Ad

சனி, 5 டிசம்பர், 2020

தஞ்சை: நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; மூன்று பேர் பலி! - தொடர் மழையால் கடும் பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தொடர் மழை பெய்ததில் பல இடங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் வீடு இடிந்து விழுந்ததில் கணவன் மனைவி உட்பட மூன்று பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இடிந்த வீடு

புரெவி புயல் வலிவிழந்த விட்ட போதும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மூன்று தினங்களாக கடும் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழையுடன் காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் இருந்த பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரைச் சேர்ந்த குப்புசாமி(70), இவரின் மனைவி யசோதா (65). இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. இந்நிலையில் இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

உயிரிழந்த தம்பதி

இவர்கள், இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து இருவர் மீதும் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மழையில் வீடு இடிந்து இருவருமே ஒரே நேரத்தில் உயிரிழந்தது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதே போல் தஞ்சாவூர் அருகே உள்ள வடகால் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள் (83). குடிசை வீட்டில் வசித்து கொண்டிருந்தார். பெரும் மழையை எதிர்கொள்ள முடியாத இவரது குடிசை வீடு இடிந்து துாங்கிக்கொண்டிருந்த சாரதம்பாள் மேல் விழுந்ததில் அதே இடத்திலேயே உயிரிழந்தார். மாவட்டம் முழுவதும் சுமார் 75 வீடுகள் மழையினால் சேதமடைந்துள்ளது.

வயலில் மழை நீர்

மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் நெல் பயிர்கள் என்னாகுமோ என்ற பெரும் கவலை விவசாயிகளை சூழ்ந்தது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, மேல உளூர், சூரக்கோட்டை, பந்தநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயரான நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதே போல் வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில் கோன கடுங்கலாற்றில் ஏற்பட்ட உடைப்பினால், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடவு செய்யப்பட்டு சுமார் இரண்டு மாதங்களான நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. கிட்டதட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல் புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் பயிர்கள் மூழ்கின. பயிர்கள் மூழ்கியதை அறிந்த கலெக்டர் கோவிந்தராவ் உடனடியாக ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியினை ஆய்வு செய்தார்.

விழுந்த தென்னை மரம்

உடைப்பு ஏற்பட்ட இடத்தை மணல் மூட்டைகள் மற்றும் கம்புகளை கொண்டு ஊழியர்கள் அடைத்தனர். பத்து தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கியது தான் இதில் பெரும் வேதனையான விஷயம். இதனால் விவசாயிகள் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதே போல் பழைய பேராவூரணியில் பாசன வாய்ககாலில் உடைப்பு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வயலை சூழ்ந்துள்ள மழை நீர்

பேராவூரணி பகுதியில் ஒரு சிலரது தோப்புகளில் நின்ற தென்னை மரங்கள் விழுந்துள்ளன. விவசாயி ஒருவர், ``கஜா புயலை தாக்கு பிடித்து நின்ற தென்னை மரங்கள் புரெவி புயல் காரணமாக காற்றுடன் வீசிய மழையினை எதிர்கொள்ள முடியாமல் விழுந்து விட்டன. மழை காரணமான பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும். இன்னும் மழை நீடித்தால் அனைவரின் நிலையும் என்னாகுமோ என்ற கவலை அனைத்து விவசாயிகளையும் தூங்க விடாமல் செய்கிறது” என்றார் வேதனையுடன்...

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/heavy-rain-affects-tanjore-peoples-and-farmers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக