தி.மு.க-வின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்விதமாக, அந்தக் கட்சிக்குள் அ.தி.மு.க-வினர் தங்கள் ஸ்லீப்பர் செல்களைப் பரவவிட்டிருந்தனர். அதன்படி, தி.மு.க-வின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் தொடங்கி, நிர்வாகிகளின் கூட்டங்களில் பேசப்படும் தகவல்கள் வரையில் பல்வேறு விஷயங்களும் உடனுக்குடன் அ.தி.மு.க-வுக்குச் சென்றுவந்தன. இந்தநிலையில், அ.தி.மு.க-வுக்கு செக் வைக்கும் விஷயங்களில் தி.மு.க-வும் இறங்கியிருக்கிறது. அதன் முதல்படியாக, கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளருமான கணபதி ராஜ்குமார், சமீபத்தில் தி.மு.க-வில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் ஓரங்கட்டுப்பட்டுவந்த ராஜ்குமார், அதிருப்தியில் இருந்துவந்தார். அதை நீண்டநாள்களாகக் கவனித்துவந்த தி.மு.க, தேர்தல் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
தேர்தல் நெருங்க நெருங்க கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருந்து ஓரங்கப்பட்டிருக்கும் கணபதி ராஜ்குமார் போன்ற அ.தி.மு.க பிரமுகர்களை இழுக்க தி.மு.க பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். அதோடு, அ.தி.மு.க-வுக்குத் தகவல் கொடுக்கும் ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து களையெடுப்பதோடு, அந்த முகாமில் தங்களின் ஸ்லீப்பர் செல்களை ஊடுருவச் செய்யும் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்தவிருக்கிறதாம்.
நீங்க ஒரு ஆட்டை உள்ளவிட்டா, நாங்க ஒரு கிடையவே உள்ள விடுவோம்னு சொல்றீங்களா?
சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ``வஞ்சம் படைத்த சிலர் வருமான வரித்துறைக்கே தகவல் தரும் அளவுக்கு நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்று வருத்தத்துடன் பேசினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், தன் மகனின் வெற்றியைத் தடுக்க நினைத்து வேலை செய்த சிலர்மீது தற்போது பொதுச்செயலாளராக இருந்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறுகிறாராம். அந்த நபர்கள், கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம். அந்த ஆதங்கத்தைத்தான் கூட்டத்தில் இப்படிப் பேசி தீர்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள்.
வஞ்சம்... நெஞ்சம்... ரைமிங் நல்லாருக்கு. ஆனா, டைமிங் அமையலயே!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம், தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். நாம் தமிழர் கட்சியை `அ.தி.மு.க-வின் பி டீம்’ என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டிவந்தாலும், கல்யாணசுந்தரம் அ.தி.மு.க-வில் இணைந்ததற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றனவாம்.
``நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதற்கு முன்பே, அவரின் செயல்பாடுகள் சாதியை மையப்படுத்திதான் இருந்தன. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு ஒருவகையில் உறவினர். அவர் மூலம்தான் அ.தி.மு.க-வில் இணையப் பேச்சுவார்த்தை நடந்தது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நாம் தமிழர்... இப்போ நாம் திராவிடர்!
புதுக்கோட்டைத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க-வின் பெரியண்ணன் அரசு. உடல்நலக்குறைவால் சிரமப்பட்டுவருபவர், சிரமத்துடன்தான் தொகுதி நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் சீட் இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் நடத்திவரும் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை சீட்டுக்காகக் கடுமையாக முட்டி மோதுகிறார்.
Also Read: திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்
ஆனால் தலைமை, ஏற்கெனவே சீனியர் ஒருவரைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறதாம். அதுபோல், ஆலங்குடித் தொகுதிக்காக மருத்துவரான சதீஸ் முட்டி மோதுகிறாராம். இரண்டு தொகுதிகளையும் குறிவைத்து டாக்டர்கள் களமிறங்கியிருப்பதால், அதிரிபுதிரியாகியிருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
புதுக்கோட்டை அரசியலுக்கு இருக்குற ஒரு டாக்டர் போதாதா?
எந்தவொரு பிரச்னை பற்றியும் காமெடியாகப் பேசுபவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. `மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்கிறேன்’ என இவர் சமீபத்தில் பேசிய கருத்து ஒன்று, தமிழகத்தில் யாதவ சமூக மக்கள் மத்தியில் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறது. `நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை’ என்று செல்லூர் ராஜூ மன்னிப்புக் கேட்டாலும், யாதவர் அமைப்புகள் இதை விடுவதாக இல்லை. மதுரை உட்பட பல மாவட்டங்களில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னணியில், அ.தி.மு.க-விலுள்ள யாதவப் புள்ளிகளும் இருக்கிறார்களாம்.
பட்டியல் சமூகத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறார். இதை வெள்ளாளர் அமைப்புகள் எதிர்த்து போராட்டம் நடத்திவரும் நிலையில், செல்லூர் ராஜூவுக்கு எதிராக, யாதவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியிருப்பது தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வைச் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
விமர்சனம் பண்ணப்போய்... விவகாரம் ஆகிப்போச்சே!
`தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குள் தொடங்கப்படும்’ என அறிவித்த முதல்வர் பழனிசாமி, பெரிய அளவில் விளம்பரம் செய்து அதைத் தொடங்கிவைத்தார். இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகச் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் தற்போது புலம்புகின்றனர். மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் என்று மூன்று பேர் வரை பணிபுரிவார்கள்.
வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கான பணி உத்தரவு வழங்கப்படுகிறதாம். `பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்’ என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது 6,000 ரூபாய்தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். மார்ச் மாதம் வரை மட்டுமே பணி உத்தரவு வழங்கப்படுவதால், இந்தப் பணிக்கு வரத் தயங்குகிறார்கள். இதனால் மினி கிளினிக் தொடங்கப்பட்டும், பல இடங்களில் முறையாகப் பயன்பாட்டுக்கு வராத சூழல் நிலவுகிறது. இது போன்ற குளறுபடிகளை முதல்வர் அலுவலக அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள்.
கிளினிக்தான் மினி... மத்தபடி பிரச்னைகள்லாம் மெகாதான்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், தே.மு.தி.க-வின் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில இலக்கிய அணிச் செயலாளரும், நடிகருமான ராஜேந்திரநாத், ``சட்டமன்றத் தேர்தல்ல போட்டியிட ரெண்டு வாட்டி எனக்கு சீட் கொடுத்தார் கேப்டன். அதுல நான் தோத்துட்டேன்.
ஆனா, 2011-ம் வருஷம் நடந்த தேர்தல்ல எனக்கு கேப்டன் சீட் தரலை. ஒருவேளை எனக்கு சீட் கொடுத்திருந்து, நான் போட்டியிட்டு, எம்.எல்.ஏ-வா ஆகியிருந்தேன்னா, சட்டமன்றத்தில் கேப்டனைக் கைநீட்டிப் பேசிய அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அடிச்சு நொறுக்கியிருப்பேன்’’ என ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருக்கும் நிலையில், ராஜேந்திரநாத்தின் இந்த சர்ச்சைப் பேச்சு, அ.தி.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இலக்கிய அணிச் செயலாளர் பேச்சே இப்படின்னா, ம்... நடக்கட்டும்!
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அருகேயுள்ள ஊராட்சி மன்றத் தலைவியாக அ.தி.மு.க பெண் நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அரசு ஊழியரான அவரின் கணவரே நிழல் தலைவராக வலம்வருகிறாராம். நீலகிரியில் பாறைகள் உடைக்க, கிணறு தோண்ட, ஆழ்துளைக் கிணறு அமைக்க பல்வேறு தடைகள் இருக்கின்றன. முறையான அனுமதி பெற்ற பின்னரே இது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, விவசாயிகள் கிணறு தோண்ட ஒரு கிணற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் என வசூல் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலரை கைக்குள் வைத்திருக்கும் `நட்பு’ நடிகரின் பெயர்கொண்ட அந்த அரசு ஊழியர், சமீபத்தில் ஏழு கிணறுகளுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். விவகாரம் இப்போது கோட்டைக்குப் புகாராகச் சென்றிருக்கிறது.
கிணறு வெட்டுவதற்கு முன்பே பூதம் கிளம்பிவிட்டதே?
source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-dmk-election-strategy-to-amma-mini-clinic-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக