1947-ம் வருடம் அமலாக்கம் செய்யப்பட்ட `இந்திய நர்சிங் கவுன்சில் சட்டம்', ஏழு தசாப்த காலத்துக்குப் பிறகு, தற்போது `தேசிய செவிலியர் மற்றும் இடைநிலை செவிலியர் ஆணையச் சட்டம் 2020' ஆக உருமாற இருக்கிறது.
கடந்த 70 வருடங்களில் செவிலியத் துறையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுவிட்டபடியால் காலமாற்றத்துக்கு ஏற்ப செவிலியர் தொழில்துறை சந்தித்து வரும் சவால்களுக்கு விடை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
நாட்டில் உள்ள செவிலியர்களில் சுமார் 60%, அதாவது நாட்டில் உள்ள 20 முதல் 22 லட்சம் செவிலியர்களுள் 12 லட்சம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவில், இந்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டி செவிலியர் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருவது கவனம் பெற்றுள்ளது.
கேரளாவில் செவிலியர்கள் போராட்டம் செய்வதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்...
* புதிய சட்டமானது செவிலியர் படிப்புக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் நிலைகளில் (Entry and Exit Entrance) பரீட்சைகளை கட்டாயமாக்குகின்றது. இது பொருளாதாரத்தில், வசதி வாய்ப்பில் பின்தங்கிய சூழலில் உள்ள மக்களுக்கும் கிராமிய சூழலில் பயிலும் மக்களுக்கும் சவாலாக அமையக்கூடும்.
* மேலும் நாட்டில் உள்ள செவிலியர்களில் பெண்களே பெரும்பான்மை என்பதால் இத்தகைய பரீட்சைகள் பெண்கள் செவிலியத்துறையை நாடுவதைத் தவிர்க்க வைக்கும் என்று எண்ணப்படுகிறது.
* புதிய சட்டத்தில் செவிலியத் துறையில் உள்ள வேலைகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆனால், அவற்றை தற்போதைய அரசுப் பணிகளில் எவ்வாறு புகுத்துவது அல்லது மாற்றம் செய்வது என்பது குறித்த தெளிவு இல்லை என்று கூறப்படுகிறது.
* முந்தைய 1947 சட்டத்தில் கவுன்சில் மெம்பர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், புதிய சட்டத்தில் உறுப்பினர்கள் செவிலியர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டம் கூறுகிறது.
* ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆறு பகுதிகளாகப் (zones) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 3 - 4 மாநிலங்கள் என்று பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த உறுப்பினர் தேர்வு சுழற்சி முறையில் நடைபெறும். இந்த வகையில், நாட்டில் 60% செவிலியர்கள் இருக்கும் கேரளாவின் பங்கெடுப்பு என்பது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கப்பெறும். மேலும், அவர்கள் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருப்பர். இவற்றுக்கு அம்மாநில செவிலியச் சங்கங்கள் ஆட்சேபணை தெரிவிக்கின்றன.
அமையவிருக்கும் செவிலியர் கமிஷனில், மாநிலங்களின் பங்கெடுப்பைவிடவும் மத்திய அரசின் பங்கெடுப்பு அதிகமாக இருப்பதால் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இருப்பினும் பழைய சட்டத்தில் ஒரு மெம்பர் எத்தனை முறை கவுன்சில் பதவியில் இருக்கலாம் என்பதற்கு எந்த உச்சவரம்பும் இல்லாமல் இருந்தது. இதனால் கவுன்சிலில் ஒரு சிலரின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்து வந்தது.
வரவிருக்கும் புதிய சட்டத்தில் ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை செவிலியர்கள் வரவேற்றுள்ளனர்.
புதிய சட்டத்தில் செவிலியர்களின் பணி குறித்த விரிவான அறிக்கை, செவிலியர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் பணியில் இருக்கலாம், அவர்களின் ஊதிய வரையறை குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லாமல் இருப்பதை ஏமாற்றமாக உணர்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த United Nurses Association எனும் அமைப்பு, இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஒரே செவிலியர் கமிஷன் எனும் முன்மொழிவை வரவேற்றுள்ளது. காரணம், கேரளாவைவிட்டு வெளி மாநிலங்களுக்குப் பணிக்குச் செல்லும் கேரள செவிலியர்கள் தங்கள் மாநில கவுன்சிலில் இருந்து ஒவ்வொரு முறையும் பெயரை நீக்கி மீண்டும் புதிய மாநிலக் கவுன்சிலில் சேர்க்க வேண்டியிருந்தது. தற்போது ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே கவுன்சில் என்று இருப்பதால் அந்தப் பிரச்னை தீர்க்கப்படும் என்று அறிவித்துள்ளதை அவர்கள் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு, இந்தப் புதிய சட்ட முன்வரைவின் சாதகப் பாதகங்களை பல செவிலிய சங்கங்கள் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளன. அவற்றை ஆராய்ந்து சீர்தூக்கிப்பார்த்து செவிலியர்களுக்கும், அவர்தம் துறைக்கும், நாட்டுக்கும் சிறந்ததொரு சட்டத்தை இந்திய கூட்டாட்சி அரசு கொண்டு வர வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/why-kerala-nursing-associations-opposing-national-nursing-and-midwifery-commission-bill
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக