கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக உலகமே முடங்கிப்போய் உள்ளது. இன்னும் முழுமையான இயல்புநிலை திரும்பவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சுற்றுலாத்துறை சார்பில் தமிழகத்தின் பெருமைகளை சுற்றுலா பயணிகளுக்கு கூறும் விதமாக விமான நிலையங்களில் ரூ.4.49 கோடி செலவில் விளம்பரசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலத்தில் உலகமே முடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவர விளம்பர ஒப்பந்தம் செய்து, அதற்கு பணம் செட்டில் செய்யப்பட்டதற்கு நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ்ராஜன் கூறுகையில், "தமிழக சுற்றுலாத்துறை 18 விமான நிலையங்களில நாலரை கோடி ரூபாயில் விளம்பரம் கொடுத்திருக்கு. 257 நாள் கொரோனா காரணமா ஊரடங்கு பிறப்பிச்சிருக்கிறாங்க.
உலகம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வரக்கூடாதுண்ணு அறிவிச்சிருக்கிறாங்க. விமானம், ரயில் சர்வீஸ் எல்லாம் கட் பண்ணியிருக்கிறாங்க. இதுபோக ஒரு மாநிலத்தில இருந்து இன்னொரு மாநிலத்துக்கு போகமுடியாத நிலைமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகள் வாங்க, சுற்றுலா இடங்கள பாருங்கன்னு தமிழ்நாட்டோட சிறப்ப எல்லாம் சொல்லி விளம்பரம் தேடி இருக்கிறாங்களாம்.
பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், கொச்சி, சென்னை, கோவா, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, கயா, பூனே, நாக்பூர், கவுகாத்தி, வதேதரா, மும்பை , அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவில உள்ள 18 விமான நிலையங்களில இவங்க விளம்பரம் கொடுத்திருக்காங்க. இதுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியில இருந்து நிதி வாங்கி உடனடியா பில்லையும் செட்டில் பண்ணியிருக்கிறாங்க. கமிஷனுக்காகத்தான் டெண்டர் விட்ட உடனே பில்லை செட்டில் பண்ணியிருக்கிறார்ங்க. அவங்ககிட்ட கேட்டா ஆசிய வங்கியில இருந்து வாங்கின நிதியை உடனே செலவு செய்யணும்னு சொல்லுவாங்க.
கொரோனா காலத்தில கால அவகாசம் கேட்டா எல்லா வங்கியும் டைம் கொடுக்கும். ஆனா, இந்த ஊரடங்கு காலத்தில டெண்டர் விட்டு, விளம்பரம் பண்ணி, அவங்களுக்கு செப்டம்பர் மாதமே பில்லும் உடனடியா செட்டில் பண்ணியிருக்கிறாங்க. இதுல மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கு, அதுதான் இவ்வளவு அவசரத்துக்கு காரணம். மக்களுடைய வரிப்பணத்தை வீணடிப்பதற்காக சுற்றுலத்துறை இப்படி ஒரு முன் யோசனை இல்லாத செயலை செய்திருக்கிறது" என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/former-tourism-minister-slams-tn-tourism-in-ad-during-corona-period
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக