Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

`கமலைத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஆளுநர்?!' - சூரப்பா விவகாரத்தில் தொடரும் சர்ச்சை

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் அரசுக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதம், விவாதப் பொருளாக மாறியுள்ளது. ` தன் மீது எந்தத் தவறும் இல்லையென்றால் ஆவணங்களை ஒப்படைக்க சூரப்பா மறுப்பது ஏன்... சூரப்பாவுக்கு ஆளுநர் ஆதரவு தெரிவித்தாலும் கமல் ஆதரித்தாலும் எங்கள் கேள்வி இதுதான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் புகார் வந்துள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த சூரப்பா, `பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா அளவுக்குக்கூட நான் முறைகேடு செய்ததில்லை' என்றார்.

இதனை வரவேற்ற கல்வியாளர்களும், ` தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சூரப்பா விசாரணையைச் சந்திக்க வேண்டும்' என்றனர். சூரப்பா விவகாரம் தொடர்பாக, கலையரசன் குழு விசாரணையைத் தொடங்கிவிட்டது. ஆனால், சூரப்பா தொடர்பான ஆவணங்களை விசாரணைக்குழு கேட்டும் ஒப்படைக்காததால் பதிவாளர் கருணாமூர்த்தியை நேரில் ஆஜராகுமாறு விசாரணைக் குழு சம்மன் அனுப்பிள்ளது. இதையடுத்து, கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்.

Also Read: `சந்தோஷ் பாபு, சகாயம் வரிசையில் சூரப்பாவா?!'- கமல் கருத்தால் கொதிக்கும் கல்வியாளர்கள்

அதேநேரம், சூரப்பா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், `அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்தவர், வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின் முன் நெளிந்து கொடுக்காதவர். தமிழகத்தில் பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்... வளைந்து கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்... எவரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு எழுதிய மொட்டைக் கடுதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாக பல்கலைக்கழகத்தில் தங்கியவர்கள், அங்குள்ள வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களை விசாரித்துவிட்டீர்களா?' எனக் கோபத்தைக் காட்டியிருந்தார்.

சூரப்பா

கமலின் கோபத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தமிழக அரசுக்கு 5 பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், `துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர். அவர் துணைவேந்தர் பொறுப்பை நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருகிறார்' எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரே, இப்படியொரு கடிதம் எழுதியிருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். `` ஆளுநர் கடிதம் எழுதியிருப்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. சூரப்பா விவகாரத்தில் விசாரணை எதற்கு எனச் சிலர் பேசி வருகிறார்கள். அவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். இதே விசாரணை இன்னொருவர் மீது நடந்திருந்தால் இதேபோல் ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பார்களா?... ஒருவர் மீது சந்தேகம் எழுவதால்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. அவ்வாறு சந்தேகம் வருவதற்கு ஒரு கடிதம் காரணமாக இருக்கிறது. அரசு இயந்திரத்தில் பலம் பொருந்தியவர்கள் மீது புகார் கொடுக்கப்படும்போது, புகார்தாரரின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. எனவே, அந்தக் கடிதம் குறித்து கேள்வி எழுப்புவது சரியானதல்ல.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தன் மீது குற்றமில்லை என்றால், விசாரணையை எதிர்கொண்டு குற்றமற்றவர் என சூரப்பா நிரூபிக்கட்டும். இதன் ஒருபகுதியாக, தன்னிடம் உள்ள ஆவணங்களை கலையரசன் கமிட்டியில் துணைவேந்தர் கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் ஆவணங்களைக் கொடுத்திருந்தால் இதுபோன்ற கேள்விகள் வந்திருக்காது. விசாரணையே வேண்டாம் எனக் கூற வேண்டிய அவசியம் என்ன.. துணைவேந்தராக ஒருவர் பொறுப்புக்கு வரும்போது, அந்தப் பல்கலைக்கழகத்தில் எத்தனை பாடப்பிரிவுகள் இருக்கிறதோ, அதற்கு நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்காமல் செயல்படும்போதே ஊழல் தொடங்கிவிடுகிறது. அவருடைய பணிக்காலத்தில் எத்தனை காலிப் பணியிடங்கள் இருந்தன, தற்காலிக ஆசிரியர்களாக எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும். அதைவிடுத்து, துணைவேந்தருக்கு எதிராக யார் கடிதம் எழுதினாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனச் சொல்வது எந்தவகையில் சரியானது எனத் தெரியவில்லை" என்றார் கொதிப்புடன்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/governor-banwarilal-purohit-letter-to-tn-government-regarding-surappa-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக