7.5% உள் ஒதுக்கீட்டால் பல்வேறு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்லூரிகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இவர்களில் தனியார் கல்லூரியில் பயிலவிருக்கும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அறிவிப்புக்கு முன்பாகவே தங்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றதால் பணம் செலுத்த முடியாத சூழலில் கல்லுரியைத் தேர்வு செய்ய முடியாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள் பல ஏழை மாணவர்கள். இதனால் தகுதி இருந்தும், அரசுக் கட்டணத்தை ஏற்கும் எனத் தெரிவித்தபோதிலும் மருத்துவ சீட் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் கலங்குகிறார்கள்.
இந்தநிலையில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது ஜமீன் என்ற மாணவன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ```தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வீரசிகாமணி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் எங்கள் குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். என் தந்தை கூலி வேலைகள் செய்து எங்களைக் காப்பாற்றிவருகிறார். இந்தநிலையில் நான் அரசுப் பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு மற்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டு பல் மருத்துவ படிப்புக்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கான கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை அறிந்ததாலும், அன்றைய தினமே சுமார் ரூ.11,000 செலுத்துமாறு கோரியதன் அடிப்படையிலும், அதைச் செலுத்த இயலாததன் காரணமாக நான் கலந்தாய்வில் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை.
இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் பயின்று மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். இந்தத் தகவல் முன்பே தெரிந்திருந்தால் பல் மருத்துவப் படிப்புக்கான இடத்தைத் தேர்வு செய்திருப்பேன். குடும்ப வறுமையின் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதன் காரணமாக அன்றைய தினம் தேர்வு செய்யவில்லை. இதுபோல மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, பல் மருத்துவத்துக்கான இடத்தை எனக்கு ஒதுக்கிவைக்கவும், இடத்தைத் தேர்வை செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என நீதிபதிகள் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
``மருத்துவக் கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும், இரண்டு நாள்கள் கால அவகாசம் தேவை. நல்ல அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வரும் காலங்களில் அரசு பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமல்லாமல், உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-high-court-on-medical-counselling
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக