Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

புதுச்சேரி: `ஏற்கெனெவே நிறைய குழப்பம்..!’ - ரஜினி, கமல் குறித்த கேள்விக்கு கலகலத்த பார்த்திபன்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் நிறுவனம் இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கு நாடகத் தந்தை ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி இரவு அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் துவங்கியது.

விருதை வழங்கும் அமைச்சர் ஷாஜகான்

அப்போது கடந்த 2019-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நடிப்பில் வெளியான ’ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. விருதுக்கான பாராட்டு பத்திரத்தையும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும் நடிகர் பார்த்திபனுக்கு வழங்கினார் அமைச்சர் ஷாஜகான். தொடர்ந்து விழா மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன், “விழாவின் துவக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றும்போது பல தீக்குச்சிகள் அணைந்தன. ஒரு விளக்கை ஏற்றுவதற்கு பல குச்சிகள் தேவைப்படுகிறது. அப்படித்தான் தோல்விகளில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

அதனால் தோல்விகளால் துவண்டு தற்கொலை போன்ற முடிவுகளுக்கு செல்லக் கூடாது. ரஜினி காந்த் கட்சி அறிவிப்பதற்கு முன் புதிய காட்சிகள் துவங்கும் நேரம் என நான் ட்வீட் செய்திருந்தேன். பலரும் புதிய கட்சிகள் துவங்கலாம். விஜய் கூட அரசியலுக்கு வருகிறார் எனக் கூறினார்கள். நானும் ஒரு கட்சியை துவங்கலாம் என நினைக்கிறேன். கட்சியின் பெயர் `புதிய பாதை’ என்று குறிப்பிட்ட அவர், பின்னர் அதை காமடி என்று கூறினார். ரொம்ப கூலாக இருந்தால் எப்போதுமே ஜெயிக்க முடியாது. கஷ்டப்பட்டுதான் ஜெயித்தேன். நடிக்க ஆசைப்பட்டுதான் திரைத்துறைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து வீட்டுக்கு சென்றுவிடாமல், இயக்குநர் பாக்கியராஜிடம் உதவியாளரானேன்.

ஒத்த செருப்பு திரைப்படம்

அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த காலத்திலும் ஒத்த செருப்பு போன்ற படங்களை எடுக்கலாம் என்று எனக்கு தோன்றியதற்குக் காரணமே எனது தோல்விகள்தான். நிறைய இளைஞர்கள் தோல்வியில் துவண்டு, தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர். அதுவும் குறிப்பாக திரைப்படம் மற்றும் சீரியல் நடிகைகள் ஏதோவொரு பாதிப்புக்குள்ளாகி அந்த முடிவை நோக்கிச் செல்கின்றனர். காதல் என்பது ஒன்றுமில்லை என்பது புரிய கொஞ்சம் வயசாகும். அதை காதலித்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும். துவண்டுவிடாமல் முயற்சி செய்யுங்கள். ரசிகர்களின் ரசனைதான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது.

உண்மையில் எனக்கு தன்னம்பிக்கையை வளர்த்தது எனது தந்தைதான். துவக்கத்தில் எனக்கே என் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் திரைத்துறையில் வெல்வேன் என அப்பா நம்பினார். நிறைய அப்பாக்களின் கனவு, தன் குழந்தையை உயரத்தில் பார்க்க ஆசைப்படுவதுதான். உண்மையில் என் பூஜை அறையில் இருக்கும் ஒரே சாமி படம் என் அப்பாவின் படம்தான். சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றாலும் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு கலையின் மேல் ஈடுபாடு இருந்தது. சினிமா மீதான ஆர்வம் என்பது மிகப்பெரிய விஷயம். சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்று நல்லது செய்தவர்கள் நிறைய பேர் உண்டு. அதேபோல இவர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ என சிலர் பயப்படவும் வைக்கிறார்கள்.

Also Read: `அவர் கட்சித் தொடங்கி இருவரும் இணையட்டும்; அப்புறம் பேசலாம்!' - ரஜினி, கமல் குறித்து கனிமொழி

புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் மிக குறைவாக இருந்தது. தற்போது அது அதிகமாக இருக்கிறது. அதை குறைக்க வேண்டும். அதன் மூலம் நிறைய படப்பிடிப்பு நடக்கும். அடுத்து "இரவின் நிழல்" திரைப்படத்தை ஒரே ஷாட்டில் இயக்குகிறேன். ஆஸ்கரை குறிவைத்துதான் இயக்குகிறேன்” என்று கூறியவரிடம் அரசியலில் ரஜினியுடன் இணைவதற்கு தயார் என்று கமல் கூறியிருக்கிறாரே என்று கேள்வியெழுப்பிய நிருபர்களுக்கு, "ஏற்கெனவே நிறைய குழப்பம். இதில் நான் வேறு சொல்லி குழப்ப வேண்டுமா? யாருக்கு வாக்களிப்பது என்று மக்களும் குழப்பமாகத்தான் இருக்கிறார்கள். திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிற்பபான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை. எனக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/cinema/puducherry-already-a-lot-of-confusion-parthiban-comment-on-rajini-kamal-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக