கன்னியாகுமரியைச் சேர்ந்த மணி தணிகை குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``சி.எம் செல்லுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் சக்திநாதன் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது ஆன்லைனில் மூலமாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில், ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு புகார்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மின்னஞ்சல் முகவரி மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகார்தாரர் கொடுத்திருக்கும் முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக இருக்கின்ற இந்தநிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் நவம்பர் 11-ம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையின் மூலம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை ஆணையம் நியமித்து விசாரணை செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாக இருக்கிறது. துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே இருக்கிறது. உயரதிகாரி மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் உயர் கல்வித்துறை தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டு, சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, சூரப்பா மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கவும், உயர் கல்வித் துறை தலைமைச் செயலர் வெளியிட்டிருக்கும் அரசாணையை ரத்துசெய்யவும் உத்தரவிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
Also Read: `கமலைத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஆளுநர்?!' - சூரப்பா விவகாரத்தில் தொடரும் சர்ச்சை
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ``அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கட்டுப்பாட்டில் கீழ் வராது. மேலும், பல்கலைக்கழகம் தொடர்புடையது என்பதால் வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சூரப்பா தரப்பில், ``அண்ணா பல்கலைக்கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும், அதன் உறுப்புக் கல்லூரிகள் பெரும்பாலானவை, தென் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. எனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை விசாரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன’’ என்று வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, தன்னை இந்த வழக்கில் சேர்க்கக் கோரியதை நீதிமன்றம் ஏற்கிறது. சூரப்பவை இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக நீதிமன்றம் சேர்க்கிறது.
மேலும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-hc-transfers-surappa-case-to-chennai-bench
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக