Ad

புதன், 16 டிசம்பர், 2020

சூப்பர் ஸ்மித்தா, கிங் கோலியா... அடிலெய்ட் பிங்க் டெஸ்ட்டில் என்ன ஸ்பெஷல்? #AUSvIND

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த முறை தொடரை வென்ற குதூகலத்துடன் இந்தியாவும், இந்தமுறை பலம் கொண்ட அணியாக மோதும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கையாகத் தொடரை எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள். முதல் போட்டியே பிங்க் பாலில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற, இரு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர்கள்தான், அதிகப் பேர் பார்க்கும் போட்டியாக உருவெடுத்துள்ளன. அதற்குக் காரணம், மைதானத்தில் வீரர்கள் விளாசும் சதங்கள், பெளலர்கள் வீசும் பவுன்சர்கள், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் வார்த்தைப் போர்கள் என களம் களை கட்டுவதுதான்.

.

பார்டர் - கவாஸ்கர் டிராபி வரலாறு என்ன?

1996/97-ம் ஆண்டு முதன்முதலாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் தொடர்கள், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆகிய இருவரையும் கௌரவப்படுத்தும் விதமாக பார்டர் - கவாஸ்கர் டிராபி என்று பெயரிட்டு நடத்தப்பட்டன. அன்று முதல் இந்த பாரம்பரியம் தொடர்கிறது.

1996-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மொத்தம் 14 தொடர்களை எதிர்கொண்டு விளையாடி, அதில் இந்தியா 8 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் வென்றிருக்க, ஒரு தொடர் மட்டும் டிராவில் முடிந்துள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள பார்டர்- கவாஸ்கர் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 3,262 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருக்க, 111 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் கும்ப்ளே முதல் இடத்தில் உள்ளார்.

#AUSvIND

இந்திய அணியின் பயிற்சிப் போட்டிகள்:

ஐபிஎல் முடிந்தவுடன் டெஸ்ட் வீரர்களையும், ஆஸ்திரலியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது, இந்திய அணி. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஒரு செட் வீரர்கள் ஆட , மற்றொரு செட் வீரர்கள் டெஸ்ட் பயிற்சி ஆட்டங்களில் ஆட என முதன்முறையாக ஒரே நேரத்தில் இரு விதமான போட்டிகளை இந்தியா ஆடியது.

முதல் பயிற்சி போட்டி ரெட் பாலிலும், இரண்டாவது போட்டி பிங்க் பாலிலும் பகல் இரவுப் போட்டியாக நடந்தது. முதல் போட்டியில் ரஹானே சதம் அடித்து அசத்த, புஜாரா மற்றும் சஹா அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இரண்டாவது போட்டியில் விஹாரி, ரிஷப் பன்ட் சதம் அடித்தும், மயாங்க் அகர்வால் மற்றும் ஷுபம் கில் அரை சதம் அடித்தும் பேட்டிங் பலத்தை நிரூபித்தனர்.

இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆடாத விராட் கோலியும், புஜாராவும் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் நாதன் லயானை எதிர்கொள்ள ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டனர். வலைப் பயிற்சியில், பிட்ச்சில் ரஃப்னஸ் மற்றும் வெடிப்பை உண்டாக்கி, சுந்தர் மற்றும் அஷ்வினைப் அந்த இடங்களில் பெளலிங் போடச் செய்து பிரத்யேகப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் ப்ளேயிங் லெவன்:

கடந்த முறை வார்னர், ஸ்மித் ஆடாத நிலையில் தொடரை இழந்தது ஆஸ்திரேலியா. இந்தமுறை இழந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு வலுசேர்க்கும் வகையில் லாபுசேனும் பேட்டிங்கில் பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். முதல் டெஸ்ட்டில் காயம் காரணமாக வார்னர் ஆடாத நிலையில் அனைவரின் கவனமும் ஸ்டீவ் ஸமித் மற்றும் லாபுசேன் மீதுதான் திரும்பியுள்ளது. மேத்யூ வேட், ட்ராவிஸ் ஹெட், ஜோ பர்ன்ஸ் என மற்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஆஸ்திரலியா அணியைப் பொறுத்தவரை, ஸ்மித் மற்றும் லாபுசேன் என்ற இருவீரர்களின் பேட்டிங் செயல்பாட்டைப் பொறுத்தே ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் உயரும்.

இந்தியாவுக்கு எதிரான கடந்த 8 டெஸ்டில் ஆடி, 7 சதங்களை விளாசியுள்ள ஸ்டீவ் ஸ்மித்தான் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் சூப்பர் ஸ்டாராக இருக்கப்போகிறார், இவரை காலி செய்வதில்தான் இந்திய அணியின் வெற்றியே அடங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை விட, பெளலிங்கில் இருமடங்கு பலத்தைக் கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த 4 பெளலர்களும் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தத் தயாராகி வருகின்றனர். பேட் கம்மின்ஸின் ஸ்விங், ஹேசல்வுட்டின் லென்த், ஸ்டார்க்கின் வேகம், லயானின் சுழல் என நாலாப் புறமும் அச்சுறுத்தல் இந்தியாவுக்குத் தயாராக இருக்கிறது. இவர்களை சமாளித்து ரன் எடுப்பத்தில் தான் இந்திய அணியின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

#AUSvIND

இந்திய அணியின் ப்ளேயிங் லெவன்!

இந்திய அணி வழக்கத்துக்கு மாறாக நேற்றே ப்ளேயிங் லெவனை அறிவித்து விட்டது. ஓப்பன்னிங்கில் தொடர்ந்து சறுக்கி வரும் ப்ரித்வி ஷாவுக்குப் பதிலாக, பயிற்சிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷுபம் கில் இடம்பெற வேண்டும் என அனைத்து முன்னாள் வீரர்களும் கூறிய நிலையில் இந்திய அணி ப்ரித்வி ஷாவையே ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத் தேர்ந்தெடுத்துள்ளது. அவருடன் இணைந்து மயாங்க் அகர்வால் ஆடக் காத்திருக்கிறார். 3,4,5,6-வது வீரர்களுக்கு முறையே புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி ஆட உள்ளனர். கீப்பிங்கில் போன பயிற்சி போட்டியில் சதம் அடித்த ரிஷப் பன்ட் ஆடுவார் என அனைவரும் நினைத்த நிலையில், இந்திய அணி கீப்பிங்கில் அனுபவம் வாய்ந்த சஹாவையே தேர்ந்தெடுத்துள்ளது.

பெளலிங்கில் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் ஷமி ஆட உள்ளார்கள்.
ப்ரித்வி ஷா, சஹா தேர்வு சரியா இல்லை தவறா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிங்க் பால் டெஸ்ட் போட்டி:

இதுவரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 7 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியோ ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட்டிலேயே பிங்க் பால் என்ற கடும் சவால் நிறைந்த பந்தைச் சமாளிக்க வேண்டியுள்ளது. பொதுவாக டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் டாஸ் வென்று பேட்டிங் செய்யும்போது மைதானம் முதல் ஒரு மணி நேரம் பெளலர்களுக்கு ஒத்துழைக்கும் என்று கூறுவார்கள். பிங்க் பாலிலும் அது தொடர்கிறது. ஆட்டத்தின் கடைசி செஷனில் அதாவது இருட்டத் தொடங்கியவுடன் பந்து அதிகமாக ஸ்விங் ஆகி பெளலர்களுக்கு ஒத்துழைக்கிறது.

அடிலெய்டைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள மைதானம். எனவே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே போட்டியை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சதங்களை விளாசிய கேப்டன் விராட் கோலி இந்த ஒரு டெஸ்ட்டில் மட்டுமே ஆட உள்ள நிலையில், ஆஸ்திரேலியா மீடியாக்களின் கவனமும் சரி, வீரர்களின் கவனமும் சரி அவரை நோக்கியே உள்ளது.

டாஸில் வெற்றி பெற்று விராட் கோலி நன்றாக ஆடி, பும்ரா ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினால் இந்திய அணி தங்களின் பிங்க் பால் டெஸ்ட் வெற்றியை அந்நிய மண்ணில் முதல்முறையாகப் பதிவுசெய்யும்.

கிங் கோலியின் வெறித்தன இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்!



source https://sports.vikatan.com/cricket/who-will-win-the-adelaide-test-strength-and-weaknesses-of-india-and-australia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக