Ad

சனி, 12 டிசம்பர், 2020

`நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் பிரச்னை இருந்தது!’ - 3 நாள் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா இன்று உயிரோடு இல்லை. கடந்த டிசம்பர் 9-ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் முகத்திலிருந்த நகக் கீறல்களைப் பார்த்து மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக சித்ராவின் நண்பர்கள் தெரிவித்தனர். டிசம்பர் 10-ம் தேதி நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு சித்ரா தற்கொலைதான் செய்திருக்கிறார் என டாக்டர்கள் வாய்மொழியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலுக்குப்பிறகு சித்ராவின் அம்மா விஜயா, தன்னுடைய மகளை ஹேமந்த் அடித்துக் கொலை செய்துவிட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

நடிகை சித்ரா

இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் தொடர்ந்து மூன்று நாள்களாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஹேமந்த் என்ன கூறினார் என்று விசாரணை அதிகாரிகளிடம் கேட்டோம்.

``நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக ஹேமந்த்திடமும் ஷூட்டிங் குழுவினரிடமும் ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சித்ராவைக் காரில் அழைத்து வந்த ஹேமந்த்திடம் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தினோம். அப்போது அவர், சித்ராவும் தானும் உயிருக்கு உயிராய் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

சித்ராவைச் சந்தித்த நாளிலிருந்து அவரைப் பதிவு திருமணம் செய்தது வரை அன்பாகவே பழகிவந்தோம். தங்களுக்குள் நடந்த சம்பவங்களைக் ஹேமந்த் ஒன்றுவிடாமல் கூறினார். அதன்அடிப்படையில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். அதற்கும் அவர் பதிலளித்திருக்கிறார். ஹேமந்த்துக்கும் சித்ராவுக்கும் சில மனவருத்தங்கள் இருந்திருக்கின்றன. அது சில நேரங்களில் சண்டையாகவும் மாறியிருக்கிறது. அதன்பிறகு இருவரும் சமரசமாகியிருக்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் நடிகை சித்ராவுக்கு ஷூட்டிங் வாய்ப்புகள் இல்லை. அதனால் பொருளாதார ரீதியாக அவருக்கு சில சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.

Also Read: சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை

நடிகை சித்ரா

அந்த சமயத்தில் சித்ராவுக்கு ஆறுதலாக ஹேமந்த் இருந்திருக்கிறார். பின்னர், தங்களின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஹேமந்த்தும் சித்ராவும் திட்டமிட்டியிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்திருக்கின்றனர். அது தொடர்பாகவும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. கணவர் ஹேமந்த், சித்ராவின் அம்மா விஜயா ஆகியோருக்கு இடையே சமாதானத் தூதராக சிக்கிய சித்ராவுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. டிசம்பர் 9-ம் தேதியன்று சித்ரா, அம்மாவுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்று விஜயாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

இதற்கிடையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று நாள்கள் ஹேமந்த்திடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆர்.டி.ஓ அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கு அடுத்த கட்டத்துக்குச் செல்லும். சித்ராவின் செல்போனில் வழக்கு தொடர்பாக ஏதாவது ஆதாரங்கள் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றனர்.

நடிகை சித்ராவின் சடலம்

ஹேமந்த்திடம் நேற்று விசாரணை நடத்திய அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யனிடம் பேசினோம். ``சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். அவரிடம் சித்ராவின் மரணம் தொடர்பாகக் கேள்விகளைக் கேட்டபோது அதற்கு அவர் அளித்த பதில்களைப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணையின்போது சித்ரா தற்கொலை செய்து கொள்வார் என்று கருதவில்லை என ஹேமந்த் கூறினார். சித்ராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். மேலும் சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்ததாக விசாரணையில் தகவல் கிடைத்திருக்கிறது. விசாரணைக்கு ஹேமந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்திய பிறகுதான் இந்த வழக்கில் ஒரு முடிவெடுக்க முடியும். சித்ராவின் செல்போனில் மரணம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/investigation-updates-on-serial-actor-chitra-death-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக