`சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் இரையுமன் துறை, தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மக்களை சந்தித்தார். பின்னர் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக பகுதியை பார்வையிட்டார். அப்போது துறைமுகம் சரியாக அமைக்காததால் மீனவர்கள் உயிரிழப்பு தொடர்ந்து நடந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கி நடந்து சென்று துறைமுகத்தின் முகதுவாரம் பகுதியை பார்வையிட்டார்.
துறைமுகப்பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "தமிழகத்தில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதற்கு இந்த துறைமுகம் ஒரு உதாரணம். தொடர்ந்து உயிர்பலிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டாவதாக ஒதுக்கப்பட்ட நிதியையும் அரைகுறையாக செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க முறைகேடுகள்தான் நடக்கிறது" என்றார்.
பின்னர், இரையுமன்துறை பகுதியில் மக்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினர் கமல்ஹாசன். அவரிடம், `எம்.ஜி.ஆரின் வாரிசு என கூறும் நீங்கள் எம்.ஜி.ஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பீர்களா?', `உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரகசிய கூட்டணி பேசியது உண்மையா?' என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தற்போது அந்த தேவை வந்துள்ளது.
தி.மு.க-வுடன் கூட்டணி குறித்து உதயநிதி உடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யுகம் தான். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்த தகவலை கண்டிப்பாக மறுக்கிறேன். கேரளா உள்ளாட்சி தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம் இது.
நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ரசிகர்கள் சந்தோஷமாக ஏற்கிறார்கள். மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் அதை அறிவிப்போம். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்" என்றார். ரஜினியின் மக்கள் மன்றத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரை நிர்வாகியாக நியமித்தது பற்றி கேட்டதற்கு, "முதன் முறையாக கட்சி தொடங்கும்போது இதுபோன்ற தடுமாற்றங்கள் ஏற்படும்" என்றார் கமல்ஹாசன்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kamalhassan-says-few-politicians-have-concern-over-my-political-relationship-with-rajini
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக