Ad

புதன், 9 டிசம்பர், 2020

`ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்; நிரூபிக்க முடியுமா ஸ்டாலினால்?’ - எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

``தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த ஒதுக்கப்பட்ட ரூ. 23 கோடியை, ரூ. 900 கோடியாக உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், அதை நிரூபிப்பாரா?" என்று கரூரில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடுமையான விதிமீறல் மற்றும் முறைகேடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read: `பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க

இந்த நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வெளியிடுகிறார். அதை அப்படியே லாரி உரிமையாளர்கள் சங்கமும் பின்பற்றி பேசுகின்றன. ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.75 கோடி ஊழல் செய்தவர்கள் ஊழலைப் பற்றி பேசக்கூடாது. இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க ஆட்சிதான்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

'ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் ஒளிரும் பட்டைகள், ஜி.பி.எஸ், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் வாங்க வேண்டும்' என்று நாங்கள் கட்டாயப்படுத்துவதாக, ஸ்டாலின் சொல்வது கோமாளித்தனமானது. இந்தக் கருவிகள் அனைத்தும் தனியார் நிறுவனம் மட்டுமே தயாரிக்கின்றன. எந்த அரசு நிறுவனம் இதைத் தயாரிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதற்கு ரூ.23 கோடி மதிப்பீட்டை, ரூ. 900 கோடியாக உயர்த்தியதாகவும் பொய்யான குற்றச்சாட்டைச் சொல்கின்றனர். இதற்கு இன்னும் டென்டர் விடவில்லை. இதுபோன்று, தி.மு.க ஆட்சியில் வேண்டுமானால் நடக்கலாம், ஆனால், அம்மா ஆட்சியில் நடக்காது. இதற்கு சரியான ஆதாரம் கொடுப்பாரா ஸ்டாலின்? அதை அவர் நிரூபிப்பாரா?

பேருந்துகளில் மேற்கூரை ஒழுகுவது பற்றி கூறுகிறார்கள். கடந்த, 2012 - ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பேருந்தில் ரிவிட் போட்டு, அதன் மேல் தார்பாய் அமைப்பார்கள். அப்போது அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வில்தான் இருக்கிறார்(செந்தில் பாலாஜி). கூரை ஒழுகுவது பற்றி அவரிடம் கேளுங்கள். போக்குவரத்துத்துறை செயலாளர் மாற்றப்பட்டது குறித்து குற்றச்சாட்டு வைக்கிறார் ஸ்டாலின். இந்த நாள் வரை இரண்டு செயலாளர்கள் ஓய்வு பெற்று உள்ளனர். இரண்டு பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது வழக்கமான நடைமுறை மட்டுமே. தி.மு.க ஆட்சியில் 5 முறை செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.

லாரிகளுக்கு ஸ்டிக்கர் கிடையாது. ஜி.பி.எஸ் கிடையாது. பள்ளி வாகனங்களில் மட்டும் வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜி.பி.எஸ் பொருத்தப்படுவது கட்டாயம். அது நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் தேவையில்லாமல் பொய்க் குற்றச்சாடுகளை சுமத்துகிறார்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-mrvijayabaskar-slams-mkstalin-in-karur-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக