Ad

புதன், 9 டிசம்பர், 2020

திடீரென ட்ரெண்ட் ஆகும் ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட்டுகள்... பாதுகாப்பானவைதானா?

கொரோனா தொற்று உலகை ஆட்கொள்ளத் தொடங்கிய பிறகு, மாஸ்க் என்பது நம்முடைய ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. இதற்கு முன்பு வரை மாஸ்க் என்பது ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே அணியக்கூடியது என்றே நினைத்திருந்தோம். ஆனால், தற்போது சர்ஜிக்கல் மாஸ்க், துணி மாஸ்க், என்95 எனப் பெயர் பார்த்து வாங்கும் அளவுக்கு முன்னேறிவிட்டோம்..

ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட்

என்னதான் மாஸ்க்குகள் நாம் எளிதாக அணிந்துகொள்ளும் வகையில் இருந்தாலும் மாஸ்க் அணிவதை தற்போது வரை அசௌகரியமாகவே உணர்ந்து வருகிறோம். அதை மாட்டிவிட்டால் எப்போது கழற்றுவோம் என்பதுதான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். மாஸ்க்கை அசௌகரியமாக உணர்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த அசௌகரியத்தைப் போக்குவதற்கு ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட் (Face mask bracket) என்ற ஒருவகை சாதனம் புழக்கத்துக்கு வந்துள்ளது.

எப்படி அணிய வேண்டும்?

வாய் மற்றும் மூக்குப் பகுதியின் மேல் ஒரு கூண்டு வைத்ததைப் போல ஃபேஸ்மாஸ்க் பிராக்கெட்டைப் பொருத்த வேண்டும். தலைக்குப் பின்னால் ஒரு கிளிப் வைத்து அதை அவரவர் அளவுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் மாஸ்க்கை அணிய வேண்டும். இதனால் மாஸ்க் நேரடியாக மூக்கிலோ முகத்திலோ படாது. இது ஆன்லைனில் ரூ.499 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

wearing mask

மாஸ்க்கை சௌகரியமாக அணிவதற்காக இதை அறிமுகப்படுத்தியிருந்தாலும் அது பாதுகாப்பானதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதை அணிவதன் மூலம் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதையும் அறிய வேண்டும்.

இதுபற்றி தொற்றுநோய் மருத்துவர் வித்யா தேவராஜனிடம் கேட்டோம்.

``ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட்டுகள் கடந்த சில மாதங்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கின்றன. காரணம் என்னவென்றால், முகக்கவசம் போடுவது பலருக்கு வசதியாக இல்லை. மூச்சுவிட சிரமம், மாஸ்க் போடுவதால் தாங்கள் பேசுவது பிறருக்குக் கேட்காமல் அல்லது புரியாமல் போவது, மாஸ்க்கில் உள்ள சிறிய சிறிய நூலிழைகள் முகத்தில் படுவதால் எரிச்சலுணர்வு ஏற்படுவது, மேக்அப் கலைகிறது எனப் பல்வேறு காரணங்களால் மாஸ்க் அணிவதைப் பலர் அசௌகரியமாக உணர்கின்றனர்.

மாஸ்க் போட்டு கொஞ்ச நேரத்தில் அது ஈரமாவதால் சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்காகத்தான் ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட்ஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால், அதைப் பயன்படுத்துவதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். இந்த பிராக்கெட்டுகள் ஒரே அளவிலானவை. அதனால் மாஸ்க் சரியாகப் பொருந்தாமல் போக வாய்ப்புள்ளது.

அதனால் மாஸ்க்குக்கும் முகத்துக்கும் இடைவெளி ஏற்படும். இடைவெளி இல்லாமல் மாஸ்க் பொருந்தினால் மட்டுமே தொற்று பரவுவதைத் தடுக்க இயலும். இடைவெளி இருந்தால் எந்த நோக்கத்துக்காக மாஸ்க் அணிகிறோமோ அது தடைப்படும். நோய்ப் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏற்கெனவே பலர் மாஸ்க்கை சரியாக அணிவதில்லை. சிலர் மூக்குக்குக் கீழேயும் சிலர் வாய்க்கு கீழேயும் சிலர் தாடையிலும் அதைப் போட்டுக்கொள்கின்றனர். இந்த பிராக்கெட்டையும் போடுவதால் மாஸ்க் மேலும் பொருந்தாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

Infectious disease expert Dr. Vidya Devarajan

பிராக்கெட்டை சுத்தப்படுத்துவது அடுத்த பிரச்னை. ஏனென்றால் நம்முடைய சுவாசப் பாதை சுரப்புகள் (Respiratory Secretions) அந்தப் பொருளின் மேல் தொடர்ந்து பட்டுக்கொண்டே இருக்கும். பிராக்கெட்டைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் சரியாகச் சுத்தப்படுத்தாமல் இருந்தால், அது சுகாதாரமில்லாத விஷயமாக மாறும்.

ஃபேஸ் மாஸ்க் பிராக்கெட்டுகள் சிலிகான் அல்லது பிளாஸ்டிக்கால் உருவானவை. மாஸ்க் அணிவது எரிச்சலுணர்வைத் தருகிறது எனும்போது, பிராக்கெட் சேர்த்து அணிவதால் அது சருமத்தில் உராய்ந்து வேறு மாதிரியான பிரச்னைகளையோ ஒவ்வாமையையோ ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவர்கள் இன்னும் இதைப் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. இதன் பயன்பாடுகள் குறித்தும் பயன்படுத்துவது நல்லது என்று நிரூபிக்கும் வகையில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் எந்தவித புள்ளிவிவரங்களோ தரவுகளோ இல்லை" என்றார்.

covid-19 spread

Also Read: ஆரோக்கியத்துக்கு அந்த மாஸ்க், அழகுக்கு இந்த மாஸ்க்!

மாஸ்க் அணிவதோடு தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற பல்வேறு விஷயங்களால்தான் கோவிட்-19 தொற்றைத் தடுக்க இயலும். இந்தச் சூழலில் அசௌகரியத்தைக் காட்டிலும் பாதுகாப்புதான் முக்கியம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆடம்பரங்கள் என்றுமே ஆபத்துதான்.



source https://www.vikatan.com/health/healthy/wearing-face-mask-brackets-is-safe-or-not

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக