'விஸ்வாசம்' படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, சிவா இயக்கும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராஃப் எனப்பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.
மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் லாக்டெளன் வந்துவிட்டது. அக்டோபர் மாதம் ஷூட்டிங்கிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ''டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்'' என்று முடிவெடுத்தார் ரஜினி. இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி கட்சியைத் தொடங்கவிருக்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசும்போது, கட்சி வேலைகள் தீவிரமாகும் முன் முதல் கட்டமாக 'அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருந்தார். அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செம்பியன் சிவக்குமாரிடம் கேட்டோம்.
" 'அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள 40 சதவிகித படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லாமே இண்டோர் ஷூட்டிங்தான். அதற்காக செட் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து ஹைதராபாத் செல்ல ரஜினி சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செய்த அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் 'அண்ணாத்த' டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஹோட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
சன்ரைசர்ஸ் அணி பயோ பபுளில் இருந்தபோது சன் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சண்முகம், கண்ணன் என்பவர்கள்தான் அனைத்தையும் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள்தான் இப்போது 'அண்ணாத்த' ஷூட்டிங்கிற்கும் பொறுப்பு. மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/details-of-precautions-in-annatha-movie-shooting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக