ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-ல் இருந்து பணத்தை கொள்ளையடிக்க வந்த நபரை நிராயுதபாணியாக காவலாளி விரட்டியடித்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் சாலை தெரு ரோமன் சர்ச் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. பிரபல வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் ஆகியன உள்ள இப்பகுதி பகல் பொழுதுகளில் பரபரப்பாக காணப்படும். இதன் அருகாமையிலேயே பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கிகளும் இயங்கி வருகின்றன.
Also Read: சென்னை: `ரூ.2,000தான் டார்கெட்; ஏ.டி.எம் கார்டுகள் மோசடி!' - முன்னாள் வங்கி ஊழியர் சிக்கிய பின்னணி
இப்பகுதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் காவலாளியாக ராமநாதபுரம் வீரபத்திரசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ருத்ரபதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி கையில் இரும்பு ஆயுதத்துடன் கொள்ளையடிக்கும் நோக்கில் ஏ.டி.எம் மையத்துக்குள் ஒருவர் நுழைந்துள்ளார். கைலி, பனியன் அணிந்திருந்த அந்த நபர், ஏ.டி.எம் மையத்தினுள் அமர்ந்திருந்த ருத்ராபதியை மிரட்டி அங்குள்ள விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராவை அணைக்கும்படி கூறியுள்ளான்.
அதற்குக் காவலாளி ருத்ரபதி மறுப்புத் தெரிவித்த நிலையில், அந்த நபர், தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் ருத்ரபதியைத் தாக்க முயன்றிருக்கிறார். இதனைத் தடுக்க முயன்ற காவலாளி, தன்னிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில், அந்த நபருடன் மல்லுகட்டியுள்ளார். அப்போது, கொள்ளையடிக்க வந்த நபரை ஏ.டி.எம் மையத்தினுள் வைத்து பூட்ட முயற்சித்துள்ளார் ருத்ரபதி. ஆனால், அந்த நபர் காவலாளியை வெளிப்பகுதியில் இருந்து உள்ளே இழுத்து தாக்கியிருக்கிறார்.
இந்தப் போராட்டத்தில் அந்த நபர்அணிந்திருந்த ஹெல்மட்டைப் பறித்த காவலாளி, அவன் வைத்திருந்த ஆயுதத்தையும் இருக்கமாகப் பற்றிக்கொண்டார். இதனால் காவலாளியைத் தாக்க முடியாமல் போன அந்த நபர், ஆயுதத்தை இருக்கமாக பற்றிக்கொண்டபடியே ஏ.டி.எம் மையத்தின் வாசல் கதவைத் திறந்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
ஏ.டி.எம் மைய காவலாளி ருத்ரபதி, நிராயுதபாணியாக இருந்த நிலையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க ஆயுதத்துடன் வந்த கொள்ளையனுடன் சண்டையிட்டு விரட்டியடித்திருக்கிறார். இதன் மூலம் வங்கிக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் கொள்ளை போகாமல் தடுத்துள்ளார். ருத்ரபதியின் இந்த தீரச் செயலை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இதே போல் தனது உயிரையும் பொருட்படுத்தாது கொள்ளையனுடன் சண்டையிட்ட விரட்டியடித்த ருத்ரபதியை வங்கி அலுவலர்களும், பொதுமக்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.
source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-atm-security-averted-theft-attempt
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக