திருநங்கைகள் என்றாலே சமுதாயத்தில் மாறுபட்ட கருத்துகளும் பார்வைகளும் இருந்து வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சமூகத்திலிருந்து நிறைய வெற்றிக்கதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் இந்தியாவிலேயே முதல்முறையாக, 30 திருநங்கைகள் ஒன்றிணைந்து தூத்துக்குடியில் கூட்டுறவு பால் பண்ணையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு சந்தீப் நகரில் உள்ளது `மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்'. திருநர் உரிமை கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான கிரேஸ் பானுவின் தலைமையில் 85 திருநங்கைகள் இங்கு வசித்து வருகிறார்கள். இதில், 30 திருநங்கைகளுக்கு தலா ரூ.2.10,000 மதிப்பீட்டில் பசுமை வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1,15,000 மதிப்பீட்டில் மாட்டுத் தொழுவம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சோலார் மின்சாரம் ஆகியவை அமைக்கப்பட்டு தனி நகராகவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை வளாகத்திலேயே பால் பண்ணையும் செயல்பட்டு வருகிறது.
``30 கறவை மாடுகள்... மாதம் ரூ.2 லட்சம். அசத்தும் திருநங்கைகள்" என்ற தலைப்பில் கடந்த 10.12.20 தேதியிட்ட `பசுமைவிகடன்’ இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். திருநங்கைகளின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்குத் தேவையான உதவிகளை இலவசமாகச் செய்து தருவதாக உறுதியளித்திருந்தார் ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார். இதையடுத்து தேவையான உபகரணங்கள், உதவிகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், `தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்' சார்பில், 2020-ம் ஆண்டு தரமான பாலை உற்பத்தி செய்து ஒன்றியத்துக்கு வழங்கிய கூட்டுறவு சங்கங்களில் கோவில்பட்டி, `மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்’ முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை வழங்கினார். இதுகுறித்து கிரேஸ்பானுவிடம் பேசினோம், ``பிறப்பால் உயர்வு, தாழ்வு பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால், எங்களைப் பார்த்தவுடன் பலரும் தெரிந்தோ, தெரியாமலோ ஒதுங்கிச் செல்கிறார்கள். தீண்டாமை, அவமானம், வெறுப்பு, ஆதரவு தராத சமூகம் ஆகிய பல இன்னல்களை இப்போவும் சந்திச்சுட்டு வர்றோம். ஆனா, இந்த இன்னல்களையும் தடைகளையும் தாண்டி, சமூகத்தில் போராடி கலை, தொழில், சினிமா, மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் தடம் பதிச்சிட்டு வர்றோம். இருந்தாலும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தினம் தினம் செத்துப் பிழைச்சுட்டுதான் இருக்கோம்.
கோவில்பட்டியில 80-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்காங்க. ஃபேமிலியாக வசிக்கிற வீட்டுக்கு 3,000 ரூபா வாடகைன்னா, எங்களுக்கு மட்டும் 6,000 வாடகை. சரி போனா போகுதுன்னு வாடகை கொடுத்தாலும், திடுதிப்புனு காலி பண்ணச் சொல்லிடுவாங்க. இதனால, ஒரு வருஷத்துல அதிகபட்சமா ஆறு ஏழு வீடு மாறியிருப்போம். இந்தச் சூழ்நிலையிலதான். குடியிருக்க இடமும், அதுல வீடும் கட்டித் தர கேட்கலான்னுதான் முந்தைய கலெக்டர் (தற்போதைய திருவண்ணாமலை ஆட்சியர்) சந்தீப் நந்தூரி சார்கிட்ட மனு கொடுத்தோம். எங்களை முதல்முறையா சேர்ல உட்காரச் சொல்லி எங்க கோரிக்கையைக் கூர்ந்து கேட்டு, ``சரிம்மா நடவடிக்கை எடுக்குறேன்”ன்னு சொன்னார்.
வழக்கமா சொல்ற மாதிரி சும்மா பார்மாலிட்டிக்குதான் சொல்றாருன்னு நினைச்சோம். ஆனா, ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் சாரை பார்க்கப் போனோம். ``ஒரு வாரத்துக்குள்ள கோவில்பட்டியிலயே இடம் ஒதுக்கி பசுமை வீடு திட்டத்துல தகுதி இருப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யுறேன்”ன்னு சொன்னார். பசுமை வீடு திட்டத்தில் பயன்பெற எங்களில் 30 பேரிடம் எல்லா ஆவணங்களும் இருந்துச்சு. மந்தித்தோப்பு மலையடிவாரப் பகுதியில 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கி 30 வீடுகள் கட்டும் பணி நடந்துக்கிட்டிருந்துச்சு.
திரும்பவும் கலெக்டர் சார்ட்ட போனோம், ``குடியிருக்க வீடு கட்டித்தர ஏற்பாடு செஞ்சதுக்கு நன்றி. கூடவே எங்களோட வாழ்வாதாரத்துக்காக தொழிலுக்கு ஏற்பாடு செஞ்சா உதவியா இருக்கும்”னு சொன்னோம். ``உங்க குடியிருப்புப் பகுதியில குடியிருப்புக்குப் போக மீதி நிலம் இருக்கே அங்கேயே பால் பண்ணை வைக்கலாம்ங்கிற ஐடியாவை கலெக்டர் சார்தான் சொன்னார். அடுத்த ஒரு வாரத்தில் கோவில்பட்டி மத்தியகூட்டுறவு வங்கியில் கறவை மாடுகள் வாங்குவதற்காக லோன் கேட்டோம். கலெக்டர் சாரின் பரிந்துரையால் ஒருவருக்கு ரெண்டு மாடுகள் வீதம் 30 பேருக்கு 60 மாடுகள் வாங்க லோன் கிடைச்சுது. இதற்கிடையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் மாட்டுத்தொழுவம் கட்டும் பணியும் நடந்தது. எங்களில் ஒருவரது அப்பா மாடு வளர்ப்பவர் என்பதால், அவரை அழைச்சுக்கிட்டு விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஆனைக்கூட்டம், பாலவநத்தம், திருச்சுழி போன்ற பகுதிகளிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மாடுகளைத் தேர்வு செஞ்சோம்.
கலெக்டர் சாரின் பரிந்துரையால் ஆவின் நிர்வாகத்திடம் விற்பனைக்காகப் பேசினோம். தனி சொசைட்டியாகப் பதிவு செஞ்சா மட்டும்தான் பாலை கொள்முதல் செய்ய முடியும்னு சொல்லிட்டாங்க. திருநங்கைகள் இணைந்து நடத்தும் பால் பண்ணையைப் பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்வதும் இதுதான் முதல்முறை என்பதால், பதிவுத்துறை அதிகாரிகளும் பலமுறை பரிசீலனை செய்த பிறகே ``TUT 28 –மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்” என்ற பெயரில் சொசைட்டியப் பதிவு செஞ்சோம்.
எங்களோட குடியிருப்புகள், பால் பண்ணையை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சாரும், கலெக்டர் சந்தீப் நந்தூரி சாரும்தான் திறந்து வச்சாங்க. 30 பேருக்கு முதல் கட்டமா தலா ஒரு மாடு வீதம் 30 மாடுகள் வாங்கியிருக்கோம். 30 மாடுகள் மூலம் தினமும் 230 லிட்டர் பால் வரை கிடைக்குது. ஒரு லிட்டர் பால் ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகுது. ரூ.2 லட்சம் வரை வருமானமாக் கிடைச்சுட்டு இருக்கு. இதுல 30 மாடுகளுக்கான மாதத்தவணை ரூ.90,000 கட்டுறோம். மாட்டுத்தீவனம், பராமரிப்புச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை சேமிச்சு வச்சுட்டு வர்றோம். அடுத்த மாசம் 30 பேருக்கும் இரண்டாவது மாடுக்கான லோன் தொகை கிடைச்சுடும். ஆளுக்கு இரண்டு மாடுகள் எனும்போது கறக்கும் பாலின் அளவும் வருமானமும் இரட்டிப்பாகும்.
``இவங்களுக்கெல்லம் போயி கலெக்டர் சார் லோன் வாங்கிக் கொடுக்கிறாரே. ஒழுங்கா லோனைக் கட்டுவாங்களான்னே தெரியல”ன்னு அதிகாரிகள் சிலர் பேசியதை காதுபடக் கேட்டிருக்கோம். அந்த வைராக்கியத்துல முதலில் லோனைக் கட்டி முடிப்பது என்பதே எங்களின் நோக்கம். இந்த மாட்டுப்பண்ணையை இன்னும் விரிவுபடுத்தணும். ஆதரவற்ற பல திருநங்கைகளுக்கு வேலை கொடுக்கணும். மாடுகளைக் கண்ணும் கருத்துமா பாத்துக்கிறதும், சரியான நேரத்துக்கு தீவனம், மாடுகளின் மீதான தனிக்கவனம் ஆகியவற்றால்தான் பாலின் தரத்துல நாங்க நிலைச்சிருக்கோம். கால்நடை மருத்துவர் சொல்லும் ஐடியாக்களைம் பின்பற்றி வருகிறோம். இவையெல்லாம்தான் பாலின் தரத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுவதற்கு முக்கிய காரணம்” என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/kovilpatti-transgender-milk-society-got-recognition-for-best-milk-quality-in-the-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக