Ad

வியாழன், 3 டிசம்பர், 2020

கரூர்: கனமழையில் இடிந்து விழுந்த 3 வீடுகள்! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்

புரெவி புயல் காரணமாக, கரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்வதால், நச்சலூர் பகுதியில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மழையில் இடிந்த வீடு

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு புயலாக வலுவடைந்தது. இந்தப் புயலுக்கு `புரெவி’ என்று பெயரிடப்பட்டது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருகிறது.

Also Read: செயற்கை மழை பொழியும் `மழை மரம்...' வித்தியாசமான விழிப்புணர்வில் அசத்தும் கரூர் விவசாயி!

தமிழ்நாட்டின் மையப் பகுதியிலுள்ள கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதனால், காலையில் பணிக்குச் செல்வோர் மிகவும் அவதியடைந்தனர். சாலைகளில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலர் குடைபிடித்தபடியே சென்றதைக் காண முடிந்தது. பல பகுதிகளில், இன்றும் கனமழை பெய்துவருகிறது.

மழையில் இடிந்த வீடு

இதனால், கரூர் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது. இதனால், `வியாபாரம் நேற்றிலிருந்து குறைந்திருக்கிறது' என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த கனமழையால், குளித்தலை ஒன்றியத்திலுள்ள நச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இதனால், நச்சலூர் அருகேயுள்ள நங்கவரம் பேரூராட்சியிலுள்ள தமிழ்ச்சோலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், என்பவரின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதி மண் சுவர் மழையில் ஊறி, திடீரென இடிந்து விழுந்தது.

செல்வராஜ் வீட்டின் சுவர் விழுந்ததில், அருகிலுள்ள கலியமூர்த்தி என்பவரின் ஓட்டு வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், கலியமூர்த்தியின் மற்றொரு கூரை வீடும் சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வீடு இடிந்து விழுந்ததில், வீடுகளிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்துத் தகவல் அறிந்து வந்த குளித்தலை தாசில்தார் முரளிதரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, 'உரிய விசாரணை செய்து நிவாரணம் வழங்கப்படும்' எனக் கூறினார்.

மழையில் இடிந்த வீடு

அதேபோல், தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை உள்ளடக்கிய குக்கிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள், குட்டைகள், குளம் மற்றும் வரத்து வாய்க்கால்களில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகள் நிரம்பியிருக்கின்றன. 'வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதி நீர்நிலைகள் நிரம்புவதால், விவசாயத்துக்குப் பயன்படும்' என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/disaster/karur-3-houses-damaged-due-to-heavy-rain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக