பேரறிவாளன் விடுதலை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் மீது தமிழக அரசு கொதிப்பில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு. தற்போது தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் பேரறிவாளன்.
அவருக்குப் பெருங்குடல் அழற்சி உள்பட பல்வேறு உடல் உபாதைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், கடந்த நவம்பர் 9-ம் தேதியோடு பரோல் காலம் முடிவடைந்ததால், மேலும், 30 நாள்கள் பரோல் நீட்டிப்புக் கேட்டார் அற்புதம்மாள். உயர் நீதிமன்றம் மேலும் 2 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. இதனிடையே பேரறிவாளனின் உடல்நிலை மோசமாக இருப்பதால், 90 நாள் பரோல் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, 2 வாரகாலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் விடுதலை கோப்பில் முடிவெடுக்காததால் தம்மை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, `ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்' என அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், "ராஜிவ் காந்தி கொலை தொடர்பான பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகு இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. பேரறிவாளன் விடுதலைக்கும் எம்.டி.எம்.ஏ. விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறைவாசிகளல்லாத மனிதர்களைப் பற்றித்தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுநரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?' என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இதனால், 30 ஆண்டுகால துயரம் முடிவுக்கு வர இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதிடும் பாலாஜி சீனிவாசனின் செயலால் அதிர்ச்சியில் உள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர், `` பேரறிவாளன் விடுதலை வழக்கு கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான மூவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் கே.நடராஜ் வாதிடுகையில், `ராஜீவ் கொலை வழக்கில் மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவருக்குத்தான் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம் இருப்பதாகவும் மாநில அரசுக்கோ அல்லது ஆளுநருக்கோ எவ்வித அதிகாரமும் இல்லை' என்றார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், `இது ஏற்கனவே முடிவான விஷயம்' என்று சொல்ல, மத்திய அரசின் வழக்கறிஞரோ, `இல்லை; இதுகுறித்து நாங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்' எனக் கேட்டதால் வழக்கை ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதேநேரம், இந்த வழக்கின் விசாரணையில் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், சி.பி.ஐ தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறி பதில் மனு தாக்கல் செய்ததைச் சுட்டிக் காட்டினார். மேலும், `ஒரு கொலைக்குற்ற தண்டனையில் மாநில அரசுக்கோ அல்லது ஆளுநருக்கோ தண்டனைக் குறைப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று நீங்கள் சொன்னால் இந்தியாவில் ஒரே ஒரு சிறைவாசிக்குக்கூட மாநில அரசு தண்டனைக் கழிவு வழங்க முடியாத ஆபத்து ஏற்படும்' என வாதிட்டார். இப்படிப்பட்ட வாதங்கள் நடந்தபோது, மாநில அரசுக்குள்ள அரசமைப்பு அதிகாரத்தை நிறுவ வேண்டிய இடத்தில் இருந்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், மத்திய அரசு வழக்கறிஞரின் கருத்துக்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். காரணம், `இவ்வழக்கில் மாநில அரசுதான் உரிய அரசு' எனக் கடந்த காலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடி பெற்ற உரிமையை மிகச் சாதாரணமாக மத்திய அரசிடம் ஒப்புக்கொடுக்க முனைவதாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு வழக்கின் விசாரணையின்போதும் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் உண்மைக்கு மாறான பல தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். தற்போது எந்தச் சிறையில் பேரறிவாளன் உள்ளார் என்பதுகூட தெரியாமல் வாதிட்டார். பேரறிவாளன் உள்ள புழல் சிறைக்கும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் இடையே 140 கி.மீ உள்ளது என்பதை மறைத்து 25 கி.மீ என தவறான தகவலைப் பதிவு செய்தார். எனவே, தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிராக பாலாஜி சீனிவாசன் செயல்படுவதால் அது தமிழக அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: சஞ்சய் தத் விடுதலை; ஆர்.டி.ஐ-யில் கிடைக்காத தகவல்! - மும்பை நீதிமன்றத்தை நாடிய பேரறிவாளன்
இது தொடர்பாக, வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனிடம் பேசினோம். `` தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்ட சில பாயிண்டுகளை எங்களுக்கு அனுப்பினர். ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை எந்தளவுக்கு உள்ளது என்பதைத் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னால்தானே நாங்கள் வாதாட முடியும். இந்த வழக்கில், பேரறிவாளன் தொடர்பாக தமிழ்நாடு அரசு எதையும் குறிப்பிடவில்லை. ஆளுநரிடம் உள்ள பரிந்துரை தொடர்பாகத்தான் நீதிமன்றம் கேட்டது. பேரறிவாளன் தரப்பினர் நீதிமன்றத்தில் பொய் சொல்கின்றனர். `பரோல் நீட்டிக்கக் கூடாது' என உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. அதையெல்லாம் அவர்கள் ஏன் சொல்லவில்லை. பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக எனக்கு எழுதுகின்றனர். நான் எப்படி அனுமதி வாங்கித் தர முடியும். அவர் இந்த வருடம் எவ்வளவு நாள் பரோல் வாங்கிவிட்டார் என்பதையும் சொல்லவில்லை. சிலர் இதை அறியாமல் பேசுகிறார்கள்" என்றதோடு முடித்துக் கொண்டார். மாநில அரசு உரிமை குறித்த எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.
இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, "நீண்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு கொரோனா காரணத்தால் சிகிச்சையின்றி வாடிய பேரறிவாளனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் வயதான நோய்வாய்ப்பட்ட தனது பெற்றோரை கவனித்து கொள்ளவும் 90 நாட்கள் விடுப்பு கோரிய நிலையில் முதலில் 30 நாட்களும் பின்னர் இரண்டு வாரங்களும் பரோல் வழங்கப்பட்டது. அந்த மனுக்களில் மிகத்தெளிவாக பேரறிவாளன் எத்தனை முறை விடுப்பில் சென்றுள்ளார் என்பதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். வழங்கப்பட்ட விடுப்பு காலத்தில் பேரறிவாளன் சிகிச்சை பெற காவல்துறை அனுமதி வழங்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு பரோல் நீட்டிப்பு வழங்கியது. அப்போது வாதிட்ட வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், தவறான தகவல்களை தந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால்தான் முழுமையான பரோல் நீட்டிப்பு கிடைக்காமல் போனது. மேலும் மாநில அரசுக்குள்ள அரசமைப்பு அதிகாரத்தை மத்திய அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய போது இவர் மவுனம் காத்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது" என்றனர்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திட்டக்குழு துணைத் தலைவருமான பொன்னையனிடம் பேசினோம். `` ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுதான் எங்களின் நிலைப்பாடு. தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு வழக்கறிஞர்தான் ஆஜராகப் போகிறார். ஏழு பேர் விடுதலையில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார் உறுதியாக.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/activists-shocked-over-tn-government-council-stand-in-7-prisoners-release-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக