளையும் கொடூரமான முறையில் தலையைத் துண்டித்து, உடல் உறுப்புகளை அறுத்து, சித்ரவதை செய்து படுகொலை செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். மேலும், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நைஜீரியா மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஐ.நா சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கல்லோன் (Edward Kallon), ``போகோ ஹரம் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். கொடூரமான இந்தச் செயலைச் செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்றார். மேலும், நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ``இந்த விவேகமற்ற கொலைகளால் முழு நாடும் காயமடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
போகோ ஹரம் அமைப்பினர் கடத்திச் சென்ற பெண்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாக நைஜீரிய அரசு தெரிவித்திருக்கிறது. ராணுவம் மற்றும் அரசாங்கச் சார்பு போராளிகளுக்காக மக்கள் உளவு பார்த்ததாகக் கூறி, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன என்று கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/international/110-civilians-killed-several-wounded-in-nigeria-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக