பிக்பேஷ் லீகின் 5-வது போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒன் சைடு மேட்ச் போல சென்று கொண்டிருந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் அடிலெய்ட் அணியின் நம்பர் 11 பேட்ஸ்மேன் ப்ரிக்ஸ் ஓர் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து இந்தப் போட்டியை த்ரில்லராக மாற்றிவிட்டார்.
பீட்டர் சிடில் தலைமையிலான அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி டாஸை வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியின் சார்பில் ஆர்சி ஷார்ட்டும் வில் ஜாக்ஸும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். அடிலெய்டு அணி சார்பில் டேனியல் வொரால் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 5 டாட்களோடு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. கொஞ்சம் மெதுவாக அதே நேரத்தில் விக்கெட் விடாமல் ஸ்டெடியாக தொடங்கிய இந்தக் கூட்டணி முதல் 4 ஓவர் பவர்ப்ளேவில் 27 ரன்களைச் சேர்த்தது. ஒரு கட்டத்தில் ஆர்சி ஷார்ட் பவுண்டரிக்கே முயலாமல் நிறைய டாட் ஆட ப்ரஷர் முழுவதும் வில் ஜாக்ஸின் மீது விழுந்தது. ஜாக்ஸ் மட்டுமே பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை சீராக உயர்த்தினார். பீட்டர் சிடில் வீசிய ஷார்ட் பாலில் ஆர்சி ஷார்ட் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் கொடுத்தார். ஆனால், வொரால் இந்த கேட்ச்சை டிராப் செய்தார். ஆர்சி ஷார்ட் எவ்வளவு முயன்றும் அவரால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. 10 ஓவர் ஸ்கோரை வைத்து கிடைக்கும் Bash Boost பாயின்டும் முக்கியம் என்பதால் ஜாக்ஸ் மீது மேலும் ப்ரஷர் கூடியது.
வெஸ் அகர் வீசிய 9 ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று எட்ஜ்ஜாகி மிட்விக்கெட்டில் நின்ற கிப்சனிடம் கேட்ச் ஆனார் வில் ஜாக்ஸ். அவர் 34 ரன்களில் அவுட் ஆகியிருக்க, கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய காலின் இங்ரம் நம்பர் 3 பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார். 10 ஓவர்களில் ஹோபர்ட் அணி 69 ரன்களை எடுத்திருந்தது. ரொம்ப நேரம் மெதுவாகவே உருட்டிக்கொண்டிருந்த ஆர்சி ஷார்ட் ரஷித் கான் வீசிய 14வது ஓவரில் வெடித்து சிதறினார். இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது. 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து வெறித்தனம் காட்டினார் ஷார்ட். இதுதான் சரியான தருணம் என 15-16 ஓவர்களில் பவர் சர்ஜயும் எடுத்து போட்டனர் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ். வெஸ் அகர் வீசிய 15 வது ஓவரை பவுண்டரி சிக்சருடன் தொடங்கிய ஆர்சி ஷார்ட் அடுத்த பந்திலேயே வொராலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 72 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஆர்சி ஷார்ட். முதல் 40 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த இவர் கடைசி 8 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 15 ஓவர்களில் 133 ரன்களை எடுத்திருந்த ஹோபர்ட் அணியால் கடைசி 5 ஓவர்களில் பெரிதாக ரன்கள் எடுக்க முடியவில்லை. இங்ரம், ஹேண்ட்ஸ்கோம்ப், ரைட் எல்லாம் தொடர்ந்து அவுட் ஆக அந்த அணியால் கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்தாலும் 10-15 இந்த 5 ஓவர்களில் 64 ரன்களைச் சேர்த்திருந்தது ஹோபர்ட் அணி. இதே வேகம் அந்த அணியிடம் கடைசி 5 ஓவர்களில் வெளிப்படவில்லை. பிக் ஹிட்டராக அறியப்பட்ட ஃபாக்னரும், கடந்த போட்டியில் அதிரடியில் அசத்திய டிம் டேவிட்டும் இன்னும் இரண்டு மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தால் ஸ்கோர் 200 ஐ நெருங்கியிருக்கும்
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பாக, பிலிப் சால்ட்டும், வெதரால்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். போத்தா வீசிய இரண்டாவது ஓவரிலேயே வெதரால்டு 1 ரன்னில் ஃபாக்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஃபாக்னர் வீசிய 3 வது ஓவரிலேயே போல்டாகி சால்ட்டும் வெளியேறினார். இரண்டு ஓப்பனர்களும் சொதப்பியதால் அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாற தொடங்கியது. அடுத்த இரண்டு ஓவர்கள் விக்கெட் இல்லாமல் செல்ல போத்தா வீசிய 6 வது ஓவரில் 8 ரன்னில் நீல்சன் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக மெரிடித் வீசிய இரண்டு ஓவர் ஸ்பெல்லில் 3 விக்கெட்டுகள் விழுந்தன. 7-வது ஓவரில் வெல்ஸ் எல்பிடபிள்யு ஆக அடுத்து அவர் வீசிய 9 வது ஓவரில் கிப்சனை அருமையாக ரன் அவுட் செய்தார் மெரிடித். அடுத்து உள்ளே வந்த ரஷித் கான் ஷார்ட்டாக வீசப்பட்ட முதல் பந்தையே தூக்கியடித்து கேட்ச் ஆகி வெளியேறினார். கொஞ்சம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ரென்சாவும் ஃபாக்னர் வீசிய 12-வது ஓவரில் 33 ரன்னில் அவுட் ஆனார்.
டாப் மிடில் ஆர்டர் இரண்டும் மொத்தமாக காலியாக ஆட்டம் ஒன் சைடாக முடியப்போகிறது என தோன்றிய போதுதான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸின் டெய்ல் எண்டர்கள் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். டேனியல் வொரால் ஒருபக்கம் நின்று பவுண்டரிக்களாக வெளுத்தெடுத்தார். அற்புதமாக வீசிக்கொண்டிருந்த மெரிடித்தின் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்து அட்டகாசப்படுத்தினார். 14 ஓவர்களில் அடிலெய்டு அணி 93 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் நம்பர் 11 பேட்ஸ்மேனாக உள்ளே வந்த ப்ரிக்ஸ், வொராலுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்தார். வொராலும் பாரபட்சமின்றி எல்லா பௌலர்களையும் பவுண்டரி அடித்தார். போலண்ட்டின் 16 வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் வொரால். கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நம்பர் 11 பேட்ஸ்மேனான ப்ரிக்ஸ் விஸ்வரூபம் எடுக்க தொடங்கினார்.
ஆர்சி ஷார்ட் வீசிய 18-வது ஓவரில் மட்டும் இரண்டு பவுண்ட்ரி ஒரு சிக்ஸர் அடித்து 17 ரன்களை சேர்த்தார் ப்ரிக்ஸ். எப்படியும் ஹோபர்ட் சுலபமாக ஜெயித்துவிடும் என்ற நிலையிலிருந்து இந்த கடைசி விக்கெட் கூட்டணி ஆட்டத்தை மாற்ற தொடங்கியது. கடைசி 2 ஓவர்களில் அடிலெய்டு அணி வெற்றி பெற 25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. விக்கெட் விடாமல் நின்றால் எப்படியும் அடித்துவிடுவார்கள் என்றிருந்த நிலையில் ஹோபர்ட் அணியில் பௌலர்கள் சுதாரித்துக்கொண்டு கடைசி இரண்டு ஓவர்களை சிறப்பாக வீசினார். போலண்ட் மற்றும் எல்லீஸ் இருவரும் சரியான லைன் & லெந்தில் சரியான வேரியேஷன்களோடு வீசி கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இறுதியில் அடிலெய்டு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நம்பர் 11 பேட்ஸ்மேனான ப்ரிக்ஸ் 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு மட்டும் வொரால்-ப்ரிக்ஸ் கூட்டணி 72 ரன்கள் ரெக்கார்டு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியிருந்தது. ஆனாலும், இவர்களின் முயற்சி வெற்றிகரமானதாக அமையவில்லை.
ஹோபர்ட்ஸ் அணி Bash Boost யும் சேர்த்து நான்கு புள்ளிகளை வென்றிருக்கிறது.
அடிலெய்டு அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். பொறுப்பில்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தாரை வார்த்ததன் விளைவே கடைசியில் நெருங்கி வந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய காரணமாக இருந்தது.
வொரால் 62 ரன்கள் அடித்திருந்தாலும் அவர் செய்த ஒரு தவறும் இந்தத் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆர்சி ஷார்ட் 72 ரன்கள் அடித்து மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றிருக்கிறார். ஆனால், அவர் 22 பந்துகளில் 23 ரன்களில் இருக்கும் போதே பீட்டர் சிடிலின் ஒரு பந்தில் வொராலிடம் கேட்ச் கொடுத்திருப்பார். ஆனால், வொரால் அந்த எளிமையான கேட்ச்சை ரொம்பவே மோசமாக டிராப் செய்திருப்பார். அந்த கேட்ச் மட்டும் பிடிக்கப்பட்டிருந்தால் ஆர்சி ஷார்ட்டுக்கு தன் கடைசி 8 பந்துகளில் அடித்த 34 ரன்கள் கிடைக்காமல் இருந்திருக்கும். அதன் மூலம் நிச்சயம் மொத்த ஸ்கோரில் ஒரு 10-20 ரன்கள் குறைந்திருக்கலாம். அது ஆட்டத்தின் முடிவையே கூட மாற்றியிருக்கக்கூடும்.
source https://sports.vikatan.com/cricket/hobart-hurricanes-beats-adelaide-strikers-in-a-thriller
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக