பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுவரை இல்லாத வகையில் போட்டிபோட்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று இரவு மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜு, கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மதுரை நகரமெங்கும் உயர்நீதிமன்ற உத்தரவையும், கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளையும் மீறி எடப்பாடியை வரவேற்று மாவட்டம் முழுவதும் அலங்கார வளைவுகளும் பிளெக்ஸ்களும் வைத்து, பக்கம் பக்கமாக நாளிதழ்களில் விளம்பரம் அளித்து அதகளப்படுத்தியிருந்தனர்.
இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், புதிய கலெக்டர் அலுவலகக் கட்டடத்தையும் அவர் திறந்தும் வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``அம்மாவின் அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்படும் இத்தனை திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் பார்வையில் கோளாறா... மனதில் கோளாறா என்று தெரியவில்லை.
இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். முதலில் அவர் அறைக்குள் இருந்து அறிக்கை விடுவதை விட்டு, வெளியில் வந்து பார்க்கட்டும். மதுரைக்கு நான் அறிவித்த பணியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதைச் சொல்வதில்லை. எங்கள் மீது அவதூறு செய்தியைச் சொல்லி பழி சொல்வதுதான் இவர்களின் வாடிக்கையாக உள்ளது.
Also Read: `மக்கள் பக்கம் இருக்கும் அரசு!’ - சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அடுத்த சந்ததியினரும் பயன்பெறும் வகையில் மதுரைக்கு முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். மக்களின் வசதிக்காக புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தை உருவாக்கியுள்ளோம். இது மட்டுமல்ல,மதுரைக்கு எய்ம்ஸ் உட்பட பல சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் புள்ளி விவரங்களோடு தெரிவிக்கிறோம். இதில் ஏதாவாது பிரச்னை இருந்தால் தெரிவியுங்கள். அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம். உங்களுக்கு பாராட்ட மனம் கிடையாது. அதற்காக வீண்பழி சுமத்தாதீர்கள்.
இந்த கூட்டுக்குடி நீர் திட்டம்போல், தமிழகத்தில் 72 திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனத்து திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்த அம்மா ஆட்சியிலிருந்து நிதி அமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற துணை முதலமைசசர் துணையாக இருந்து, நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருகிறார். அதுபோல், உள்ளாட்சித் துறை அமைச்சரும் இத்திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்த பாடுபடுகிறார். இதுபோன்ற காரணங்களால்தான் தேசிய அளவில் பல விருதுகளை பெற்று வருகிறோம்" என்றார். அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்துக்குக் கிளம்பி சென்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-slams-stalin-in-madurai-government-function
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக