நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி ரஜினியின் அரசியல் பிரவேசம் வெற்றி நடைபோட வேண்டிக்கொள்கிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் ரஜினி பிறந்தநாளையொட்டி சோளிங்கரில் உள்ள பழைமைவாய்ந்த சோழபுரீஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, இன்று ஓர்நாள் முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவச பேருந்து மற்றும் ஆட்டோ சேவையைத் தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினர். குறிப்பாக, ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசிக்கு இலவச தனியார் பேருந்து சேவை இயக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய பயணிகள் யார் வேண்டுமானாலும், அந்த பேருந்தில் ஏறி தங்கள் ஊருக்குச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: 108 கோடி ரூபாய் சம்பளம்... ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டாராக இருப்பதன் ரகசியம் என்ன?! #HBDRAJINI
அதேபோல், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் நடந்த சிறப்பு பூஜையிலும் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் மன்றத்தினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், `ரஜினியின் அரசியல் புரட்சிக்கு நாங்களும் தயார்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாணியம்பாடியை அடுத்துள்ள ஆலங்காயம் பகுதியில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அணைக்கட்டு, பள்ளிகொண்டா, கே.வி.குப்பம், வாலாஜாபேட்டை, வேலம் ஆகியப் பகுதிகளிலும் அன்னதானம் வழங்கினர். ராணிப்பேட்டையில் 250 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 120 விவசாயிகளுக்கு விதை நெல்லும் வழங்கினர்.
இதேபோல், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் சிறப்புப் பிரார்த்தனைகளை செய்துவருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி பார்வையிட்டுவருகிறார்.
source https://www.vikatan.com/news/politics/makkal-mandram-cadres-fans-celebrates-rajinis-birthday-in-vellore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக