Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தஞ்சை: `கொஞ்சம் அசந்துட்டேன் சார்!’ - மதுபோதையில் தென்னை மர உச்சியில் தூங்கிய தொழிலாளி

தஞ்சாவூரில் தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி ஒருவர், மது போதையில் இருந்தபோது தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நிலையில் போதை தலைக்கேற, மரத்தின் உச்சியிலே தூங்கிவிட்டார். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்க, நடிகர் வடிவேலு பாணியில் அசால்டாக, `அசந்து தூங்கிட்டேன் சார்' என அந்த தொழிலாளி தெரிவிக்க அந்த இடமே கலகலப்பாக மாறியது.

மரத்தின் உச்சியில் தூங்கும் தொழிலாளி

தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை சருக்கை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (40) திருமணமாகாதவர். இவர் தென்னைமரத்தில் தேங்காய் பறித்து கொடுப்பதுடன், மரத்தில் உள்ள தேவையற்றவற்றை களை எடுத்து கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கரந்தை ஜெயின மூப்பதெரு பகுதியில் தமிழரசன் என்பவரது பராமரிப்பில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்து கொடுக்க சென்றார்.

அப்போது அவர் ஒவ்வொரு தென்னை மரமாக ஏறி தேங்காய்களை பறித்து கீழே போட்டார். அதே போல் சுமார் 55 அடி உயரம் கொண்ட தென்னை மரத்தில் ஏறினார். ஆனால் தேங்காய்களை பறித்து கீழே போடவில்லை. நீண்ட நேரமாகியும் எந்த சத்தமும் இல்லை, கீழேயும் இறங்கி வரவில்லை. மர உச்சிக்கு ஏறி சென்றவருக்கு என்னவானது என தெரியாமால் அருகிலிருந்தவர்கள் பதற்றமாகினர்.

தீயணைப்பு துறையினர்

மேலும் தென்னை மரத்தின் உச்சியினை கீழே இருந்தபடியே பார்த்தனர். அப்போது தேங்காய் குலைகளுக்கு மேலே உட்கார்ந்தபடி மரத்தை பிடித்து கொண்டு சாய்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது. கிட்டதட்ட உட்கார்ந்து கொண்டே படுத்திருப்பது போல் இருந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர் பேரை சொல்லி அழைத்தனர் எந்த சலனமும் இல்லை.

அவர் மரத்திலேயே தூங்குகிறாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்குமா என தெரியாமல் குழப்ப மடைந்தனர். இதையடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

தொழிலாளி லோகநாதன்

Also Read: நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அவர்கள் வந்தும் சத்தம் போட்டனர் ஆனால் அவர் எழுந்திரிக்கவே இல்லை. அதன் பின்னர் இரும்பு ஏணி மூலம் தென்னை மரத்தில் ஏறினர். இதனை கேள்விப்பட்ட அப்பகுதியினர் அந்த இடத்தில் கூடினர்.

தீயணைப்பு வீரர்கள் மரத்தின் உச்சிக்கு சென்ற நிலையில் கூலி தொழிலாளி லோகநாதன் கண் விழித்தார். மேலும் அவர் போதையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தீயணைப்பு வீரர் ஏணி வழியாக கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் கொஞ்சம் போதை தெளிந்த லோகநாதன், நடிகர் வடிவேலு பாணியில், `சார் நான் மரத்தின் வழியாகவே கீழே இறங்கி வருகிறேன், நீங்க ஏணியில் இறங்கி வாங்க’ என கூறிவிட்டு இறங்க தொடங்கினார்.

கீழே இறங்கும் தொழிலாளி

ஏணியில் தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்குவதற்குள் மரத்தின் வழியாக சர சரவென்று லோகநாதன் கீழே இறங்கிவிட்டார். ஏராளமான பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இருந்ததை பார்த்த அவர் சிரித்து கொண்டே வந்தார். கிட்டதட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மரத்திலிருந்து கூலி தொழிலாளி இறங்கி வந்ததால் அங்கிருந்த பலரும் நிம்மதியடைந்தனர்.

லோகநாதனிடம், போலீஸார் கேட்டதற்கு, `நான் கொஞ்சம் மது குடிச்சிருந்தேன். மரத்துல ஏறும் போது போதை தெரியவில்லை. மரத்தின் உச்சிக்கு சென்றதும் போதை தலைக்கேறிவிட்டது. அதனால் கொஞ்சம் அசந்து அப்படியே சாய்ந்து தூங்கிட்டேன் வேற ஒண்ணும் பிரச்னை இல்லை சார்” என வடிவேலுவை போல் அசால்டாக கூற போலீஸார் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

தென்னை மரம்

இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது. அங்கிருந்த பெரியவர் ஒருவர், `ஏண்டா உனக்கு தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா தூக்கத்துல கீழே விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நெனச்சு பார்த்தியா?” என கேட்டார். பின்னர் போலீஸார்,லோகநாதனை அழைத்து சென்றதுடன் இனி இதுபோல் நடந்து கொள்ள கூடாது என எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-tanjore-daily-labour-slept-at-the-top-of-coconut-tree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக