வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டத்துக்குட்பட்ட ராஜா தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அணை நிரம்பியிருப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ராஜா தோப்பு அணையை பார்வையிட்டு மலர் தூவி வணங்கினார். அப்போது, அணையிலிருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரை கால்வாய் மூலம் ஏரிகளில் நிரப்பும் பணிகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கீழ்ஆலத்தூர் ஏரியில் நீர் நிரப்பும் பணியையும், நெல்லூர்பேட்டை பெரிய ஏரி, எர்த்தாங்கல் ஏரி, செட்டிக்குப்பம் ஏரி நிரம்பியதையும் பார்வையிட்டு மலர் தூவினார். இதையடுத்து, இறைவன்காடு ஏரி மற்றும் மேல்மொணவூர் பெரிய ஏரி, கடப்பேரியில் நீர் நிரம்பியதையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ஏரிகளிலும், கால்வாய் ஓரங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சண்முகசுந்தரம், ‘‘நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் மோர்தானா அணை நிரம்பியதுடன் கௌண்டன்ய நதி, பாலாறு, பொன்னை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ராஜா தோப்பு அணை, மோர்தானா இடதுபுற கால்வாய் மூலம் பாசனம் பெறும் ஏரிகள், பொன்னை அணைக்கட்டு மேற்குபுற கால்வாய் மூலம் பாசனம் பெறும் 18 ஏரிகள், வேலூர் மாநகராட்சிக்கு நீர் ஆதாரமாக உள்ள சதுப்பேரி மற்றும் செதுவாலை உள்ளிட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 101 ஏரிகளில் 44 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மீதமுள்ள ஏரிகளுக்கு ஆற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டு சென்று நிரப்பும் பணிகளில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுவருகிறார்கள். குடிமராமத்து மற்றும் நீர் மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், 50 சதவிகித ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ளது. இதனால், நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இதுவரை இயங்காமல் இருந்த ஆழ்துளை கிணறுகள் இயங்கி அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ள வீடுகள் மற்றும் குடிசைகளை அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்படும்’’ என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/vellore-collector-inspection-on-dams-and-lakes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக