Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

பழநி: செல்போனுக்கு தடை... ஆன்லைனில் முன்பதிவு! - 8 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது வின்ச் சேவை

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கொரோனா ஊரடங்கு தளர்விற்குப் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பழனி முருகனை மக்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். இந்நிலையில், மலை ஏறுவதற்கு பயன்படும் மின் இழுவை ரயில்களை (வின்ச்) இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கோயில் நிர்வாகம், நேற்று முதல் 3 மின் இழுவை ரயில்கள் பயணத்தை மீண்டும் துவக்கியது. சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர், வின்ச் மூலம் பக்தர்கள் பயணித்து மகிழ்ந்தனர்.

பழநி தண்டாயுதபாணி கோயில்

வின்ச் இயக்கம் தொடர்பாக, கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழநி கோயிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும். டிக்கெட் கவுண்டர்கள் ஏதும் திறக்கப்படாது. பயணத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர், வின்ச் காத்திருப்பு மண்டபத்திற்கு பக்தர்கள் வந்துவிட வேண்டும். பழநியில் உள்ள வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் ஆகிய மூன்று வின்சில், பக்தர்கள் எந்த வின்சில் முன்பதிவு செய்தனரோ அந்த வின்சில், அந்த நேரத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட ஐ.டி கார்டின் அசல் கொண்டுவர வேண்டும். கூடுதலாக நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பழநி மலை வின்ச்

மேலும், ஒவ்வொரு வின்சிலும் உள்ள இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பக்தர்கள் பயணிக்க முடியும். அதன்படி ஆன்லைன் முன்பதிவு இருக்கும். வழக்கம்போல, காலணிகளை, வின்ச் நிலையத்தில் உள்ள காலணி பாதுகாப்பு அறையில் வைத்துவிட வேண்டும். காலணிகளோடு வின்சில் அனுமதி இல்லை. ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவிற்கு https://ift.tt/3londJW என்ற இணையதளத்தினை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவழிப்பயணத்திற்கு கட்டணம் ரூ100.

இவை ஒருபுறம் என்றால், பக்தர்களுக்கு மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாமான்களை வின்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் கோயில் நிர்வாகத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் போல, மொபைல் போனை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/palani-mountain-winch-only-50-of-devotees-allowed-mobile-phone-banned

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக