Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

கல் கடோட், பேட்டி ஜென்கின்ஸ் ? நிகழ மறுத்த அற்புதமா வொண்டர் வுமன் 1984? #WW84

நாம் மனதில் நினைக்கும் விஷயத்தை நமக்குத் தரும் மந்திரக்கல். ஆனால், அதில் ஒரு குட்டி ட்விஸ்ட் இருக்கிறது. இந்த மந்திரக்கல்லால் நிகழும் ஆபத்துகளை எப்படி வொண்டர் வுமன் எதிர்கொள்கிறார் என்பதுதான் 'Wonder Woman 1984' (#WW84) படத்தின் ஒன்லைன்.

வொண்டர் வுமன் (முதல் பாகம் 2017)

மனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசானியன்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா. அங்கு இருக்கும் ஆயுதங்களால்தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஒரு கட்டத்தில் ஜெர்மன் படையிடமிருந்து தப்பிவரும் ஸ்டீவை அவள் காப்பாற்றுகிறாள். ஜெர்மன் படையிடமிருந்து கைப்பற்றி வந்த புத்தகத்தை, லண்டனில் இருக்கும் தனது சீனியர்களிடம் ஸ்டீவ் தர வேண்டும்.

Patty Jenkins & Gal Gadot

எனவே ஜெர்மனியின் தலைவர்தான் தற்கால ஆரீஸ் என நினைக்கும் டயானா, ஸ்டீவுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்புகிறாள். பின்பு அவள் சந்திக்கும் பிரச்னைகள், யார் ஆரீஸ், டயானா இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை அதிரடியுடன் எமோஷனலாய் சொன்னது வொண்டர் வுமன் முதல் பாகம்.

இரண்டாம் பாகம்

முதல் பாகம் உலகப் போர் சூழல் என்றால், இந்தப் பாகம் முழுக்க பனிப்போர் சூழலில் நடக்கிறது. மறைந்த காதலர் ஸ்டீவின் நினைவில் வாழ்கிறார் டயானா (கல் கடோட்). டயானா வேலை செய்யும் அலுவலகத்திலேயே 'ஹா ஹா ஹாசினியாக' வாழ்கிறார் பார்பரா. தொழிலதிபரான மேக்ஸ்வெல் லார்டு இவர்கள் இருக்கும் அலுவலகத்துக்கு ஒரு மந்திரக்கல்லைத் தேடி வருகிறார். விரும்பியதைக் கொடுக்கும் மந்திரக் கல்லிடம் 'ஆளுக்கொரு ஆசையை' மூவரும் சொல்கிறார்கள். அது இவர்களை மட்டுமல்லாமல், உலகையே எப்படி பாதிக்கிறது என்பதாய் முடிகிறது படம்.

Wonder Woman

கொரோனாவுடன் வாழப் பழகிய நாள்களில் 'டெனெட்'டுக்குப் பிறகு மீண்டும் அரங்கு பாதி நிறைந்த நிலையில் பார்த்த திரைப்படம் 'வொண்டர் வுமன் 1984' தான். மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாகம் தந்த பாதிப்பில்தான் இத்தனை கூட்டமும். பிவிஆர் திரையில் எப்படியும் கால் மணி நேரம் லேட்டாக போடுவார்கள் என நினைத்து உள்ளே நுழைந்தாலும், படத்தின் கதை ஆரம்பிப்பதற்குள் இன்டர்வெல் வந்துவிடுகிறது. முதல் பாகம் தந்த பிரமிப்பில் பாதிகூட இந்தப் படம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 'டெனெட்'டுக்கும் இந்தப் படத்துக்கும் சில ஒற்றுமைகள் கூட உண்டு. வில்லனின் மகன் சென்டிமெண்ட், பாவப்பட்ட சோவியத் யூனியனை வில்லனாக்குவது, அதைவிட முக்கியமான ஒற்றுமை இதுவும் நம்மை அதிகம் எதிர்பார்க்க வைத்து, 'Why blood same Blood' சொல்ல வைத்திருக்கிறது.

இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸும், கல் கடோட்டும் எங்கே சறுக்கினார்கள் என தெரியவில்லை. மிகவும் பலவீனமான ஒரு கதை. அதை இன்னும் நோகடிக்கும் விதத்தில் எழுதிய திரைக்கதை, அவசரகதியில் நகரும் இறுதிக் காட்சிகள் என எல்லாமே 'ஏங்க இப்படி?' என கேட்க வைக்கிறது. கல் கடோட்டின் காதலர் ஸ்டீவ் ட்ரெவராக வரும் கிறிஸ் பைனின் கதாபாத்திரமும் ஏனாதானோவென எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் கல் கடோட்டும், ஸ்டீவ் ட்ரெவரும் செல்லும் அந்த விமானப் பயணத்தின் போது பட்டாசு வெடிக்கும் காட்சியெல்லாம், 'என்னப்பா ரெமோ வாடையெல்லாம் அடிக்குது' ரேஞ்சுக்கு இருக்கிறது. கல் கடோட் மட்டும் ரத்தம் சிந்துகிறார்; அடி வாங்குகிறார்; குழந்தைகளைக் காப்பாற்றுகிறார்; குண்டுகளால் துளைக்கப்படுகிறார்; மக்களிடம் மன்றாடுகிறார். ஆனால், எல்லாமே அந்நியப்பட்டு நிற்கிறது.

Cheetah

'ஆசையே துன்பத்துக்குக் காரணம்' என்கிற தத்துவார்த்த ஒன்லைன்தான் படத்தின் கரு. கதையில் சொல்லும் லாஜிக்படி கிரேக்க இதிகாசத்தில் வரும் டோலோஸ் கடவுள் செய்த மந்திரக் கல்... இதை வைத்துக்கொண்டு ஒன்று மார்வெல் சினிமாக்கள் போல் காமெடியாகவே எடுத்திருக்கலாம். அல்லது DC சினிமாக்கள் கதைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கருதி அதன் போக்கில் சீரியஸாக விட்டிருக்கலாம். ஆனால், அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல்...

ஆரம்பத்தில் வரும் 15 நிமிடக் காட்சிகளும், 'உண்மை'க்காக டயானாவின் சித்தி தரும் லெக்சரும், எதற்கென்றே தெரியவில்லை. ஒருவேளை மனதுக்கு உண்மையாக இருங்கள், பெரிதாக ஆசைப்படாதீர்கள் என சொல்ல வருகிறார்களா தெரியவில்லை. 'ஜஸ்டிஸ் லீக்' பார்வையாளனுக்கு தந்த உணர்வைத்தான் வொண்டர் வுமனின் இந்தப் பாகமும் தருகிறது. 1984 என தலைப்பு வைத்துவிட்டு அந்தக் காலக்கட்டத்தில் படத்தை எடுப்பது தவறில்லை. ஆனால், படமே 1980களில் எடுத்த படம் போல இருக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர், 'கிங்ஸ்மேன்' படம் போன்றவற்றில் பார்த்த பெட்ரோ பாஸ்கல் தான் மேக்ஸ் லார்டாக வருகிறார்.

Wonder Woman 1984

ஆனால், டிம் பர்டன் இயக்கிய 'பேட்மேன்' படங்களில் வரும் வில்லன்கள் போல அடிவாங்கவே அளவெடுத்து செய்தது போல் இருக்கிறார் மேக்ஸ் லார்டு. அதுவும் பார்பராவாக வரும் காமிக்ஸ் கதாபாத்திரமான சிறுத்தை பாத்திரத்துக்கு கழுதைப்புலியைப் போல் வேஷம் கட்டிவிட்டிருக்கிறார்கள். அனைத்துத் திரைப்படங்களும் தோல்வியடைந்து நஷ்டத்தில் DC தள்ளாடிய போது, மீட்பனாக வந்தார் கிறிஸ்டோபர் நோலன். அதன் பின்னும் எல்லாம் தோல்வி. அதற்கு அடுத்து மிகப்பெரிய மீட்பர் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய விண்டர் வுமன் திரைப்படம்தான். எமோஷனல் காட்சிகள், பெண்ணிய வசனங்கள், காமெடிக் காட்சிகள், சண்டைகள், முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என எல்லாவுமாய் உருமாறி ஹிட் அடித்தது வொண்டர் வுமன். இரண்டாம் பாகத்தில் 'I renounce my wish' என்கிற வசனம் பிரபலம். எல்லாவற்றையும் கொடுத்த பேட்டி ஜென்கின்ஸே அதை மீண்டும் DC காமிக்ஸிடமிருந்து எடுத்துக்கொண்டாரோ என தோன்றுகிறது.

இசை ஹான்ஸ் ஜிம்மர். படத்தின் தொடக்கத்தில் வரும் எழுச்சி இசையில் மட்டும் அவர் தெரிகிறார். முதல் பாகத்தில் அதிரடி சேர்த்த ரூபர்ட் க்ரெக்சனின் பின்னணி இசையை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பின்னணி இசையில் கல் கடோட் செய்யும் அனைத்து சண்டைக் காட்சிகளும் கூஸ் பம்ஸ் ரகம். தொடக்கத்தில் வில்லன் மேக்ஸ் லார்ட், பார்பராவை சந்திக்க வந்திருக்கிறான் எனும்போதே அவன் மீது சந்தேகப் பார்வையை பதித்துவிடுவாள் டயானா. உண்மையில் அவள் அந்தளவு புத்திசாலி! ஆனால், பிற்பாதியில் அவளுக்குப் பிரச்னை என்னவென்று தெரிந்தும் அதை சரி செய்யாமல் விடாபிடியாக 'பூப்பாதை'யிலேயே பயணிக்க முற்படுவது முரண். DCEU-வின் தொடர் கதையில் இந்தப் படம் சேராமல் தனித்து நிற்பது முதலில் நல்ல விஷயமாகத் தெரிந்தாலும் இத்தனை பலவீனமான படத்தை ஸ்கிப் செய்தாலும் எந்தப் பாதிப்புமில்லை என்றே தெரிகிறது.

Wonder Woman 1984
எமோஷனல் இல்லாத டெனெட், வொண்டர் வுமன் 1984 என அடித்துப்பிடித்து திரையரங்குகள் சென்றாலும் சோர்வையே இவை தருகின்றன. 2020ம் ஆண்டின் மீதுதான் இந்தத் தோல்விகளையும் எழுத வேண்டும் போல. மூன்றாம் பாகம் நிகழ்காலத்தில் நிகழும் சம்பவங்களை வைத்துத்தான் என உறுதியளித்திருக்கிறார்கள் ஜென்கின்ஸும், கல் கடோட்டும். அந்த பாகத்துக்காக இன்னும் சில ஆண்டுகள் இருக்க நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


source https://cinema.vikatan.com/hollywood/gal-gadot-and-patty-jenkins-wonder-woman-1984-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக