Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

`அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்கிறதா... தங்கத்தின் விலையில் மணல்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

வானம் பார்த்த பூமியாகப் பார்க்கப்படும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வான் மழையையும், எப்போதாவது நிறைந்து வழிந்துவரும் வைகை ஆற்றுத் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும்கூட இதுதான் நிலை. பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு போதுமான மழை பொழிந்திருக்கிறது. இந்தநிலையில், வழிந்துவரும் ஆற்றுநீரை கடைமடைப் பகுதிக்கு வந்துசேர விடாமல் ஆற்றுப்படுகைதோறும் மணல் கொள்ளை தாராளமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உபரி மணல் என பெயர்வைக்கப்பட்டு முழுப் பூசணியை மறைப்பதுபோல் அதிகாரிகளே சட்ட விரோதச் செயல்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க எனக் கட்சி பாரபட்சம் இன்றி மணல் கொள்ளை நடைபெற்றது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

மணல் குவாரி

இந்தநிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மணல் கொள்ளை குறித்தும், மணல் விலை ஏற்றம் குறித்தும் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில், ``மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி எனக் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தனர்.

Also Read: `மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு?’ - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. தற்போது அது நடைமுறையில்தான் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம்

அதற்கு நீதிபதிகள், ``அரசு மணல் குவாரியிலிருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்துவருகிறது என்பது தெரியும். ஆனால், அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது?" என்று கேள்வி எழுப்பியதோடு, ``தற்போது மணலின் விலை 45,000 ரூபாய் என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அளவு தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை” என்றனர். தொடர்ந்து நீதிபதிகள், சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-high-court-order-on-sand-rate-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக