சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவரின் மகள் நடிகை சித்ரா (29). இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நடிப்பதற்காக நடிகை சித்ரா, அதே பகுதியில் பெங்களூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எண் 113-ல் தங்கியிருந்தார்.
இன்று அதிகாலையில் நடிகை சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஹோட்டலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நசரேத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீஸார் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு நடிகை சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து நசரேத்பேட்டை போலீஸார் கூறுகையில், ``நடிகை சித்ராவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்திருக்கிறார். அப்போது அவரின் வருங்கால கணவரும் தொழிலதிபருமான ஹேமந்த் ரவியுடன் அந்த அறையில் தங்கியிருந்திருக்கிறார். குளிக்க செல்கிறேன், அதனால் ஹேமந்த் ரவிவை வெளியில் செல்லும்படி நடிகை சித்ரா கூறி விட்டு அறைக்கதவை பூட்டியிருக்கிறார். அதனால் ஹேமந்த் ரவி, வெளியில் காத்திருந்தார்.
இந்தச் சமயத்தில் நீண்ட நேரமாகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர் கணேஷ் என்பவரிடம் தகவலைத் தெரிவித்தார். மாற்று சாவி மூலம் அறைக் கதவை திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து ஹேமந்த் ரவிஅதிர்ச்சியில் உறைந்தார். பிறகுதான் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் சில மாதங்களுக்கு முன்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்தச் சமயத்தில்தான் நடிகை சித்ரா தற்கொலை செய்திருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்த நடிகை சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்துவருகிறோம். ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது. புடவையால் நடிகை சித்ரா தூக்குப் போட்டதால் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் அவரின் முகத்தில் காயங்கள் உள்ளன. அது, நகக்கீறல் போல இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. நடிகை சித்ரா தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியிருக்கிறோம். அவரின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பிறகுதான் அவரின் இறப்பு குறித்த தகவல் தெரியவரும்" என்றனர்.
நடிகை சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சில தகவல்களைக் கூறியிருக்கிறார். அதில் சில தினங்களாக நடிகை சித்ரா மனஅழுத்ததில் இருந்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகை சித்ரா குறித்து அவருக்கு நெருங்கிய சின்னத்திரை நடிகைகள் சிலரிடம் பேசினோம்.``நடிகை சித்ரா, 2013-ம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமனார். பிறகு சில தனியார் டிவி-க்களில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றினார். வி.ஜே சித்து என்ற பெயரில் அறிமுகமானவர். அதன்பிறகுதான் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். அதன்பிறகுதான் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கலகலப்பாக பேசக்கூடியவர். கொரோனா காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. திருமணக் கோலத்தில் அவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில் எங்களுக்கு அவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.
Also Read: காதல் தோல்வியால் மனமுடைந்த சீரியல் நடிகை தற்கொலை!
நடிகை சித்ரா டிக்டாக்கில் ஆக்டிவ்வாக இருந்தார். நிச்சயதார்த்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலை தள பக்கங்களில் பதிவு செய்திருந்தார். அவரின் சமூகவலைதள பக்கத்தில் தன்னை தொகுப்பாளர், டான்ஸர், நடிகை என நடிகை சித்ரா குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப்பிறகே நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/tv-serial-actress-chitra-commits-suicide-police-enquiry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக