முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து முன்னாள் பேராசிரியர் பொன்னுலிங்கம் எழுதிய `தாமரை நாயகன்’ என்ற புத்தக வெளியீட்டுவிழா கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தில் நடந்தது. விவேகானந்தா ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்யானந்ததாஜி மஹராஜ் தலைமை வகித்தார். பா.ஜ.க குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புத்தகத்தை வெளியிட்டார். பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,``மத்தியப்பிரதேசத்தில் ஏற்கெனவே மதமாற்ற தடைச்சட்டம் இருக்கிறது. இப்போது கொண்டுவந்திருப்பது சட்டத் திருத்தம்தான். மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும்போது இப்போதைய சத்தீஸ்காரை உள்ளடக்கிய மத்தியப்பிரதேசம், ஒடிசா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலைவாழ் மக்களை மோசடியாக மதம் மாற்றுகிற காரணத்தால் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றபோது, இது சட்டப்படி செல்லுபடி என தெளிவாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2003-ல் தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தார். ஆனால், இடைத்தேர்தலில் தோற்றுப்போனதால் அரசியல் காரணங்களுக்காக அது வாபஸ் பெறப்பட்டது. ஆசை காட்டி, அச்சுறுத்தி மதமாற்றம் செய்வது நிச்சயம் குற்றம். மதமாற்ற தடைச்சட்டம் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா என்பதுபற்றி அறிக்கை தயாரிக்கும் குழுதான் முடிவு செய்யும்.
Also Read: சமீபகாலமாக ஹெச்.ராஜா வெளியில் வராதது பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults
முதல்வர் வேட்பாளர் சம்பந்தமாக கூட்டணிக்குள் எந்தச் சர்ச்சையும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து அ.தி.மு.க ஏகமனதாகத் தீர்மானம் செய்திருக்கிறது. பா.ஜ.க தேசியக் கட்சி என்பதால், அகில இந்தியத் தலைமை அறிவிக்கும் என மாநிலத் தலைவர் முருகன் கூறினார். இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? அது தி.மு.க தூண்டுதலால் சர்ச்சை ஆக்கப்பட்டுள்ளது. இதுபோல துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதும் சர்ச்சை ஆக்கப்பட்டுள்ளது. வேல்யாத்திரைக்கு பிறகு தி.மு.க-வில் இருந்து அதிகமானோர் பா.ஜ.க-வில் வந்து இணைகிறார்கள்.
அழகிரி, தனது ஆதரவாளர்களைச் சந்திக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது. எனது அருமை நண்பர் அழகிரியின் முயற்சிகள் எதுவானாலும் வெற்றிபெறட்டும். கமல் போனமுறை தேர்தலிலேயே மக்களால் ஒதுக்கப்பட்டார். திரையுலகப் பிரபலம் என்பதால், பெரிய அளவில் சக்தி உள்ளவராக இருப்பார் என்று கடந்தமுறை சிலர் வாக்களித்திருக்கலாம். இந்தத் தேர்தலில் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 2021- தேர்தல் முடிவு வெளிவரும்போது பா.ஜ.க தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-h-raja-speaks-about-various-topics-in-nagercoil-press-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக