Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

`ரசாயன தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடுங்கள்!’ - வெகுண்டெழுந்த ராணிப்பேட்டை மக்கள்

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள பல்வேறு ரசாயன தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும் நீர் நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை நகரமே உருக்குலைந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது. சிப்காட் பகுதியிலுள்ள திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம், மல்லாடி ட்ரக்ஸ் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான இரண்டு மத்தியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 நிறுவனங்கள்தான் சூழல் மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணம் என்கிறார்கள், சூழலியல் ஆர்வலர்கள்.

புகாருக்குள்ளான நிறுவனம்

இந்த நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கச் செய்யும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையப் பகுதியில், பல்வேறு அமைப்பினர் திரளாகக் கூடினர். இதில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அருள்ராமன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோபி சத்தியராஜன், புளியங்கண்ணு ஜெயச்சந்திரன், விவசாயிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜைச் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், ‘‘ராணிப்பேட்டையில், 1963-ம் ஆண்டு வரை விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாக இருந்தது. அதன்பின்னர், ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள காரை, வானாபாடி, மணியம்பட்டு, நரசிங்கபுரம், முகுந்தராயபுரம் ஆகிய 5 ஊர்களில் 710 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.

கலெக்டரிடம் மனு கொடுத்தபோது...

இந்த தொழிற்பேட்டையில் கெமிக்கல், மருந்து உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளே அதிகமாக செயல்பட்டுவருகின்றன. தொழிற்சாலைகளுக்குத் தேவையான பெரும் கொள்ளளவிலான தண்ணீர் பாலாறு மற்றும் பொன்னையாறு சங்கமிக்கும் நவ்லாக் பகுதியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன நச்சு கழிவுநீர் அருகிலிருக்கிற நீர் ஆதாரங்களில் கலக்கிறது.

இதனால், நீராதாரங்கள் மிகக் கடுமையாக பாதிப்புக்குள்ளாவதுடன் நிலத்தடி நீரும் மோசமாகியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ராணிப்பேட்டை பகுதியை மிக மோசமான பகுதியாக வகைப்படுத்தியுள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறு, தோல் நோய், சுவாச கோளாறு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எனவே, நிலம், நீர், காற்று ஆகியவற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாகவும், சுகாதார சீர்கேடுகள் தொடர்பாகவும் உரிய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டுவரும் திருமலை கெமிக்கல்ஸ், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மல்லாடி ட்ரக்ஸ் ஆகிய தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், தொழிற்சாலை நிர்வாகிகள்மீது குற்ற வழக்கு பதிவுசெய்து சுற்றுச்சூழல் சீர்கேடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான இழப்பீட்டுத் தொகையையும் அபராதமாக வசூலிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/chemical-factories-must-be-closed-permanently-petition-to-ranipet-collector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக