Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

விழுப்புரம்: `அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை’ - மாவட்ட பா.ஜ.க தலைவர் மீது மகளிரணிச் செயலாளர் புகார்

விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன், 2006-ம் ஆண்டு பா.ம.க கட்சியின் சார்பில் முகையூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அதன் பிறகு தி.மு.க-வில் இணைந்தவர், அங்கிருந்தும் வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தார். தற்போது விழுப்புரம் மாவட்டத்தின் பா.ஜ.க தலைவராக இருக்கும் இவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் காயத்ரி என்பவர் கட்சியின் தலைமைக்கு அளித்த புகார் கடிதம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

புகார் கடிதம்

அந்தக் கடிதத்தில், ``மாவட்டத் தலைவரான வி.ஏ.டி.கலிவரதன் கட்சியில் தனக்குப் பதவி கொடுப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டதுடன், தன்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். அதைப் பற்றி வெளியில் சொன்னால் என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்” என்று எழுதி காயத்ரி என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டிருந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், அந்தக் கடிதம் குறித்து காயத்ரி அப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், அது பொய்ப் புகார் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் வி.ஏ.டி.கலிவரதன். அதேபோல காயத்ரியும், கலிவரதனும் பேசிக்கொள்வதாக ஆடியோ ஒன்று வெளியானது.

இந்தநிலையில் காயத்ரி, இன்று வி.ஏ.டி.கலிவரதன் தனக்கு கொலை மிரட்டல்விடுக்கிறார் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் கடிதத்தில், `தற்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன், எனக்கு கள்ளக்குறிச்சி  மாவட்ட மகளிர் அணித் தலைவர் பதவி வாங்கித் தருகிறேன் என்று கூறி என்னிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்.

காயத்ரி

முடக்குவாத சிகிச்சைக்காக நான் சென்னை சென்றுகொண்டிருந்தபோது, என்னை வழிமறித்து, நல்ல டாக்டரிடம் காட்டுவதாக என்னைக் கட்டாயமாக கடத்திச் சென்று தெரியாத ஓரிடத்தில் என்னை அடைத்துவைத்தார். இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அந்த அறைக்கு வந்த வி.ஏ.டி.கலிவரதன் `இப்போ என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார். அதன் பிறகு என்னைப் பாலியல் வன்முறை செய்த அவர், இரண்டு நாள்கள் என்னை அடைத்துவைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். அதுமட்டுமல்லாமல் அதைப் படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனால் அவர் கூப்பிடும்போதெல்லாம் அவரது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வீடியோவை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டினார். நான் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காத அவர், `பா.ஜ.க கட்சியில் இப்போது ரொம்ப பலமா இருக்கேன். என்னை யாரும் ஒண்ணும் செய்துவிட முடியாது. மறுபடியும் என்னிடம் பணம் கேட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன்’ என்று தொடர்ச்சியாக மிரட்டிவரும் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக வி.ஏ.டி.கலிவரதனைத் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை என்பதால், அவரது எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினோம், அதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/sexual-harassment-case-against-villupuram-bjp-leader

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக