கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை.
எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா! இதோ அதற்கும் பரிகாரங்களைச் சொல்லி உங்களை வழிநடத்துகிறது ஆன்மிகம்.
ஒருவரது லக்னத்தில் இருந்து 6-ம் இடம் ருண - ரோக - சத்ரு ஸ்தானம் எனப்படும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவர் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பெருத்த கடன் உண்டாகும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும் என்கிறது ஜோதிடம். எனவே கடன் வாங்கும்போதும் அதிகப்படியான கடன் கொடுக்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல நேரங்களைக் கணித்த பிறகே கடனை வாங்க வேண்டும் அல்லது திரும்பக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை விளக்கு வைத்தபிறகு கடன் கொடுக்காதீர்கள், வாங்காதீர்கள் என்கிறது சாஸ்திரம்.
1. குலதெய்வ வழிபாடு குறைகளைத் தீர்க்கும்
முந்தைய வினைகளின் காரணமாக, உண்டான கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, முடிந்த அளவு படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கட்டாயம் கடன்கள் அடைபடும். அதுமட்டுமின்றி வரவேண்டிய கடன் பாக்கியிருந்தாலும், வசூலாகிவிடும்.
2. சங்கடங்கள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு
சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும்.
3. கோமாதா வழிபாடு குறைகள் தீர்க்கும்
செல்வத்தின் அம்சமான கோமாதாவின் வழிபாடு உங்களை நிச்சயம் காக்கும். காலையில் விழித்ததும் பசு மாட்டை காண்பது தீர்வு கொடுக்கும். மேலும் ஒருமுறையாவது பசுவுக்கு கீரையும் பழமும் கொடுப்பது நல்லது. திருமகள் உறையும் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவதும் செல்வம் சேர வழி தரும்.
4. குளிகை நேரத்தில் வாங்கிய கடனில் ஒரு பங்கை அடையுங்கள். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள். அடகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள்.
5. வீட்டை எப்போதும் சுத்தமாகவும் தெய்வ கடாட்சமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். திருமகள் தங்கும்படி உங்கள் சுற்றமும் செயலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கடன் தீரும்வரை பூஜையறையில் மஞ்சள் பொடியால் `அக்ஷயம்' என்று எழுதி வாருங்கள்.
6. தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.
7. ருணவிமோசன பைரவர் வழிபாடு கட்டாயமாக உங்களின் எல்லா கடன்களையும் தீர்க்க உதவும். அதுபோல பிரதோஷ வழிபாடு நிச்சயம் எத்தனை பெரிய கடன்களையும் படிப்படியாக தீர்க்க உதவும். அதுபோல பஞ்சமி தினத்தில் அம்பிகையை எண்ணி விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும். வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வாங்கி வசதியில்லாத சிவாலயத்துக்கு தானம் கொடுக்கலாம்.
8. வாசிதீரவே, காசு நல்குவீர்... என்ற திருவீழிமிழலை திருப்பதிகம் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயத்தில் சென்று வாசிக்க கடன் தீரும். செவ்வாய் பகவானின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையும். விரயச் செலவுகள் குறையும் என்பார்கள். எனவே செவ்வாய்தோறும் செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வணங்கி வேண்டலாம். சஷ்டி கவசம் பாடி சஷ்டி விரதம் இருப்பதும் கடன் சுமைகளை அறவே ஒழிந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
இத்தனை வழிகள் இருக்க இனி கவலை எதற்கு? நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுள் அருளோடு உங்கள் வாழ்க்கையையும் சீரமைத்துக் கொண்டு வாழுங்கள். வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தேவையற்ற ஆசைகளைக் குறைத்துக்கொண்டு வாழுங்கள். திடீரென்று உழைக்காமல் வரக்கூடிய எந்த பொருளுக்கும் ஆசைப்படாதீர்கள். நிச்சயம் உங்கள் கடன்கள் தீரும். கடவுள் ஆசியால் செல்வவளமும் கூடும் பாருங்கள்.
source https://www.vikatan.com/spiritual/astrology/spiritual-guidance-to-get-rid-of-your-debt-quickly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக