Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

நடிகை சித்ராவின் செல்போனால் வெளிவந்த உண்மைகள் - தற்கொலைக்குத் துண்டியது யார்?

நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 9-ம் அதிகாலையில் ஷூட்டிங் முடிந்து பூந்தமல்லி அருகே உள்ள ஹோட்டல் அறைக்கு கணவர் ஹேமந்த்துடன் வந்த சித்ரா, அடுத்த சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கியிருக்கிறார். அவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், சித்ரா தற்கொலைதான் செய்திருக்கிறார் என்று போலீஸாரிடம் கூறியிருக்கின்றனர். அதனால், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்றும் அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்ற கோணத்தில் நசரத்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடிகை சித்ரா

அம்பத்தூர் துணை கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் விசாரணை நடத்தினர். சித்ராவின் செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சித்ராவின் செல்போனுக்கு தினேஷ் என்பவர் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார். யார் அவர் என்று போலீஸார் விசாரித்தபோது தினேஷ்தான், சித்ரா கலந்து கொள்ளும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் சித்ரா தொடர்பான தகவல்களை தினேஷிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

Also Read: சித்ரா மரணம்: `செல்போன் பதிவுகள்; சிசிடிவி காட்சி! -தாய், சக நடிகர்களிடம் விசாரிக்க போலீஸ் முடிவு

இந்தநிலையில் சித்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன் கடைத் திறப்பு விழாவுக்கு சென்றிருக்கிறார். அந்த விழாவில் அறிமுகமாகிய அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவின் செல்போன் நம்பருக்கு குட்மார்னிங், குட்நைட் என்ற மெசேஜ்களை முதலில் அனுப்பி வந்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் நட்பாக மெசேஜ் மூலம் தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்த அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். சித்ராவின் செல்போனில் சில தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர். அதனால் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்.

சித்ரா உடல் பிரேதப் பரிசோதனை

சித்ராவின் மரணம் தொடர்பாக பல கோணங்களில் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 9-ம் தேதி அமைதியாக இருந்த அவரின் அம்மா விஜயா, டிசம்பர் 10-ம் தேதி கண்ணீர்மல்க மீடியா முன் சில தகவல்களை வெளிப்படையாகக் கூறினார். அதில், ஹேமந்த் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டுக்களை ஹேமந்த்தின் பெற்றோர் மறுத்திருக்கின்றனர். ஹேமந்த்தான் சித்ராவை அடித்துக் கொலை செய்திருக்கிறார் என்ற பகிரங்க குற்றச்சாட்டை சித்ராவின் அம்மா விஜயா கூறியதால், அதுதொடர்பாக போலீஸார் விசாரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.

சித்ரா, தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலை அவரின் ரசிகர்களும் நெருங்கிய தோழிகளும் இன்னமும் நம்ப மறுத்துவருகின்றனர். ஆனால், போலீஸாரோ சித்ரா தற்கொலைதான் செய்திருக்கிறார் என்று கூறிவருகின்றனர். சித்ராவின் முழு பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தப்பிறகுதான் அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற தகவல் தெரியவரும். இதற்கிடையில் ஹேமந்த் தொடர்பாக போலீஸாருக்குக் கிடைத்த தகவல்கள் சித்ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அடுத்தாண்டு பொங்கலுக்குப் பிறகு திருமணம் நடத்த முடிவு செய்திருந்த நேரத்தில், எதற்காக அவசரப்பட்டு கோடம்பாக்கம் பத்திர பதிவு அலுவலகத்தில் இருவரும் திருமணத்தைப் பதிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால், சித்ராவின் திருமணத்துக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அவரின் குடும்பத்தினரிடமும் ஹேமந்த்திடம் போலீஸார் விசாரித்திருக்கின்றனர். அதுதொடர்பாகவும் சில தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது.

Also Read: சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை

சித்ரா உடல் பிரேதப் பரிசோதனை

அக்டோபர் மாதத்தில் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்திருப்பதால் ஆர்.டிஓ விசாரணை நடந்து வருகிறது. ஆர்.டி.ஓ அளிக்கும் விசாரணை அறிக்கையும் இந்த வழக்கில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, சித்ராவின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்கு அடுத்தக்கட்டத்துக்கு நகரும் என்கின்றனர் போலீஸார்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``நடிகை சித்ராவின் மரணம், தற்கொலை எனத் தெரியவந்திருக்கிறது. அதுதொடர்பாக ஹேமந்த்திடம் நேற்றிரவு 9 மணி வரை விசாரணை நடத்தினோம். இன்றும் அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு சித்ராவின் செல்போன் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சந்தேகப்படுவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். கொரோனா காரணமாக சித்ராவுக்கு பண நெருக்கடி இருந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்தப்பிறகு அவர்களின் திருமணத்தில் சில சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. சித்ராவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், ஹேமந்த்தைத் திருமணம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் அவசரப்பட்டு இருவரும் பதிவுத் திருமணம் செய்திருக்கின்றனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/new-details-emerges-in-actress-chitra-death-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக