கடந்த 2018-ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுள் ஒன்றாக அமைந்தது எட்டு வழிச் சாலை திட்டம். இந்தத் திட்டத்துக்காக 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. சுமார் 277.3 கி.மீ நீளம் கொண்ட இந்த எட்டு வழிச் சாலைக்காகச் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதைத் தொடர்ந்து பலரும் இந்தத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். பலகட்ட விசாரணைகளுக்குப் பின்னர், எட்டு வழிச் சாலை தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
எட்டு வழிச் சாலை திட்டம் தொடங்கியதிலிருந்து தற்போதைய தீர்ப்பு வரை என்ன நடந்தது என்பதன் தொகுப்பை இங்கே காணலாம்.
பிப்ரவரி 2018
மத்திய அரசு அறிவித்த `பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக 10,000 கோடி ரூபாயையும் ஒதுக்கியது மத்திய அரசு.
மார்ச் 2018
Also Read: பசுமைவழிச் சாலை – முழு ஆவணப்படம் | Vikatan TV
ஜூன் 2018
``எட்டு வழிச் சாலை திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன் கீழ் கையகப்படுத்தப்படும்'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், ``புதிய நில எடுப்பு சட்டத்தின்படி நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்'' எனவும் முதல்வர் அறிவித்திருந்தார்.
நகர்ப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைவிட 2 மடங்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைவிட 2.5 மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், சமூக செயல்பாட்டாளர்கள், நில உரிமையாளர்கள் உள்படப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் விவசாயிகள் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இந்தத் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 2018
தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளியப்பேட்டையில், எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படவிருந்த நிலத்தின் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பால பாரதி. அப்போது விவசாயிகளைப் போராடத் தூண்டியதாகக் கூறி பால பாரதியைக் கைது செய்தது காவல்துறை.
செப்டம்பர் 2018
எட்டு வழிச் சாலை திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அறிக்கை அனுப்பியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக நில உரிமையாளர்கள், பூவுலகின் நண்பர்கள், வழக்கறிஞர் சூரிய பிரகாஷம், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
எட்டு வழிச் சாலை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்.
ஏப்ரல் 2019
ஏப்ரல் 8-ம் தேதி இந்த திட்டத்துக்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். அதோடு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
மே 2019
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஜூன் 2019
இந்த வழக்கு ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. எட்டு வழிச் சாலை திட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்து மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
ஜூலை 31, 2019
எட்டு வழிச் சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
ஆகஸ்ட் 7, 2019
எட்டு வழிச் சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
அக்டோபர், 2020
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ``இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர் மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Also Read: `ரூ.971 கோடி; 543 எம்.பிக்களுக்கு 888 இருக்கைகள் ஏன்?’ - புதிய நாடாளுமன்றம்... சுவாரஸ்யத் தகவல்கள்
டிசம்பர் 2020
நேற்று (டிச.8) உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்பது உறுதியாகிறது.
அந்தத் தீர்ப்பில், ``சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்" என்றும் குறிப்பிடபப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/timeline-of-salem-chennai-8-way-green-road-project
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக