`புரெவி’ புயல் தாக்கத்தால் டிசம்பர் 1-ம் தேதி முதல் தொடர் மழையைச் சந்தித்து வருகிறது தமிழகம். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக டெல்டா மாவட்டம் மற்றும் சில உள்மாவட்டங்களிலும் குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
கன மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்தார். குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குமாரட்சி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளையும், விவசாய நிலங்களையும் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் நேரடியாகப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அவர், கன மழையால் பழுதடைந்த சாலைகள் மற்றும் வீராணம் ஏரியின் மதகுகளைப் பார்வையிட்டார்.
சிதம்பரம் வல்லம்படுகை பகுதியில் இழப்பீடு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நிவர் மற்றும் புரெவி புயலால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. முன்னதாக நிவர் புயல் பாதிப்பின் போது நேரடியாக ஆய்வு செய்து, அது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே புரெவி புயல் எதிரொலியாகக் கன மழை பெய்த காரணத்தினால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடையும் சூழல் ஏற்பட்டிருக்கின்றன. அதோடு வாழை, கடலை, நெற்பயிர்கள், மிளகாய் உள்ளிட்ட பல பயிர்கள் கன மழையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கின்றன. புயலால் கனமழை ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் பழுதடைந்து இருக்கின்றன. அந்த சாலைகள் சீர் செய்யப்படும். தாழ்வான பகுதிகளில் உள்ள நீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தினால் இன்னும் நீர் வந்து கொண்டிருக்கின்றது. படிப்படியாக நீரை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகள் அதிக அளவில் நெற் பயிர்கள் பயிரிட்டு இருக்கின்றனர். கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு வாழை, கடலை, மிளகாய் மற்றும் பல பயிர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து முழு அறிக்கை அரசுக்குக் கிடைத்தவுடன் அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கும்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு அனுப்பி மத்திய குழுவானது, நிவர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டனர். தற்போது புரெவி புயல் குறித்து மத்திய குழு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் பேரிடர் நிதி வழங்கியுள்ளது. அதிலிருந்துதான் நிவாரணப் பணிக்கு நிதி செலவிடப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு இரண்டாம் தவணை நிதி வழங்கியுள்ளது.
Also Read: `உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன்!’-கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு குடும்பத்தை நெகிழ வைத்த இளைஞர்
மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனால் அதிகமான இழப்பு ஏற்பட்ட காரணத்தினால், கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அளவுக்கு மீறி மழை பெய்த காரணத்தினால் நீரானது, வடிகால் வசதி இல்லாத சமவெளி பரப்புகளில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நீர் மட்டம் அதிகரித்ததால், தேங்கிய மழை நீர் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே பாதிப்புகள் அதிக அளவில் இருக்கிறது. மாவட்டத்தில் எந்தெந்தப் பகுதிகளில் நீரி வடியாமல் இருக்கிறதோ, அந்த பகுதிகளைப் பார்வையிட்டு உண்டான திட்டங்களை வகுத்து, எதிர்காலத்தில் கன மழை பெய்கிறபோது அந்த நீர் வடிவதற்கான தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.
source https://www.vikatan.com/news/disaster/cm-eps-visits-cyclone-burevi-affected-areas-in-cuddalore-districts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக