Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

``10 வருடங்களாக நான் பேசியதைத்தான் அமெரிக்கா இன்று செய்கிறது!’’ - என்ன சொல்கிறார் சீமான்?

அரசியல் மேடைகளில் அனல் பறக்கவிடும் `செந்தமிழன் சீமான்', தேர்தல் களத்திலும் `தனியொருவனாக' தெறிக்கவிடுகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் `நாம் தமிழர் கட்சி கூட்டணி சேராமல், தனித்தே போட்டியிடும்' என்ற அவரது அறிவிப்பு, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்...

``நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தனித்தே தேர்தலை சந்திப்பதற்கு என்ன காரணம்?’’

``இந்தக் கேள்வி பல காலமாக எங்களை நோக்கிக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. `நாம் தமிழர் கட்சி'யைத் தொடங்கிய சூழல் எல்லோருக்குமே தெரியும். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவன், கோட்பாடு, பாதை எல்லாமே வேறு. ஆக, அடிப்படை அரசியலில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், இங்கு எல்லாவற்றையுமே சரிசெய்ய வேண்டிய தேவையிருக்கிறது. இங்கே யாரும் தமிழ் மீட்சி பேச மாட்டார்கள். என்னுடைய கலை, இலக்கியம், பண்பாடு, வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் இவர்களுக்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில், யாரோடு சேர்ந்து நான் எனக்கான கோட்பாட்டை வென்றெடுக்க முடியும் என்று சொல்லுங்கள்?''

சீமான்

``தேர்தல் கூட்டணி அமைப்பதாலேயே நாம் தமிழர் கட்சிக்கான கோட்பாட்டைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

``உதாரணமாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால் அதன் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், கல்வி, நீர் மேலாண்மை என எல்லாக் கொள்கைகளிலுமே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. `தாராளமயக் கொள்கை’ என்ற பெயரில், தற்சார்பின்மையாக இருப்பதைத் தகர்க்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கே பிறிதொரு நாட்டை நம்பி, பாதுகாப்புக் கருவிகளை வாங்க வேண்டிய நிலைதானே இங்கே இருக்கிறது. இங்குள்ள கல்வியின் தரத்தை உலகத்தரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால், அதற்கென்று ஒரு சட்டம் போடுவேன். அரசுப் பணியாளரில் ஆரம்பித்து அமைச்சர் பெருமக்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும்; அரசுப் பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அப்படியொரு சட்டத்தை இயற்ற வேண்டுமென்றால், இங்கே யாரோடு சேர்ந்து நான் இயற்றுவது... அதனால்தான் மக்களை மட்டுமே நம்பி தனித்தே போட்டியிடுகிறோம்.''

``இன்றைய சூழலில், முதன்மைப் பிரச்னையாக இருக்கக்கூடிய வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?''

``எங்கள் கோட்பாடே தனி... `என் தாய்மொழி மீட்சி... தமிழின எழுச்சி' என்கிறார் தேவநேயப் பாவாணர். தாய்மொழி மீட்சிக்கு, `தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா...' என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். `தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்' என்ற நிலையை நான் உருவாக்குவேன். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலையை நாம் கொண்டுவந்துவிட்டால், படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் வேலை வாய்ப்பை நாம் கொடுத்துவிட முடியும்.

உதாரணமாக, பனை மரம் அதிகமுள்ள பகுதியில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, பாய் பின்னுதல், கொட்டாய், பொட்டி பின்னுதல், நார் பிரித்தல், கருப்பட்டி காய்ச்சுதல், கற்கண்டு செய்தல், நுங்கு பதனிடுதல், பதநீர் என உற்பத்தியைப் பெருக்குவோம். உற்பத்தியான இந்தப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு படித்தவர்கள் தேவைப்படுவார்கள். பொருள்களைத் தயாரிப்பதற்கு கற்றவர் தேவையில்லை. ஆக, படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் வேலை கிடைக்கும்.''

ட்ரம்ப் - ஜோ பைடன்

``மாநிலங்களில் ஆரம்பித்து உலக நாடுகள் வரையிலாக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துவரும் நீர் மேலாண்மை குறித்து நாம் தமிழர் கட்சியின் பார்வை என்ன?’’

``நீர் மேலாண்மையை முதன்மையாகக் கொண்டுவர வேண்டும் என்பேன் நான். ஏனெனில், நீரு, வயிறு, உயிரு, அறிவு, பயன், வளர்ச்சி என்பதுதான் எங்கள் கோட்பாடே. நீரின்றி அமையாது உலகு. `ஆசிய நாடுகள்தான் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பொருளாதாரத்தை மதிப்பிடுகின்றன. ஆனால், ஐரோப்பிய நாடுகளெல்லாம் நீர் பொருளாதாரக் கொள்கைக்கு வந்துவிட்டன' என்கிறார் ஜான் ஆண்டனி ஆலன்.

எந்த நாடு நீரை அதிகளவில் வைத்திருக்கிறதோ, அந்த நாடே பணக்கார நாடு. தங்கம், வைரம், பெட்ரோல் வைத்திருப்பவனை எதிர்காலம் மதிப்பிடாது... நீர் வைத்திருக்கிறவனைத்தான் மதிப்பிடும் என்று நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசிவருகிறோம். தங்கம், பெட்ரோலுக்கு இணையாக தண்ணீரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய அமெரிக்கா. ஆக, இந்தநிலைக்கு இப்போதுதான் உலகமே வந்திருக்கிறது.''

Also Read: `சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.க-வில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

``தமிழக அரசியலுக்குள் வரும் புதிய கட்சிகள், `ஊழலுக்கு எதிரான கூட்டணி'யை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனவே?''

``ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் நினைத்தால்... இங்கே யாரோடு சேர்ந்துகொண்டு ஊழல், லஞ்சத்தை ஒழிக்கலாம். இந்தக் கட்சிகளின் ஆட்சிகளில்தானே ஊழல், லஞ்சமே இருக்கின்றன... அவர்களோடு போய் திரும்பவும் சேர்வதென்பது பெருத்த ஏமாற்றமாகிவிடும். அதைச் செய்ய நான் தயாராக இல்லை. என்னை நம்பி நிற்கிறவர்களும் `எந்தச் சமரசமுமின்றி நான் தனித்து நின்று உறுதியோடு போராடுவேன்' என்ற நம்பிக்கையில்தான் என்னோடு நிற்கிறார்கள்.''

அரசியல் கட்சி சின்னங்கள்

``கூட்டணி விஷயத்தில், தேசியக் கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளை எப்படிப் பிரித்துப் பார்க்கிறீர்கள்?''

``எங்கள் அடிப்படைக் கோட்பாடே `காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா, மனிதகுலத்தின் எதிரி' என்பதுதான். திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தி.மு.க - அ.தி.மு.க என இரண்டு கட்சிகளையுமே சம தராசில் வைத்துத்தான் பார்க்கிறோம். `இது கொஞ்சம் பரவாயில்லை' என்ற வேற்றுமையெல்லாம் இதில் கிடையாது. எனவே, இந்த நான்கு கட்சிகளோடும் எந்தக் காலத்திலும் தேர்தல் உடன்பாடு - அரசியல் கூட்டணி இல்லை.''

Also Read: 28 வருட அபயா கொலை வழக்கு : திருடனின் சாட்சியால் பாதிரியார், கன்னியாஸ்திரி சிக்கியது எப்படி?

``திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் அளவுக்கு மத்திய பா.ஜ.க அரசை நீங்கள் விமர்சிப்பதில்லை என்கிறார்களே..?''

சீமான்

``2014-லிருந்தே என்னுடைய உரையைக் கேட்டீர்களென்றால், பா.ஜ.க ஆட்சியையோ அல்லது சரக்கு சேவை வரி, பண மதிப்பிழப்பு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.ஐ.ஏ மாதிரியான கொடும் சட்டங்களை எதிர்த்தோ மக்கள் மன்றங்களில் என்னளவில் பேசியவர்கள் இங்கே யாரும் கிடையாது. இப்போதும்கூட, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சிதான் தினமும் தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. டெல்லி சென்றும் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/america-is-doing-today-what-i-have-been-talking-about-for-10-years-seaman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக