Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

டெல்லி: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... குவியும் ஆதரவும் எதிர்ப்பும்!

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராகக் கடந்த பதினெட்டு நாள்களாகத் தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அரசுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதோடு, டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் வருவதால் அவர்களை வரவிடாமல் தடுக்க மாநில எல்லைகளில் தடுப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டமும் பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, பல்வேறு தரப்பிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவு பெருகிவருகிறது. அதேவேளையில் போராட்டத்துக்கு எதிராகப் பலரும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

கனடாவில் குருநானக் ஜயந்தியையொட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்துச் செய்திகள் வருகின்றன. நாங்கள் அனைவரும் போராட்டச் சூழல் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலருக்கும் அப்படித்தான் இருக்கும். இங்கு ஒன்றை நான் சொல்லிக்கொள்கிறேன்... அமைதியாக நடக்கும் போராட்டங்களின் உரிமையை நிலைநாட்ட, கனடா என்றுமே துணைநிற்கும்" என்று பேசினார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ``இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரின் இந்தக் கருத்து, இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளியுறவுத்துறை சார்பில் இந்தக் கருத்துக்கு விளக்கம் கேட்டு கனடா தூதருக்கு நோட்டீஸும் தரப்பட்டிருக்கிறது.

Also Read: விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை... நடிகை கங்கனா மீது வழக்கு!

விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்த குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவில்லையென்றால், தனது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைத் திருப்பி அளிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். மேலும், தேசிய முன்னாள் குத்துச் சண்டை பயிற்சியாளர் குர்பாத் சிங் தனது துரோணச்சார்யா விருதைத் திருப்பி அளிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் மல்யுத்த வீரர் கர்த்தார் சிங் தனது அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும், முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர் சஜ்ஜன் சிங் சீமா, ஹாக்கி விளையாட்டு வீரர் ராஜ்வீர் கௌர் ஆகியோர் தங்களின் அர்ஜூனா விருதுகளையும் திருப்பித் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜக்கார் விவசாயிகளின் போராட்டத்தில் துணை நிற்க வேண்டும் என்பதற்காகத் தன்னைp பணியிலிருந்து விடுவிக்குமாறு மாநில உள்துறை செயலாளருக்கு விண்ணப்பக் கடிதத்தை அளித்துள்ளார். தனது பணி முடிய இன்னும் காலம் இருக்கும் நேரத்தில் அவர் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க முன்வநதிருக்கிறார்.

இந்தநிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ``புதிய வேளாண் சட்டத்தில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி வழிநடத்தாவிட்டால் விவசாயிகள் இந்தச் சட்டத்தின் மூலம் நன்மை உண்டாகும் என்பதை ஏற்பார்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும், மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இது போன்ற கருத்துகளையும் முன்வைத்துவருகிறார்.

உத்தவ் தாக்கரே

இந்தக் கருத்துக்கு பதில் கூறிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ``நமக்காக உணவு வழங்குபவர்களை நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்வதா... விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று கூறும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கத் தகுதியற்றவர்கள்" என்று கூறியிருக்கிறார்.

Also Read: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா! - யார் இந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்?

நாடாளுமன்றத்தில் வேளாண் திருத்தச் சட்ட மசோதா கொண்டுவரும்போது, அப்போதைய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், இந்த மசோதாவுக்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். மேலும், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அறிவித்திருந்தார். தான் அறிவித்ததுபோலவே சிறிது நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ``விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். விவசாயிகள் மகளாகவும் சகோதரியாகவும் இருப்பதில்தான் எனக்குப் பெருமை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஹர்சிம்ரத் கௌர் பாதல்

தொடர்ந்து நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தார்கள். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இன்று முதல் 'கிசான் சம்மேளன்' என்ற விழிப்புணர்வு கூட்டம் விவசாயிகளுக்கு நடத்தப்படும் என்று பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் நடந்துவரும் போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து தனது ஆதரவைத் தெரிவித்துவருகிறார். மத்திய அரசு கொடுக்கும் அழுத்தங்களுக்குத் தனது அரசு வளைந்து கொடுக்காததால், மத்திய அரசு அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாகத் தானும் பங்கேற்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/delhi-farmers-protest-getting-stronger-support-as-well-as-oppose

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக