கொரோனா லாக்டௌன் காலத்தில் டீமேட் அக்கவுன்ட் தொடங்கி, ஷேர்களை வாங்கிக் குவித்தனர் பல நண்பர்கள். லாக்டௌன் முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின், நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் இந்த ஷேர் மார்க்கெட்டையும், அரக்கப்பறக்க ஓடவைக்கும் தங்கள் ஆபீஸ் வேலையையும் எப்படி ஒருங்கே சமாளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நண்பர்கள் சிலருடன் பேசினேன். அதில் ஒருவர்``இப்பல்லாம் நாங்க வாரன் பஃபெட் சொல்லிக் குடுத்த வழிமுறையைத்தான் ஃபாலோ பண்றோம்’’ என்றார். அது என்ன வழிமுறை?
``நாங்கள் வாங்கிய பங்குகளை எப்போதுமே வைத்துக் கொள்ளத்தான் பிரியப்படுகிறோம்” (Our favorite holding period is forever) என்று வாரன் பஃபெட் சொன்னதைத்தான் அவர் ஃபாலோ செய்கிறார். இந்த விஷயத்தில் வாரன் பஃபெட்டுக்கும் என் நண்பருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், லாபம் தரும் பங்குகளை மட்டுமே பஃபெட் வைத்திருந்தார். ஆனால் நண்பரோ, பங்கு விலை வாங்கியதைவிடக் குறைந்ததால், விற்க மனமில்லாமல் வைத்திருக்கிறார்.
``பை ரைட்; சிட் டைட்”
வாரன் பஃபெட் ஒரு பேசிவ் இன்வெஸ்டார். அவர் பின்பற்றும் இந்த வழிமுறையை நாமும் பின்பற்றினால், பங்குகளின் போக்கை தொடர்ந்து கண்காணிப்பதோ, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வதோ அவசியமே இல்லாத நிலை ஏற்படும். 1987-ல் தான் வாங்கிய கோகா கோலா கம்பெனி பங்குகளை இன்னும் விற்காமல் இருக்கிறா பஃபெட். ``பை ரைட்; சிட் டைட்” (Buy Right; Sit Tight) எனப்படும் இந்தக் கொள்கையை முன்வைத்து பலன் அடைந்தவர்கள்தான் வாரன் பஃபெட், ஜான் போக்ளே போன்ற பல பிரபல முதலீட்டாளர்கள். நம் ஊர் சௌரப் முகர்ஜியும் இதையே பரிந்துரைக்கிறார். சௌரப் முகர்ஜி நடைமுறைப்படுத்தி உள்ள `காபி கேன் இன்வெஸ்டிங்’ கொண்டாடுவது இந்த பேசிவ் இன்வெஸ்டிங் முறையைத்தான். அது என்ன காபி கேன் இன்வெஸ்டிங்?
நன்மை தரும் காபி கேன் இன்வெஸ்ட்டிங்
சூடான காபியை ஒரு ஃப்ளாக்கில் வைத்து, தேவைப்படும்போது நாம் குடிக்கிற மாதிரி, நல்ல பங்குகளை வாங்கி வைத்து, பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது விற்று, பணமாக்கிக் கொள்வதுதான் காபி கேன் இன்வெஸ்ட்டிங்.
இந்த முறை முதலீட்டில் பல நன்மைகள் உண்டு. அடிக்கடி வாங்கல், விற்றல்களில் ஈடுபடும்போது செலுத்த வேண்டிய கட்டணம், வரி என்று பல விதங்களிலும் செலவாகும் பணம் பேசிவ் இன்வெஸ்டிங்கில் கணிசமாக மிச்சமாகும். அடிக்கடி ஏறி, இறங்கும் சந்தையைப் பார்த்துப் பார்த்து டென்ஷன் அடையத் தேவையில்லை. பத்து நல்ல கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்துவிட்டு, நம் வேலையைப் பார்க்கப் போகலாம். அவற்றில் குறைந்தது ஆறு கம்பெனிகளாவது வளர்ந்து 10 வருடங்களில் நல்ல பலனைக் கொடுக்கும்.
எதிர்மறை விமர்சனங்கள்
இந்த ``வாங்கு; வைத்திரு” (Buy and Hold) கொள்கை கேட்பதற்கு அருமையான வழிமுறையாக இருந்தாலும் இதில் மாற்றுக் கருத்துகொண்டவர்கள் வைக்கும் பலவித வாதங்களையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.
1. ``பை ரைட்; சிட் டைட்” என்பதில் இந்த ``பை ரைட்” மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அவை சரியான விலையில் கிடைக்கும் வரை கண்காணித்து, பொறுமை காத்து வாங்க எத்தனை பேரால் இயலும்?
2. ``வாங்கு; வைத்திரு” என்பது வாரன் பஃபெட்டின் பொதுவான கொள்கையாக இருந்தாலும், சமயத்துக்குத் தகுந்தாற்போல நடவடிக்கைகள் எடுத்து தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது அவரது பெர்க் ஷயர் ஹாத்வே கம்பெனி. வாங்கல், விற்றல்களில் சளைக்காமல் ஈடுபடும் இந்தக் கம்பெனி ஐ.பி.எம், ஜெனரல் எலெக்ட்ரிக், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களில் தன் பங்கைக் குறைத்ததோடு, சமீப காலத்தில் ஏர்லைன் பங்குகளை மொத்தமாக விற்றுத் தீர்த்துள்ளது.
3. காளைச் சந்தையில் சீராக பங்கு விலை ஏறும் வரை வேண்டுமானால் இந்தக் கொள்கை செல்லுபடியாகும்; கரடிச் சந்தையிலும், பக்கவாட்டு நகர்வுகளின் போதும் விலைகள் தாறுமாறாக இறங்கினால், பொறுமை காப்பதென்பது எல்லோராலும் இயலாத காரியம்.
4. அமெரிக்க பங்குகளில் உள்ள ஆழமும், வீச்சும் இந்தியப் பங்குகளில் கிடையாது என்பதால் இங்கே ``வாங்கு; வைத்திரு” நடைமுறைக்கு சரிவராது.
காளைச் சந்தையும் கரடிச் சந்தையும்...
5. எப்பேர்ப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜரும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதில்லை. காரணம், ஒரு காளைச் சந்தையில் சிறப்பாகச் செயல்பட்ட செக்டார்கள் அடுத்த காளைச் சந்தையில் அவ்வாறு செயல்படுவதில்லை. உதாரணமாக, டாட்காம் வீழ்ச்சிக்குப்பின் தலைதூக்க டெலிகாம் நிறுவனங்களுக்கும், ஐ.டி நிறுவனங்களுக்கும் பல வருடங்கள் பிடித்தன. கடந்த நான்கு வருடங்களாக சோம்பி இருந்த பார்மா துறை கோவிட்டுக்குப் பின்தான் சுறுசுறுப்பு பெற்றிருக்கிறது.
6. வியாபாரத்தில் கோலோச்சும் கம்பெனிகளும்கூட எப்போதும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று கூற இயலாது. மங்களூரில் 12,000 ஏக்கர் பரப்புள்ள எஸ்டேட்டில் காபி விளைவித்து, ஆசியச் சந்தையில் அராபிகா காபிக்கொட்டை விற்பனையில் `நம்பர் ஒன்' ஆகத் திகழ்ந்த கஃபே காபி டே பங்குகள் இன்று சந்தையில் விற்பனையாவதில்லை. 76 நாடுகளில் ஆபீஸ் அமைத்து, ஒரு பங்கின் விலை ரூ.1,379 என்று கொடிகட்டிப் பறந்த ஜெட் ஏர்வேஸ் இன்று கேட்பாரின்றி கிடக்கிறது.
Also Read: `பணத்தோடு உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்!' வாரன் பஃபெட்டின் சக்சஸ் ஃபார்முலா
அவ்வப்போது விற்க வேண்டும்...
இப்படி ``வாங்கு; வைத்திரு” கொள்கைக்கு மறுப்பு கூறுபவர்கள் டே டிரேடிங்கை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. ``பேசிவ் இன்வெஸ்டாராக இருப்பவர்கள்கூட சந்தையின் போக்கை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்; அவ்வப்போது விற்று லாபம் பார்க்க வேண்டும்; சந்தை வீழ்ச்சி அடையும்போது வாங்கவும், தகுந்த காரணமின்றி விஷம் போல் ஏறும்போது விற்கவும், சில நாள்கள் எதுவுமே செய்யாமல் இருக்கவும் பழக வேண்டும்” என்பதே இவர்கள் வாதம்.
இவர்கள் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
source https://www.vikatan.com/business/share-market/share-selling
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக