தேனில் நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பதால் எல்லோருடைய வீட்டிலும் தேன் இன்றியமையாத பொருள் ஆகிவிட்டது. ஆரம்பகாலத்தில் மலைத்தேன், கொம்புத்தேன் என இயற்கைத் தேன் வகைகளைத் தேடித்தேடி அலைந்த நாம் இப்போது வசதி கருதி சூப்பர் மார்கெட்டுகளில் லேபிள்கள் ஒட்டப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தேன்களுக்குப் பழகிவிட்டோம்.
உண்மையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் தேன் எந்தளவுக்குத் தரமானது... அதில் என்னவெல்லாம் கலந்துள்ளார்கள்... எங்கிருந்து இவ்வளவு தேன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைக்கூட நாம் சிந்தித்தது கிடையாது. சமீபத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிரபலமான 13 பிராண்டு தேன்களைத் தேர்வு செய்து, அந்த பிராண்டுகளின் தேன்களை வெவ்வெறு இடங்களிலிலிருந்து சேகரித்து, தேனின் தூய்மைத் தன்மையை ஆராய அதி நவீன ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவில், இந்தியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட 13 பிரபல பிராண்டுகளில் 5 பிராண்டுகளின் தேன் மட்டுமே தரமானவை. மற்ற அனைத்து பிராண்டுகளிலும் சிந்தெடிக் சுகர் கலக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து உணவுக்கட்டுப்பாட்டுத் துறையின் மேல்மட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பொதுவாக தேனில் சி4, சி3 சர்க்கரைப் பாகுகளைத்தான் கலப்பார்கள். அதாவது கரும்புச்சாறு, சோளம் போன்றவற்றிலிருந்து எடுக்கும் சர்க்கரைப்பாகுகளை கலப்பார்கள். இவை கலந்த தேன் வகைகளைத்தான் கலப்படத் தேன் என்று இந்தியாவில் சொல்கிறோம். இது போன்ற கலப்படங்களைத் தவிர்க்க இந்தியாவில் டி.எம்.ஆர் டெஸ்ட் (Trace Market For Rice Syrup) டெஸ்ட், எஸ்.எம்.ஆர் டெஸ்ட் (Specific Marker For Rice Syrup) போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆர்ஜீன் சோதனை, சர்க்கரைப்பாகு கலப்படச் சோதனைகளில் இந்திய தேன் வகைகள் நிச்சயம், தேர்ச்சிபெற்று இருக்கும். ஏனெனில், இந்தியாவில் இந்தச் சோதனையில் தேர்ச்சிபெற்ற தேன் வகைகளைத்தான், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டுத்துறை அனுமதி அளிக்கிறது. ஆனால், ஜெர்மனியில் இப்போது நடந்த ஆராய்ச்சி, எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, எதன் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற அறிக்கையை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் இது வரை இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறைக்கு அறிக்கையாக அளிக்கவில்லை. அறிக்கை அளித்தால்தான், அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை இந்திய தேன் வகையில் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
பொதுவாக, தேன் மட்டுமல்ல எல்லா உணவுப் பொருள்களிலும் நிறைய கலப்படங்கள் இருக்கின்றன. அதைத் தடுக்கத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பொது மக்கள் யார் வேண்டுமானாலும் 94440 42322 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு எந்த பிராண்டுகளின் கலப்படம் பற்றியும் எங்களுக்குப் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
புகார்களின் அடிப்படையில் சோதனைகள் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை அடுத்த 24 மணிநேரத்தில் எடுக்கப்படுகிறது. அது மட்டுமல்ல உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல்வேறு பொருள்களின் மாதிரிகளைச் சேகரித்து, திடீர் சோதனைகளும் செய்து வருகிறோம். எங்களுடைய நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் மக்களும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எந்தப் பொருளை வாங்கும் முன்பும் அதில் FSSAI சான்று அல்லது ISO சான்று இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருளில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன, எந்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பொருளிலும் எத்தனை கலோரிகள் இருக்கின்றன, எப்போது பேக் செய்யப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் செக் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
தேனின் தூய்மைத் தன்மையை வீட்டிலேயே கண்டறியும் வழிமுறைகளையும் நன்மைகளையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்...
ஒரு துளி தேனை கட்டை விரலில் ஊற்றிப் பாருங்கள். அது கீழே வேகமாக வழிந்தால் அது உண்மையான தேன் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒரு தீக்குச்சியை எடுத்து அதில் தேனைத் தொட்டுப் பற்றவைத்தால் உடனே தீப்பற்றி வேகமாக எரியும். கலப்படத் தேனில் ஈரப்பதம் இருப்பதால் எரியாது. இதை வைத்தும் தேனின் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம்.
தேனை எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றுங்கள் எந்தக் கலங்கலும் இல்லாமல் இருந்தால் அது சுத்தமான தேன்.
சில சொட்டு தேனை எடுத்து சம அளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். இத்துடன் சில சொட்டுகள் வினிகர் சேர்க்கவும். இப்போது நுரைத்து வந்தால் அது கலப்படத் தேன் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் சில துளிகள் தேனை விட்டுப் பார்க்கவும். தேன் தண்ணீரில் கலந்தால் அது போலியான தேன். கலக்காமல் அடியில் சென்று தங்கினால் சுத்தமான தேன் என்று அறிந்துகொள்ளலாம்.
தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத் தேனீ, இந்தியன் தேனீ என நிறைய வகைகள் இருக்கின்றன. இப்போது வீடுகளிலேயே கூட தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் தேனீக்களிலிருந்து எடுக்கப்படும் தேன்களில் மருத்துவ குணங்கள் சற்று குறைவாகவே இருக்கும். ஏனெனில், மலைத்தேனீ போன்ற தேனீக்கள் பூக்களில் இருந்து தேனைச் சேமித்து வரும். அதனால் அந்தப் பூக்களிலிருந்தும் நமக்கு மருத்துவ குணம் கிடைக்கும். வீடுகளில் வளர்க்கப்படும் தேனீக்ளுக்கு, பூக்கள் பூக்கும் பருவம் இல்லாத சூழலில் சர்க்கரைப்பாகைக் கரைத்து உணவாக வைப்பார்கள். இதுவும் கூட தேனில் சர்க்கரைத் தன்மை கலக்க காரணமாக இருக்கலாம். அதே போன்று இயற்கையாக எடுக்கப்படும் தேன் எப்போதும் ஒரே சுவையில், நிறத்தில் இருக்காது. ஏனெனில் தேனீக்கள் வேம்பு, நெல்லிக்காய், இஞ்சி என வெவ்வெறு பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கும் எனவே சுவை மாறுபடும். ஆனால், பாட்டில் தேன்கள் அல்லது வளர்ப்புத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேன்கள் எப்போதும் ஒரே சுவையில், ஒரே நிறத்தில்தான் இருக்கும்.
Also Read: கலப்படம், விலை குறைவு, ஆரோக்கியக் குறைபாடு... தரமான பேரீச்சம்பழத்தைக் கண்டறிவது எப்படி?
எந்தக் கலப்படமும் இல்லாத தேனில் அமினோ அமிலம், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. ஜீரண சக்தியும் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தேனை பாலில் கலந்து இரவில் சாப்பிட்டால் இதய பலம் பெரும். உடல் எடையும் சீராக அதிகரிக்கும். எலுமிச்சை பழச்சாறுடன் சில துளிகள் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும்" என்று தேனின் மருத்துவ குணங்களைப் பகிர்ந்த விக்ரம் குமார், இறுதியாக, ``தேனில் நிறைய ஆரோக்கிய சத்துகள் நிரம்பியுள்ளன. நீங்கள் வாங்கும் தேன் கலப்படம் இல்லாததுதானா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். கூடுமானவரை மலைத்தேனை வாங்கிப் பயன்படுத்துங்கள்" என்கிறார்.
source https://www.vikatan.com/health/food/top-indian-honey-brands-failed-in-adulteration-test-how-can-we-find-adulterated-honey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக