“வாரிசு அரசியல் என்கிற சர்ச்சையில் ரஜினியும் சிக்கிவிடுவாரோ என்று அஞ்சுகிறோம்” என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். கட்சியைத் தொடங்க உள்ள ரஜினியின் அரசியல் என்ட்ரி ஆரம்பமே அதகளமாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் இதனால் எழுந்துள்ளது.
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியலுக்கு நான் வருவேன் என்று அறிவித்தார் என்றார் ரஜினி. ஆனால், அதன்பிறகு கடந்த மூன்றாண்டுகளாக அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காத்துவந்தார். ரஜினி அரசியலுக்கு வருவதே சந்தேகம் என்றும் பேசப்பட்டது. இந்தநிலையில் கடந்தவாரம் இறுதியில் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று உறுதிக்கொடுத்துவிட்டு வந்தார். அதன்பிறகு டிசம்பர் 3-ம் தேதியன்று காலை அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். டிசம்பர் 31-ம் தேதி அரசியல் இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் அரசியல் இயக்கத்தின் தற்போதைய மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார். அதே நேரம் அவர் மன்றத்தைச் சேர்ந்த யாருக்கும் இதுவரை எந்தப் பொறுப்பையும் அவர் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், முறையாகக் கட்சி அறிவிப்பு வெளியானதும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.
இந்தநிலையில் வரும் 12-ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையும் தனது அரசியல் என்ட்ரிக்கான யுக்தியாக மாற்ற நினைக்கிறாராம் ரஜினி. இதனால் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு ஒன்றும் சென்றுள்ளது. அதில் அதிகமான அளவில் மக்கள் நலன் சார்ந்து உதவிகளைச் செய்யுங்கள். அனைத்து மாவட்டங்களிலும் விமர்சையாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாளில் ரஜினி ரசிகர்களைச் சந்திப்பாரா என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இந்தநிலையில், ரஜினியின் அரசியல் வருகையில் பெரும்பங்கினை அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ஆரம்பம் முதலே ஆதரித்து வந்துள்ளார். இப்போது ரஜினி அரசியல் இயக்கம் அறிவித்ததில் அவருடைய பங்கும் பிரதானமாக இருக்கிறது என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.
Also Read: ரஜினி-யின் அரசியல் என்ட்ரி: மற்ற கட்சிகள் சந்திக்கும் பாதகங்கள்!
அவர்கள் இதுகுறித்து நம்மிடம் பேசும் போது “ரஜினியின் அரசியல் என்ட்ரிக்குப் பின்னணியாக இருக்கப்போவதே அவருடைய மகள் சௌந்தர்யாதான். ஏன், இப்போது ரஜினி தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்துள்ள அர்ஜுன் மூர்த்தியை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்ததே சௌந்தர்யா என்கிற உண்மை பலருக்குத் தெரியாது. சௌந்தர்யாவுக்கும், அர்ஜுன் மூர்த்தியின் மகளுக்கும் இருந்த நட்பின் அடிப்படையில், தனது தந்தைக்கு ஆலோசகராக அர்ஜுன் மூர்த்தியை அறிமுகம் செய்துவைத்துள்ளார் சௌந்தர்யா.
அதே போல், ரஜினிக்கு எதிர்காலத்தில் சமூகவலைதளங்களில் புரோமோஷன் வேலையை சௌந்தர்யாவே பார்க்கப்போகிறார். மேலும், தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன், மகள் சௌந்தர்யாவுடன் தனிப்பட்ட முறையில் சில ஆலோசனைகளையும் நடத்தியிருக்கிறார் ரஜினி. பெங்களூர் செல்லும் முன்பு தனது மகளிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளார். சௌந்தர்யா தற்போது சில நபர்களை வைத்து இதற்கான வேலைகளைச் செய்துவருகிறார்.மேலும் கட்சியின் சட்டதிட்ட விதிகள், கொள்கைகள், தமிழகத்தில் உள்ள பிரதான பிரச்சனைகளுக்குத் தீர்வு முறைகள் உள்ளிட்டவற்றைத் தமிழருவி மணியனிடம் ஒப்படைத்துள்ளார். கட்சியின் கட்டமைப்பு குறித்த பணிகளை அர்ஜுன மூர்த்தியிடம் ஒப்படைத்துள்ளார்.
அதே போல் ரஜினியின் அரசியல் விவகாரங்களில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவோ அவருடைய குடும்பத்தினரோ தலையிட்டுக் கொள்ளவில்லை. அதே நேரம் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் குடும்பம் ஏற்கனவே அரசியல் பின்னணியைக் கொண்டது. அதனால் அரசியல் ஆர்வம் சௌந்தர்யாவுக்கு அதிகமாக உள்ளது என்கிறார்கள். தனது தந்தை அரசியல் இயக்கம் ஆரம்பிப்பது உறுதி என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சௌந்தர்யா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார். அரசியல் அறிவிப்பு வெளியிட்டுவிட்டதால், ஏக குஷியில் இப்போது அப்பாவுக்குத் துணையாக அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். ஆனால், “வாரிசு அரசியலுக்கு எதிராக ரஜினியும் இருக்கிறார். ஆனால் சௌந்தர்யாவை இப்போது அவர் பணிகளில் ஈடுபடுத்தினால் அது அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் யாரெல்லாம் வாரிசு இல்லாமல் இருந்தார்களே அவர்கள் அரசியலில் ஜொலித்துள்ளார்கள். வாரிசுடன் களம் இறங்கியவர்களுக்குக் கடைசியில் அந்த வாரிசுகள் மூலமே விமர்சனங்களும் வந்துள்ளது. அது ரஜினிக்கு ஏற்பட்டுவிடாமல் அதை அவர் கவனமாகக் கையாள வேண்டும்” என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/story-about-background-of-rajinis-political-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக