Ad

வெள்ளி, 4 டிசம்பர், 2020

புரெவி புயல்: மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர்கள்... வேதனையில் தஞ்சை விவசாயிகள்!

புரெவி புயல் காரணமாகப் பெய்து வரும் கன மழையால் தஞ்சாவூர் அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

புரெவி புயல் கரையைக் கடந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புரெவி புயல் நீரில் மூழ்கிய பயிர்

தஞ்சையின் கடலோரப் பகுதிகளில் காற்றுடன் சேர்ந்து கன மழையும் பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பெய்த மழையால் தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள உளூர் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களில் மழை நீர் புகுந்ததையடுத்து சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

சுமார் 50 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது குறித்து முருகேசன் என்ற விவசாயியிடம் பேசினோம், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாள்களாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டே இருந்தது.

வேகமாக வீசிய காற்றில் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும், உளூர் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களில் மழை நீர் தேங்கி நின்றன. இதனால் சுமார் 50 ஏக்கருக்கு மேல் 10 தினங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கின.

நான் எனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் நடவு செய்திருந்தேன். பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே 105 நாள்களைக் கடந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்து சம்பா நெற்பயிர்களைக் காவந்து செய்தேன்.

நெல்

மழை நீர் வடிவதற்கு வழியில்லாததால் நெற்பயிரைக் காப்பாற்றுவது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மேல உளூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பல வயல்களில் மழை நீரில் பயிர்கள் மூழ்கியது விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது.

நெல் மணிகள் பழுத்த நிலையில் இன்னும் 15 தினங்களுக்குள் அறுவடை செய்வதற்கான ஏற்பாட்டையும் செய்தேன். விளைச்சல் நல்ல முறையில் இருக்கு நடவுக்கு வாங்கியிருந்த கடனை அடைத்துவிடலாம் என்றிருந்த நிலையில் தற்போது காற்றுடன் பெய்த மழையில் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து நீரில் மூழ்கிவிட்டன.

இன்னும் சில தினங்கள் மழை தொடரும் எனக் கூறப்படுவதால் கதிரிலேயே நெல்மணிகள் முளைத்துவிடுமோ என்ற கவலை என்னை மட்டுமல்ல என்னைப் போல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரையும் சூழ்ந்துள்ளது.

நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்

நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகினால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ. 50,000 வரை இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் என்ன செய்வதென தெரியாமல் மனது கிடந்து தவிக்கிறது. ஒரு பக்கம் பணம் மறுபக்கம் கண்ணாக வளர்த்த நெல் மணிகள் நீரில் சாய்ந்து கிடப்பதைப் பார்க்கவே முடியவில்லை எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/agriculture/thanjavur-paddy-farmlands-affected-by-burevi-cyclone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக