Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

வேளாண் சட்டங்கள்: `தீர்வுகளை இவர்களுக்குப் புரியவைக்க முடியாது!’ - பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்!

டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவருகிறது. இந்தச் சூழலில் பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களையும், விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டுவந்திருப்பதாகச் சொல்கிறார்கள்... நீங்கள் அவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மூன்றும் வியாபாரிகளுக்காகக் கொண்டுவரப்பட்டதாகப் பார்க்கிறேன். வியாபாரிகளுக்கும், வேளாண் விளைபொருள்களை வியாபாரம் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கும் வியாபார உறவை தீர்மானிக்கக் கூடியவைதான் இந்தச் சட்டங்கள். விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், விதைகள் போன்றவை குறித்து இந்தச் சட்டத்தில் எதுவும் இல்லை. விளைச்சலுக்குப் பிறகு சந்தைக்கு வரும்போது பொருள்கள் யாரிடம், எப்படிச் செல்ல வேண்டும் என்று சொல்வதுதான் வேளாண் விளைபொருள் சட்டங்கள் அல்லது வேளாண் வியாபாரிகளுக்கு உண்டான சட்டங்கள் என்று சொல்லலாம். ஆனால், இது விவசாயிகளுக்கான சட்டங்கள் இல்லை.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

``விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து, நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்களே..?''

``தாங்கள் விளைவிக்கக்கூடிய பொருள்களை யாராவது வாங்கிக்கொண்டால் போதும் என்ற நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் அவர்களே விலையைத் தீர்மானிப்பார்கள் என்றால் `மேல் கை’ இருந்தால்தான் தீர்மானிக்க முடியும். இரண்டு ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் ஒரு கற்பனைவாதம்தான்.''

``குறைந்தபட்ச ஆதார விலையைச் சுற்றித்தான் பேச்சுகள் இருக்கின்றன. கடந்த காலங்களில், வார்த்தைகளில் மட்டும் கட்சிகள் சொல்லிவந்த நிலையில், தாங்கள் நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும், கடந்த காலத்தில் கிடைத்த சதவிகிதத்தைவிட தற்போது அதிக சதவிகித லாபம் கிடைப்பதாகவும் பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே..?''

``கடந்த காலங்களில் மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதற்கும், தற்போது நாங்கள்தான் செய்கிறோம் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஏன் இல்லையென்றால், இந்திய உணவு கழகத்திலுள்ள கிடங்குகளில் அத்தனை லட்சம் உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கின்றன. அது 1960-களில் தொடங்கி இப்போது வரைக்கும் நடக்கும் விஷயம். கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 15 சதவிகிதம் கொள்முதல் செய்திருக்கிறோம் என்கிறார்கள். இது வருடா வருடம் நடப்பதுதான். உணவு உற்பத்தி, வருடா வருடம் உயர்ந்துகொண்டேயிருக்கும். அது உயரும்போது வாங்கிவைத்துக்கொள்கிறார்கள். நாங்கள்தான் செய்திருக்கிறோம். எங்களைத் தவிர வேறு யாரும் செய்யவில்லை என்று சொல்வதற்கு ஒன்றும் கிடையாது.''

டெல்லி விவசாயிகள் போராட்டம்

``ஏழு முதல் எட்டு சதவிகிதம் இருந்த விலையை 25 முதல் 35 சதவிகிதம் வரை உயர்த்திக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே..?''

`` `விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலையில் கொடுப்போம். வருமானத்தை இரண்டு பங்கு ஆக்குவோம்’ என்று கூறியதற்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். `அவர்கள் ஏழு சதவிகிதம் கொடுத்தார்கள். நாங்கள் இவ்வளவு கொடுத்தோம்’ என்று சொல்வதென்பது அவர்களைவிட நல்ல திருடன் என்பதைப் போலத்தான் இருக்கிறது.''

``எந்த மாநிலத்திலிருந்தும் மற்ற மாநிலங்களுக்கு விவசாயிகள் பொருள்களைக் கொண்டு சென்று, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்பது குறித்து..?''

``இரண்டு ஏக்கர் நிலத்தில் வரக்கூடிய 40 நெல் மூட்டைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் சென்று விற்பனை செய்வீர்களா... விவசாயிகள், தங்களின் சொந்த ஊர்களிலிருந்து முதலில் சென்னைக்கு எடுத்து வர முடியுமா... கீரை அல்லது பூ வியாபாரிகள் குறைந்த அளவிலான இடத்தில் பயிர்செய்பவர்கள், அருகில் இருக்கக்கூடிய நகரங்களுக்குச் சென்று விற்பனை செய்ய முடியும். மற்றவர்களெல்லாம் அப்படிச் செய்ய முடியாது. அப்போது அவர்களெல்லாம் வியாபாரிகளிடம்தான் சென்று கொடுப்பார்கள். விவசாயிகளெல்லாம் அவரவர் பொருள்களை அவரவர்களே விற்பனை செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை கோடி விவசாயிகளும் தலையில் கூடை வைத்துக்கொண்டு விற்பார்களா... இவையெல்லாம் வெறும் வாயால் பேசக்கூடியவை. தெருவில் வந்து விற்பனை செய்யக்கூடியவர்கள் யாராவது விவசாயிகளாக இருக்கிறார்களா?

விவசாயிகளே நேரடியாக விற்பனைச் சந்தையில்தான் விற்பனை செய்துவந்தார்கள். அதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால்தான். அப்படியிருக்கும்போது எத்தனை இடங்களில் உழவர் சந்தை இருக்கிறது, எத்தனை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்கிறார்கள், நாட்டிலுள்ள விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

``இந்த மூன்று சட்டங்கள் வருவதால் கடந்த காலங்களில் பின்பற்றக்கூடியவை எவையெல்லாம் அடிபடும், விவசாயிகள் எத்தகைய பிரச்னைகளைச் சந்திப்பார்கள்?’’

``விவசாயிகளுக்கு இதுவரை குறைந்த அளவிலான பாதுகாப்பு இருந்தது. அதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடையாது, எல்லா பொருள்களுக்கும் கிடையாது. அந்தக் குறைந்தபட்ச ஆதார விலையை நாங்களே வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லும்போது யாருக்குப் பாதுகாப்பு இருந்ததென்றால் நெல், கோதுமை விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு; அதுவும் சில இடங்களில் மட்டும்தான். அனைவருக்கும் கிடையாது. அரசுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்தப் பகுதியில் மட்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒரு குவிண்டாலை இத்தனை ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறோம் என்று அரசு சொல்லும். அரசைவிட தனியார் அதிக விலை கொடுக்கிறார்களென்றால் அங்கு கொடுத்துவிடலாம். விவசாயிகளின் இஷ்டம் அது. பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே... `யாரிடம் வேண்டுமாலும் விற்பனை செய்யலாம்’ என்று... இப்போதும்கூட யாரிடம் வேண்டுமாலும் விற்பனை செய்ய முடியும். இவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

அறுவடை காலகட்டத்தில் உற்பத்தியாகக்கூடிய நெல்லை வாங்கிக்கொள்ளுமாறு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருப்பார்கள். `கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கிறார்கள்’ என்று விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஏன் விவசாயிகள் அப்படிச் செய்கிறார்களென்றால், அவர்கள் சொல்லக்கூடிய விலை கிடைக்க வேண்டும் என்பதால்தான். தனியார் அந்த அளவுக்குக் கொடுக்க மாட்டார்கள். அதுதான் உண்மை நிலவரம். அந்த மாதிரி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டதுதான் குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்வது. அதற்கு முன்பெல்லாம் வியாபாரிகள் எதிர்பார்த்ததைவிட, அதிக அளவிலான பொருள்களை விவசாயிகளை கொண்டு வரும்போது, வியாபாரிகள் சொல்லும் குறைந்த விலைக்கு விவசாயிகள் பொருள்களைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது இது.

``மண்டி ராஜ்ஜியங்கள் என்பது அதிகமாக இருக்கின்றன. அவற்றை ஒழித்திருக்கிறோம் என்பதுதான் பா.ஜ.க-வின் கருத்தாக இருக்கிறதே..?''

``மண்டி ராஜ்ஜியத்தில் லைசென்ஸ் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்துவருகிறார்கள். அரசும் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்துவருகிறது. மண்டி ராஜ்ஜியமும் இருக்கிறது; குறைந்தபட்ச கொள்முதல் விலையும் செயல்பாட்டில் இருக்கிறது. வியாபாரிகளை ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டால், யார்தான் பொருள்களை வாங்க வருவார்கள்? மண்டிகள் என்பவை மாநில அரசுகளின் மேற்பார்வையில்தான் நடக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்

``மண்டி ராஜ்ஜியங்களுக்கு மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் சரியாகக் கொண்டு செல்லப்படுகின்றனவா?''

``சரியாகக் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைத் தாண்டி, அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரலாம். வியாபாரிகளின் பிடியை, தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `இந்தத் தேதிகளில் பொருள்களை ஏலத்தில் விடப்போகிறோம்’ என்று சொல்லி, `யார் வேண்டுமானாலும் பொருடள்களை வாங்கலாம்’ என்று அறிவிக்கலாம். ஆனால் அது போலவெல்லாம் செய்யவில்லை. பீகாரில் 2006-ம் ஆண்டே மண்டிகளை அகற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு அங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். பீகாரில் அவற்றை அகற்றியதன் விளைவாக, அங்கிருக்கும் விவசாயிகள் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்கிறார்களா... நினைத்த விலைக்கு விற்பனை செய்கிறார்களா... லாபம் பார்க்கிறார்களா... ஏற்கெனவே 17 மாநிலங்களில் மண்டிகள் இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. அங்கிருக்கும் விவசாயிகளின் நிலவரம் என்ன... அதற்கு உண்டான சான்றுகள் இருக்கின்றனவா?’’

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்- இறங்கி வருமா மோடி அரசு?

``மத்திய அரசு கீழிறங்கி வந்து ஏதாவது செய்யும் என்று நினைக்கீறீர்களா?’’

``இல்லை... நான் அப்படி நினைக்கவில்லை. அரசு வலிமையாக இருக்கிறது. இவர்கள் சரியான விவாதத்தை நடத்தி அனைவருக்கும் புரியவைத்த்ருந்தால் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்திருக்காது. ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியபோது பலகட்ட பேச்சுவார்த்தைகள், சட்டத் திருத்தங்கள் செய்த பின்னர் அது அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை எதையுமே அரசு செய்யவில்லை. நாடாளுமன்றக்குழுவுக்கு அனுப்பாமல், விவாதிக்காமல் அவசரகதியில் கொண்டு வந்ததன் விளைவுதான் இந்த விவசாயிகளின் போராட்டம்.''

`` `விவசாயிகள் இந்தச் சட்டத்தின் மூலமாகப் பயனடைவார்கள்; வரக்கூடிய நாள்களில் அதன் பயன் விவசாயிகளுக்குக் கிடைக்கும்’ என்று மோடி குறிப்பிடுகிறாரே..?''

`` `பொருளாதாரம் இப்போது ` -24’ என்கிற அளவில் இருப்பதும் எங்களின் முயற்சியால்தான்’ என்றுகூடச் சொல்வார்கள். `நாங்கள் இல்லையென்றால் `-50’-ல் சென்றிருக்கும்’ என்பார்கள். எது நடந்தாலும் `எங்களால்தான்’ என்பார்கள். அதற்கு ஆமாம் சொல்ல பல பேர் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலே சொல்ல முடியாது.’’

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

`` `விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்பது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த பித்தலாட்டம்’ என்று பா.ஜ.க-வினர் குறிப்பிடுகிறார்களே..?’’

`` `விவசாயிகள் கடனில் இருக்கிறார்கள்’ என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தற்போது கொடுக்கப்படும் விலை கட்டுப்படியாகவில்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதனால்தான் கடன் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று நாம் சொல்கிறோம். அதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பது நமது விருப்பம். அதை அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வதற்கு, பதில் சொல்ல முடியாது.’’

`` `அந்தத் தீர்வுக்குத்தான் இந்தச் சட்டங்களைக் கொண்டு வருகிறோம்’ என்கிறார்களே ஆளும் தரப்பினர்?’’

``தீர்வுகள் என்பதை இவர்கள் எதில் காட்டுகிறார்களென்றால், கற்பனை உலகத்தில் காட்டுகிறார்கள். உருவாக்க முடியாத ஒன்றைக் குறித்துப் பேசிவருகிறார்கள். எல்லா இடங்களிலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட்டுவருகிறது. கட்டுப்பாடற்ற சந்தை என்று எங்கும் இல்லை. ஆனால் இவர்கள் அதைத்தான் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இதற்கான தீர்வுகளை இவர்களுக்குச் சொல்லியெல்லாம் புரியவைக்க முடியாது!’’



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/jayaranjan-interview-on-farmers-bill-and-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக