``கறுப்பின மக்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றித் துளியும் அறிவற்றவர்களாக வெள்ளை அமெரிக்கர்கள் உள்ளனர் என்பதை, உள்ளபடியே வெள்ளை அமெரிக்கர்களிடம் சமூக விஞ்ஞானிகள் எடுத்துரைக்க வேண்டுமென கறுப்பின மக்கள் விரும்புகிறார்கள்” என்று தனது பார்வையாளர்கள் மத்தியில் அறைகூவல் விடுத்தார் மார்ட்டின் லூதர் கிங். அந்த நிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போதைய காலத்தில் கூகுள்தான் எல்லாமே. சிறுவர் முதல் பெரியவர் வரை தடுக்கி விழுந்தால் கூகுளில்தான் போய் நிற்கிறோம்; கூகுள் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். எந்தத் தகவல் வேண்டும் என்றாலும் விரல் சுட்டும் நிமிடத்தில் கூகுளில் மட்டுமே கிடைக்கிறது. அப்படிப்பட்ட கூகுள் நிறுவனத்தின் மீது விரல்கள் குற்றச்சாட்டுடன் நீண்டு நிற்கின்றன. அது, கறுப்பின மக்களை கூகுள் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு.
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து பல புதிய கண்டுபிடிப்புகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. கூகுளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் செயல்பட்டு வந்த ஒரு பெண் கறுப்பின விஞ்ஞானி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவியிலிருந்து வெளியேறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பிரச்னை இதுதான். கூகுளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் டிமினிட் கெப்ரு. இவர் கறுப்பின பெண் விஞ்ஞானி. இவர் கூகுள் நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், கூகுள் நிறுவனத்தில் பாலினப் பாகுபாடு, மத வேறுபாடு பார்க்கப்படுவதாகவும், பெண்கள், கறுப்பினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ``நான் செய்யும் வேலைகளில் சமத்துவம் கடைப்பிடிக்கப்படவில்லை. மாறாக, நான் மனரீதியாகப் பாதிக்கப்படும்படி நடந்துகொண்டனர்" என்று கூறினார் கெப்ரு.
என்னதான் நடந்தது. கெப்ரு சொல்கிறார்...
``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை என்னுடைய தனிப்பட்ட மெயிலில் வைத்திருந்தேன். ஆனால், இந்தக் கட்டுரை எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டு, மாற்றி எழுதப்பட்டுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான், மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுத்ததுபோலத் தெரியவில்லை. இன்னொரு பக்கம், அங்குள்ள பணியாளர்கள் என்னைப் பற்றி புறம்பேசி வந்தார்கள். எனக்கு எதிராக சுமார் 200 ஊழியர்கள் கையெழுத்திட்ட புகார் கடிதம் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான் பதவியிலிருந்து விலகிவிட்டேன்.
நான் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பாகவே, எனக்குப் பதவி நீக்கக் கடிதம் கொடுத்தனர். மேலும், கூகுள் நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக கூகுள் நிறுவனம் திரும்பப் பெற்றது. நான் பதவியிலிருந்து வெளியேறியது மற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியது.'' எனச் சொல்லியிருக்கிறார் கெப்ரு.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சை தனது நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ``கெப்ரு பதவி விலகியது சரியான முடிவு அல்ல. கூகுள் நிறுவனத்தில் கறுப்பின மக்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்கிற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. சக பணியாளர்கள் தரக்குறைவாக நடந்தியிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். கெப்ருவின் குற்றச்சாட்டுகள் விரைவில் சரிசெய்யப்படும்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் கடிதத்தைத் தொடர்ந்து கெப்ரு தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், ``சுந்தர்பிச்சை உண்மையான வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லால், கூகுள் நிறுவனத்தில் 2% மட்டுமே கறுப்பினப் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைவருக்குமானதாக இருக்கும்போது அதைத் தயாரிப்பதில் கறுப்பின மக்கள் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்?" என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த கெப்ரு, தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர். இதற்கு முன்பு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம், கூகுள் இப்படி பாகுபாடு சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. 2015-ம் ஆண்டு கூகுள் செயற்கை நுண்ணறிவு புகைப்பட ஆய்வு ஒன்றில், கறுப்பின மக்களை கொரில்லாவுடன் ஒப்பிட்டு சர்ச்சையானது. இது பெரிதானதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கேட்டது.
Also Read: சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்?
இதேபோல், 2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் அழகு தொடர்பான ஆய்வில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் வெள்ளை இனத்தவர்கள் எனத் தகவல் வந்தது. இந்தச் சம்பவம் குறித்தும் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இப்படித் தொடர்ந்து கறுப்பின மக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி வருகிறது கூகுள். எல்லோருக்கும் தகவல் தரும் கூகுள் இப்போது தலைகுனிந்து நிற்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது.
இதற்கிடையே, கெப்ருவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து கூகுள் நிறுவன ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக 800 ஊழியர்கள் அணி திரண்டுள்ளனர். மீண்டும் கெப்ருவை பணியமர்த்த வேண்டும் என்று கோரி ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். #ISupportTimnit என்ற பெயரில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கெப்ருவுக்கான ஆதரவுப் பதிவுகள் குவிந்து வருகின்றன. இதனால் கெப்ரு விவகாரம் சூடுபிடித்துள்ளது.
- ஆனந்தி ஜெயராமன்
source https://www.vikatan.com/social-affairs/women/why-sundar-pichai-apologized-to-google-employees-over-departure-of-timnit-gebru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக