Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

`சிலிக்கான் வேலி டு சிலுக்குவார்பட்டி!' - சிறு நகரங்களைத் தேடிவரும் ஐ.டி நிறுவனங்கள்... ஏன்?

சிலுக்குவார்பட்டியில் வேலை செய்து, சிலிக்கான் வேலியிலுள்ள நிறுவனத்திடமிருந்து ஊதியம் பெறும் நிலைக்கு தமிழகத்தின் சிறு நகரங்கள் தயாராகி வருகின்றன.

பெரிய மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய நம்ம ஊர் இளைஞர்கள் வருங்காலத்தில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டியதில்லை. உள்ளூரில் குடும்பத்தினருடன் இருந்துகொண்டு இயற்கையோடு இயைந்து பணி செய்யக்கூடிய சூழலை, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முயற்சிகளும் திட்டங்களும் தற்போது உருவாக்கியுள்ளன.

Office (Representational Image)

கொரோனா காலத்தில் வேலை இழப்பு ஒருபக்கமும், வேலை தேடிக்கொண்டிருக்கும் படித்த இளைஞர்களின் முயற்சிகள் மறுபக்கமும் அதிகரித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தின் சிறு நகரங்களைத் தேடி வரவுள்ள சேதி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே கைக்குள் அடங்கிவிட்டாலும், பெரிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு நிறுவனங்கள் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கிளைகளும் மற்ற நாடுகளிலுள்ள பெரு நகரங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. சிற்றூர்களைக் கண்டுகொள்ளாத நிலையே கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை இருந்தது.

இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குப் பெரிய அளவில் ஊதியம் கிடைத்தாலும், வருவாயில் பாதியை பெரு நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களுக்கே செலவிட வேண்டிய நிலை. அது மட்டுமல்லாமல், சொந்த மண்ணை விட்டு விலகி புதிய வகையான வாழ்க்கை வாழ வேண்டியுள்ளதால், பலர் உடல்நலத்தையும் மன நிம்மதியையும் இழக்கிறார்கள்.

பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்ய வேண்டுமென்றால் சிலவற்றை இழந்துதான் ஆக வேண்டும் என்ற சூழலில் சொந்த ஊரை விட்டு விலகி பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த ஒரு வருடமாக உலகின் செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றிய கோவிட்-19 பேரிடரால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கம், பெரு வணிக நிறுவனங்கள் மத்தியில் பல கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான், வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது ரிமோட் வொர்க்கிங் எனப்படும் வீட்டிலிருந்தே அல்லது சொந்த ஊரிலிருந்தே வேலை. நெருக்கடியான காலகட்டத்தில் அலுவலகத்துக்கு வந்துதான் வேலை செய்ய வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே பணி செய்தாலும் வெற்றிகரமாக வேலை பார்க்க முடியும். குறிப்பாக, சிறு நகரங்களில் இருந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சிறப்பாக நடத்த முடியும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

`ஜோஹோ' ஶ்ரீதர் வேம்பு

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரவுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜோஹோ (ZOHO) கூட, தமிழகத்தின் சிற்றூர்களில் தன் அலுவலகங்களைத் திறக்கும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்துக்கு முன்பே அதாவது, 2011-லேயே தென்காசியில் கிராமிய சூழலில் ஜோஹோ நிறுவனத்தைத் தொடங்கி 450 ஊழியர்களுடன் வெற்றிகரமாக நடத்திவரும் ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஒ. ஶ்ரீ வேம்பு, தற்போது மதுரை, தேனி, தஞ்சாவூர், நெல்லை, கரூர் மாவட்டங்களிலுள்ள சிறு நகரங்களிலும் அலுவலகத்தைத் திறக்க உள்ளார். இதற்காகத் தமிழக அரசுடன் ஒப்பந்தமும் போட்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரிகளை மட்டுமல்ல. ப்ளஸ் டூ முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களை மென்பொருள் வல்லுநராக்கி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்த ஜோஹோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

zoho

கடந்த செப்டம்பரில் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப, வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் (TIECON 20) 27-வது இணையவழி கருத்தரங்கு அமெரிக்காவிலிருந்து நடத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலந்துகொண்டார்கள். சர்வதேச அளவில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநாட்டில் மதுரை நகரம் இடம்பெற்றது இதுவே முதல்முறை என்று சொல்லப்பட்டது.

இந்த மாநாட்டில் பெப்சிகோ சேர்மன் இந்திரா நூயி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சி.ஐ.ஐ நடத்திய இணையவழி கனெக்ட் கருத்தரங்கில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, ``வெளிநாடு, வெளிமாநில ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் சொந்த ஊரிலோ, அதன் அருகிலோ பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். திறமையானவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரிலிருந்து பணியாற்றும் வகையில் மதுரை, தேனி, நாகர்கோயிலில் ஜோஹோ அலுவலகம் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

அதைத் தொடர்ந்து தென்காசி மத்தளம்பாறையிலுள்ள ஜோஹோ அலுவலத்தில் அதன் தலைவர் ஸ்ரீதர் வேம்புவுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மதுரை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உட்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போது தென்காசி மத்தளம்பாறையிலிருந்தே உலகம் முழுவதும் இருக்கும் தன் அலுவலகங்களை நிர்வகித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். ஏற்கெனவே திறன் மேம்பாட்டு பயிற்சியைக் கிராம மக்களுக்கு அளித்துவரும் ஜோஹோ, அடுத்ததாக செயல்வழி கற்றல் பள்ளிகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இது பற்றித் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம். ``தொழில் முதலீட்டுக்கான முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனையாளர்களாகத் திகழும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பல நிறுவனத் தலைவர்களைச் சந்தித்தோம். அதில் முக்கியமானவர், ஜோஹோவின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு. பல நாடுகளில் கிளைகள் கொண்ட உலக அளவில் பெரிய நிறுவனமாகவும் பல பெரிய நிறுவங்களைத் தங்களுடைய கஸ்டமர்களாகவும் கொண்டுள்ள அவர், ரொம்பவும் எளிமையானவர். அது மட்டுமல்ல நம் நாட்டின் மீதும் கிராம மக்கள் முன்னேற்றம் மீதும் அதிக அக்கறை கொண்டவர்.

பல வருடங்களுக்கு முன்பே தென்காசி மத்தளம்பாறையில் ஜோஹோ அலுவலகத்தைத் திறந்து அந்தப் பகுதி கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். தற்போது இவரும் அங்கு தங்கியிருந்து இயற்கையோடும், கிராம வாழ்க்கையை அனுபவித்தபடி இயங்கி வருகிறார். அவர் தற்போது தென் மாவட்ட சிறு நகரங்களில் ஐ.டி அலுவலகங்களை அமைக்க உள்ளார்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம் பெருநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் அதிகம் பணியாற்றுகிறார்கள். இதனால், பெரு நகரங்களில் மக்கள் நெருக்கடியும், போக்குவரத்துப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஏன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பெருநகரங்களில் குவிக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் மதுரை, தேனி, கரூர், நெல்லை மாவட்டங்களில் அலுவலகம் திறக்க உள்ளார்.

Office (Representational Image)

மதுரையில் சோழவந்தான் பகுதியில் அலுவலகம் அமைக்கிறார். கணினி மென்பொருள் உருவாக்குவோர் எந்த ஊரிலிருந்தும் உருவாக்கலாம் எனும்போது நம் இளைஞர்கள் சொந்த ஊரிலிருந்தே பணி செய்யலாம். அது மட்டுமல்லாமல் ஜோஹோ நிறுவனம் ப்ளஸ் டூ படித்துள்ள கிராமப்புற மாணவர்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கையை மாற்ற இருக்கிறது.

அதுபோல் கிராமங்களில் சிறிய அளவிலான செயற்கைக் கோள் அலுவலகங்களையும் திறக்க திட்டம் வைத்துள்ளார். ஏற்கெனவே பல லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்போது அதிவேகமான இணையத் தொடர்பால் மடிக்கணினி வைத்துள்ள கிராமப்புற மாணவர்களும் கிராமத்தில் இருந்தபடி ஐ.டி நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும்.

கொரோனா பேரிடர் காலத்திலும் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 40,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளைப் பெற்றுள்ளார் நம் முதலமைச்சர். இதன் மூலம் ஐ.டி துறை மட்டுமல்ல அனைத்துத் தொழில்களுக்கும் தமிழகம்தான் சிறந்த மாநிலம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். இது மட்டுமல்ல. தமிழகத்தில் வேலைதேடும் 50,000 இளைஞர்களுக்கு இணைய வழியில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள உலகின் தலைசிறந்த கோர்ஸ் எரா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

Office (Representational Image)

Also Read: ஜோஹோ CEO, இப்போ கிராமத்தில் பள்ளி ஆசிரியர்... ஶ்ரீதர் வேம்புவின் புது அவதாரம்!

2024-ம் ஆண்டுக்குள் மென்பொருள் மற்றும் மின்னணு பொருள் உற்பத்தி துறையில் தமிழகத்தின் நிலையை உயர்த்த ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து அவர்கள் அத்துறையில் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு வகையில் உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். கொரோனா பேரிடர் தமிழகத்தை மிகவும் பாதித்த நிலையிலும் தகவல் தொழில்நுட்பம், மின்னணுப் பொருள்கள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

ஐ.டி நிறுவனங்களின் வருகையால் இனி சென்னை மட்டுமன்றி, மொத்த தமிழகமும் செழித்தால் நல்லதுதான்!



source https://www.vikatan.com/business/news/it-companies-plans-to-extend-their-offices-to-south-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக