மத்திய உள்துறையின் கீழ் வரும் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்கள், மாவோயிஸ்ட் விவகாரங்களை கவனிக்க, சீனியர் பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் பதவிவகித்தார். இவரது பணிக்காலம் டிசம்பர் 3-ம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் ஒரு வருட காலத்துக்கு பதவி நீட்டிப்பு தந்திருக்கிறது மத்திய அரசு. அதேசமயம், கோவையிலுள்ள தன் வயதான தாயாருடன் இருக்க விரும்பிய விஜயகுமார், இதை மேலிடத்திடமும் கூறியிருக்கிறார்.
ஆனால், ``இப்போதுள்ள நாட்டின் சூழ்நிலை உங்களுக்கே தெரியும். இன்னும் ஒரு வருடத்துக்கு நீங்கள் பணியிலிருக்க வேண்டும்’’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டதாம் டெல்லி. இதையடுத்துதான் பணி நீட்டிப்புக்கு விஜயகுமார் ஓகே சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
கடமை அழைக்கிறது... கம்பீரத்துடன் செல்லுங்கள் விஜயகுமார்!
பா.ஜ.க-வின் வேல் யாத்திரை நிறைவுவிழாக் கூட்டம் டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் நடந்தது. கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முதல்நாள் மாலையில்தான், திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. கூடவே, `200 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி’ என்ற கண்டிஷனும் விதிக்கப்பட்டதாம். சிறப்பு விருந்தினராக பட்டு வேஷ்டி, சட்டையில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
``தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதியளித்தது மோடிஜிதான். காங்கிரஸுடன் யார் கூட்டணிவைத்தாலும் தோல்விதான். மிஸ்டர் ஸ்டாலின் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று மேடையில் பேசியிருக்கிறார் சௌகான்.
இவரு, ஸ்டாலினை ஜாக்கிரதையா இருக்கச் சொல்றாரா... இல்லை, கூட்டணிக்குக் கூப்பிடறாரா?
தமிழகத்தின் உயர் பொறுப்பில் விடாமல் ஒட்டிகொண்டிருக்கும் கோட்டைப் பிரதிநிதியால், 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கியூவில் நிற்கிறார்களாம். அவரும் ஹாட்ரிக் அடிக்காமல் நகர மாட்டேன் என்கிறாராம். பல மாதங்களாக கியூவில் நிற்பதால் கடுப்பான ஜன‘ரஞ்சக’மான ஒருவர், `முடியலை... அவரை நகரச் சொல்லுங்க... நான் உள்ளே போகணும்’ என்று டெல்லி வரை அழுத்தம் கொடுக்கிறார். மீதமுள்ளவர்களும் தங்கள் பங்குக்கு கோட்டைப் பிரதிநிதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோட்டையைப்போல கட்டிவரும் இன்டர்நேஷனல் பள்ளியின் பின்னணி விவகாரங்களைத் தோண்டியெடுத்து வருமான வரித்துறையினருக்கு தகவல்களை அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்து, `டாடி’ பில்டரை உற்று கவனிக்கத் தொடங்கியிருக்கிறதாம் வருமான வரித்துறையின் கழுகுப் பார்வை. `சன்’க்கும் `டாடி’க்கும் சண்டையை மூட்டிவிட்றாதீங்கப்பா.
பில்டிங் ஸ்ட்ராங்... ஆனா, பேஸ்மென்ட் வீக்!
ரஜினி தனது அரசியல் கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்ததில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. `ரஜினியும் அர்ஜுனமூர்த்தியும் கன்னடத்தில் பேசிக்கொள்கிறார்கள். எங்களைத் தலைவர் பக்கத்தில் நெருங்கக்கூட விடுவதில்லை’ என்று இப்போதே மன்ற நிர்வாகிகளிடம் கொந்தளிப்பு எழ ஆரம்பித்துவிட்டது.
இது ரஜினி காதுக்கும் சென்றதால், அவரும் கடும் அப்செட். அர்ஜுனமூர்த்தி விவகாரம் குறித்து தமிழருவி மணியனிடம் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை ரஜினி ஆலோசித்திருக்கிறாராம். தன் பங்குக்கு அருவியாய் சில விஷயங்களை கொட்டித் தீர்த்தாராம் தமிழருவி. யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ரஜினி.
இப்பவே கண்ணைக் கட்டுதே!
2016 சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது தி.மு.க. அப்போது காங்கிரஸ் சார்பில், தற்போதைய திருச்சி எம்.பி-யான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அ.தி.மு.க-வின் ரத்தினசபாபதி வெற்றிபெற்றார். இந்தநிலையில், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கியில் தி.மு.க-வே களமிறங்க முடிவெடுத்திருக்கிறதாம். முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், தனக்கு சீட் கேட்டு மேலிடத்தில் காய்நகர்த்திவருகிறார். சமீபத்தில் அ.ம.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்திருக்கும் பரணி கார்த்திகேயனும் சீட்டுக்குக் குறிவைத்திருப்பதால் அறந்தாங்கியில் அனலடிக்கிறது சீட்டுப் போட்டி. தி.மு.க-வின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரான பரணி கார்த்திகேயன், மணமேல்குடி ஒன்றிய சேர்மனாகவும் இருக்கிறார். ``கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கியதால், தொகுதி கைவிட்டுப்போனது. இப்போது கட்சிக்குள்ளேயே போட்டி எழுந்திருப்பதால், மீண்டும் கைவிட்டுப் போகுமோ?’’ என்கிற உதறலில் இருக்கிறார்கள் உதயம் சண்முகத்தின் ஆதரவாளர்கள்.
`உதயம்’ நிதியை `கவனித்தால்’ ஒருவேளை சீட்டு கிடைக்கலாம்!
தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு எந்த வகையிலாவது செக் வைத்தே ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மும்முரமாகியிருக்கிறது. இந்த வகையில்தான் தி.மு.க-வில் இணைந்திருந்தாலும், தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியைப் பற்றி எடப்பாடிக்கு சிலர் நினைவூட்டினார்களாம்.
உடனடியாக தனக்கு நெருக்கமான ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் ஜோதியை அணுகச் சொன்ன எடப்பாடி தரப்பு, ஆ.ராசாவுக்கு எதிரான கருத்துகளை ஜோதி வாயாலேயே சொல்லவைத்துவிட்டது என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.
ஜோ‘தீ’ ஒளிருமா... இருளுமா என்று போகப் போகத்தான் தெரியும்!
source https://www.vikatan.com/news/politics/mp-cms-advice-to-stalin-from-upset-rajini-kazhugar-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக