Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வீரேந்திர ஷேவாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடராஜன். ஆனால், அவரால் அங்கு சோபிக்கமுடியவில்லை. பின், 2018ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக, இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது உலகம் முழுக்க இருக்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உச்சரித்த பெயர் நடராஜன்.

அந்தளவுக்கு தன்னுடைய பெளலிங் திறமையால் எதிரணியை திணறிடித்தார். தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களை எல்லாம் வீழ்த்தி அசத்தினார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர், ஆஸ்திரேலியா தொடரில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகள் என விளையாடிய நான்கு போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணிக்குத் தேர்வான நாளிலிருந்து நடராஜன் கொண்டாடப்பட்டு வருகிறார். தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வெற்றி பெற்ற கோப்பையை விராட் கோலியும் நடராஜனிடம் கொடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கிரிக்கெட் வீரர் நடராஜன் - விராட் கோலி

நடராஜன் தன்னுடைய அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவுடன் இயக்குநர் சிஎஸ் அமுதன், 'நடராஜன் பயோபிக் எடுத்தால் இதுதான் இன்டர்வெல் பிளாக்' என ட்வீட் செய்திருந்தார். அதன் பின், நடராஜன் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்ற செய்தி சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டன.

நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் இருவரும் நடராஜனுடன் வீடியோ காலில் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை 'மகள்களை பெற்ற அப்பாக்கள்' என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார் சதீஷ். இதையும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'கனா' படத்தைத் தயாரித்ததையும் தொடர்புபடுத்தி நடராஜன் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கும் உரிமையை சிவகார்த்திகேயன் வாங்கிவிட்டார் என்ற தகவல்களும் வெளியாயின.

கிரிக்கெட் வீரர் நடராஜன் - சிவகார்த்திகேயன் - சதீஷ்

இது குறித்து விசாரித்தபோது, நடராஜன் வாழ்க்கை படமாக்கும் உரிமையை வாங்க சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எதுவும் முயலவில்லை, சமூகவலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. உண்மையில், நடராஜன் எப்படி இந்திய அணிக்கு வந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அத்தனை வலிகளைக் கடந்து இன்று நாயகனாக மாறியிருக்கும் நடராஜனின் வரலாற்றை படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் ஆசையாகவும் உள்ளது.

அப்படி நடராஜன் வாழ்க்கை படமாக்கப்பட்டால் நடராஜனாக யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை கமென்ட் செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/is-there-any-chance-to-make-cricketer-natarajans-biopic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக