Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

எம்.ஜி.ஆரை வீழ்த்திய இரட்டை இலை ; 1977 சட்டமன்றத் தேர்தல்... தாராபுரம் தொகுதியில் நடந்தது என்ன?

அரசியல் கட்சிகளின் உயிர்நாடியே தேர்தல் சின்னம்தான். கட்சியைவிட, தலைவர்களை விட, கட்சியின் சின்னத்தை மக்களின் மனத்தில் ஆழமாகப் பதித்துவிட்டன அரசியல் கட்சிகள். தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வலுவான ஆயுதமாக தங்களின் சின்னத்தைத்தான் நம்புகின்றன. எதிர்க் கட்சிகளின் சின்னத்தையொத்த சின்னங்களில் வேண்டுமென்றே பல வேட்பாளர்களை நிறுத்தி அவர்களுக்குச் சேரும் வாக்குகளைச் சிதறடிக்கின்றன. அந்தளவுக்கு சின்னம் மீதான மக்களின் பிணைப்பு யாராலும் பிரிக்க முடியாததாக இருக்கிறது.

சின்னங்கள்

தங்களின் சின்னத்தை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்கிற முயற்சியில், ஒரு அரசியல் தலைமை சிறை சென்ற கதையை, நம் சமகாலத்திலேயே பார்த்திருக்கிறோம். அந்தளவுக்கு கட்சி விசுவாசம், தலைவர்கள் மீதான விசுவாசத்தை விட, சின்ன விசுவாசம் என்பது நம் மக்களிடையே வலுவாக அடித்தளமிட்டிருக்கிறது. மாற்றத்தை முன்வைத்து புதிதாக வரும் கட்சிகள் அதைத் தகர்க்க முடியாமல் திணறுகின்றன. அதனால்தான், 'ஒரு கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னம் வழங்க வேண்டும். இல்லை, நம்பர் சிஸ்டத்தைக் கொண்டு வரவேண்டும்'' என்கிற கோரிக்கைகளை முன்வைக்கின்றன.

இப்படித் தேர்தல் அரசியலின் நட்சத்திரமாக விளங்கும் சின்னம், தன் எதிரிகளை மட்டுமல்லாது சொந்தக் கட்சியை, அந்தச் சின்னத்தை நாடெங்கும் கொண்டு சென்ற தலைவனையே வீழ்த்திய வரலாறு தெரியுமா...வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

1977...தமிழகத்தின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல். எம்.ஜி.ஆர் அ.தி.மு.க எனும் கட்சியை ஆரம்பித்து, அவர் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல். தமிழகமெங்கும் சூறாவளியாகப் பிரசாரம் செய்து வருகிறார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே, திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலிலும் 1974-ல் கோவை மேற்குத் சட்டமன்றத் தேர்தலிலும் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னம், அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ சின்னமாகி விட்டது. தான் செல்லும் இடங்களில் எல்லாம், இரண்டு விரல்களைக் காட்டி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், ஒரேயொரு தொகுதியில் மட்டும் ''இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள், சிங்கம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்'' என பிரசாரம் செய்கிறார். ஆனால், எம்.ஜி.ஆரின் பேச்சையும் மீறி மக்கள் இரட்டை இலைக்குத்தான் வாக்களிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஆதரித்து வாக்கு சேகரித்த வேட்பாளர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படுகிறார். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரைவிட, 2,682 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறுகிறார். அந்தத் தொகுதி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம். எம்.ஜி.ஆர் சிங்கம் சின்னத்தில் ஆதரித்து வாக்கு கேட்ட வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணன். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர், ஆர்.அய்யாசாமி.

அப்போது என்ன நடந்தது?

பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

''தாராபுரம் தொகுதியில் முதலில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டது அய்யாசாமி என்பவரைத்தான். அவருக்கு கட்சித் தலைமையில் இருந்து, ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி அனுப்பப்பட்டது. அவர் அதைவைத்து வேட்புமனு தாக்கலையும் செய்துவிட்டார். ஆனால், ஏதோ முரண்பாட்டின் காரணமாக, எம்.ஜி.ஆர் அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்தார். ஆனால், அய்யாசாமியும் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டது. எம்.ஜி.ஆரால் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம்தான் கிடைத்தது. எம்.ஜி.ஆர் இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்தார். ஆனால், மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அய்யாசாமியை வெற்றிபெற வைத்தனர் என்பதே வரலாறு''

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜானகி

இந்தச் சம்பவம் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஜா அணி, ஜெ அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி முதல்வரானார். ஆனால், அவரின் ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.கவினர் இரு அணிகளாகவே போட்டியிட்டனர். இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்பட்டு, அ.தி.மு.க(ஜா) அணிக்கு, இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. அந்தத் தேர்தலில், ஜெ.அணி 27 இடங்களிலும் ஜா அணி 2 இடங்களில் என மொத்தம் 29 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றன. தி.மு.க 150 இடங்களை வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு, தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதுதான் பிரதான காரணமாகச் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா ஆளுமைமிக்க தலைவராகப் பார்க்கப்பட்டாலும், இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. பிறகு இரண்டு அணிகள் இணைந்தன. இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடந்த 91 தேர்தலில்,164 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது அ.தி.மு.க.

Also Read: 50 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்தை இழக்காத தி.மு.க... உதயசூரியன் உருவாகி நிலை கொண்டது எப்படி? #OnThisDay

கே.சி.பழனிசாமி முன்னாள் எம்.பி

''அ.தி.மு.கவின் உயிர்நாடியே இரட்டை இலைதான். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக வலிமையான சின்னமும் இரட்டை இலைதான். எம்.ஜி.ஆரின் வலிமையே இரட்டை இலையின் மூலமாகத்தான் பிரதிபலிக்கிறது. இன்று, எடப்பாடி பழனிசாமி என்றில்லை கே.சி.பழனிசாமி அ.தி.முகவின் தலைவரானாலும் கூட கட்சியின் சின்னமாக இரட்டை இலை இருந்தால் போதும். எங்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டால்கூட, சின்னம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம்தான் எங்கள் நிர்வாகிகள் போவார்கள். காரணம் இரட்டை இலைக்குத்தான் வாக்குக் கிடைக்கும் என்பது எங்கள் நிர்வாகிகளுக்குத் தெரியும். இரட்டை இலைச் சின்னம்தான் எம்.ஜி.ஆரின் கட்சி என்பது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அ.தி.மு.கவின் முக்கியப் பிரமுகர்கள் பலர் தி.மு.கவுக்குப் போய் தோற்றுப் போகக் காரணம், மக்கள் அவர்களின் முகத்தைப் பார்த்து வழக்கம்போல இரட்டை இலைக்கு வாக்களித்து விடுவார்கள்''

கே.சி.பழனிசாமி

அரசியல் விமர்சகர்களின் கருத்து ;

''ஒரு தலைவருக்காக, அவரின் மீதான விசுவாசத்தின் காரணமாக ஒரு சின்னத்துக்கு வாக்களிப்பது என்பது அந்தக் கட்சிக்கு வேண்டுமானால் சாதகமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், பொதுவாக, அப்படிப் பார்க்க முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் முன்வைக்கின்ற திட்டங்கள். கொள்கைகள் ஆகியவற்றைப் பார்த்து வாக்களிக்காமல் கண்மூடித்தனமாக வாக்களிப்பது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. மக்கள் நலனுக்கு எதிரானது. ஒரு தலைவர் அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார் என்று வைத்துக்கொண்டாலும், அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் அவர் மீதான நம்பிக்கைக்கு வாக்களிப்பது என்பது எப்படிச் சரியாக இருக்கும். தற்போது அந்தக் கட்சி என்ன திட்டத்தை, கொள்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பார்த்து வாக்களிப்பதுதானே சரியாக இருக்கும். இது அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற அனைத்துக் கட்சிக்கும் சின்னத்துக்கும் பொருந்தும். தேர்தல் சீர்த்திருத்தங்கள் குறித்து நாம் பலகாலமாகப் பேசிவருகிறோம். அதில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் கவனிக்க வேண்டிய ஒன்று'' என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/two-leaf-drooping-mgr-in-1977-assembly-election-what-happened-in-dharapuram-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக