சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
கோலியின் பெங்களூர் அணியில் இருக்கும் போது ரன்கள் அடிக்காத வீரர்கள் அனைவரும் மற்ற அணிகளுக்கு செல்லும் போது வெளுத்துவாங்குவது என்பது எப்போதும் நடைபெறக்கூடிய இயல்பான விஷயம். இந்தப் போட்டியிலும் அப்படியொரு சம்பவம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் இளம் பேட்ஸ்மேனும், கோலியின் ஆர்சிபி அணியில் இடம்பிடித்தவருமான ஜோஸ் பிலிப்பே இந்தப் போட்டியில் 95 ரன்களை எடுத்து மிரட்டினார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல்-ல் பெங்களூர் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்து ஓப்பனராக களமிறங்கிய பிலிப்பே எப்படி சொதப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நேற்று சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக களமிறங்கி அதிரடி காட்டி 95 ரன்களை எடுத்தார். அதன்பிறகு, போஸ்ட் மேட்ச் ப்ரசன்ட்டேஷனில் கோலியையும் ஆர்சிபியையும் நினைவுகூர்ந்து பிலிப்பே பேசியதுதான் ஹைலைட்.
டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணியின் கேப்டன் ஃபின்ச் பௌலிங்கை தேர்வு செய்தார். சிட்னி சிக்சர்ஸ் அணியின் சார்பாக பிலிப்பேவும், எட்வர்ட்ஸும் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஹேட்ஸூக்ளு வீசிய இரண்டாவது ஓவரிலேயே எட்வர்ட்ஸ் ஒரு ரன்னில் எல்பிடள்யு ஆகி வெளியேறினார். முதலில் பிலிப்பேவும் கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று தடவை எட்ஜ்ஜாகி தப்பித்து பவுண்டரிகளை எடுத்துக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வின்ஸி கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். ஆனால், அவராலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. வின்ஸி 6-வது ஓவரில் ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சில் எட்ஜ்ஜாகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு பிலிப்பேவும் கேப்டன் டேனியல் ஹூயூஸும் கூட்டணி போட்டனர். இந்தக் கூட்டணிதான் அணியை சரிவிலிருந்து மீட்டது.
வெப்ஸ்டர் வீசிய 7-வது ஓவரில் அவரிடமே ஒரு கேட்ச்சை கொடுத்தார் பிலிப்பே. ஆனால், வெப்ஸ்டர் அந்த சுலபமான கேட்சை தவறவிட்டுவிடுவார். அதன்பிறகு, பிலிப்பேவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 9-வது ஓவரிலிருந்து ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தியது இந்தக் கூட்டணி.
36 பந்துகளில் அரைசதம் கடந்தார் பிலிப்பே. 15-16 ஓவர்களில் இந்த கூட்டணி பவர் சர்ஜ் எனப்படும் இரண்டு ஓவர் பவர்ப்ளேவை எடுத்தது. ஹேட்ஸூக்ளு வீசிய 15 வது ஓவரின் முதல் பந்திலேயே ரிச்சர்ட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கேப்டன் ஹூயூஸ். அடுத்ததாக சில்க் உள்ளே வந்தார். இதன்பிறகுதான் ஆட்டத்தில் அனல் பறக்க தொடங்கியது. 16 வது ஓவரை ரிச்சர்ட்ஸன் வீச அந்த ஓவரில் 5 பவுண்டரிகளை அடித்தார் சில்க். அரைசதம் அடிக்கும் வரை அமைதி காத்த பிலிப்பே இதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தவர், அடுத்த 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். எல்லாமே ஃபீல்ட் செட்டைப்பை மனதில் வைத்துக்கொண்டு கேப்பை பார்த்து க்ளீன் ஹிட்டாக அடிக்கப்பட்ட ஷாட்டுகள். இன்சைட் அவுட், ரிவர்ஸ் ஸ்வீப் என எல்லா ஷாட்டுகளையும் ஆடினார் பிலிப்பே. சதம் அடித்துவிடுவார் என நினைக்கையில் 20-வது ஓவரின் முதல் பந்தில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து 95 ரன்களில் வெளியேறினார் பிலிப்பே. சில்க் மற்றும் பிலிப்பேவின் அதிரடியால் அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தது. இந்த சீசனில் முதல் முறையாக 200ஐ கடக்கும் அணி சிட்னி சிக்சர்ஸ்தான்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மெல்பர்ன் அணிதான் தொடக்கத்திலிருந்தே சொதப்பியது. கேப்டன் ஃபின்ச் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற முதல் 4 ஓவர் பவர்ப்ளேயிலேயே 3 விக்கெட்டை இழந்த மெல்பர்ன் அணி சிட்னி பௌலர்களை எதிர்கொள்ள முடியாமல் வெகுவாக தடுமாறியது. கொஞ்சம் நின்று போராடினார் அல்லது அணியை மீட்க முயன்றார் என சொல்லும் வகையில் எந்த பேட்ஸ்மேனும் ஆடவில்லை. 11 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது மெல்பர்ன் அணி.
Also Read: ட்விஸ்ட் கொடுத்த நம்பர் 11 பேட்ஸ்மேன்... தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற ஹோபர்ட்ஸ்! #BBL
சிட்னி சிக்சர்ஸ் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு Bash Boost உடன் சேர்த்து நான்கு புள்ளிகள் கிடைத்தன.
ஆட்டநாயகன் விருது 95 ரன்கள் எடுத்த ஜோஷ் பிலிப்பேவுக்கு வழங்கப்பட்டது. அப்போதுதான் பிலிப்பே ஆர்சிபி அணியில் ஆடியது குறித்து, "கோலி, ஃபின்ச், டிவில்லியர்ஸ் ஆகியோருடன் நேரம் செலவிட்டது ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது" எனக் கூறினார்.
source https://sports.vikatan.com/cricket/sydney-sixers-beats-melbourne-renegades-in-an-easy-encounter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக