Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

"ஆணவக்கொலையில் ரொமான்ட்டிசைசேஷனா விக்னேஷ் சிவன்?!"- ஒரு ரசிகையின் கடிதம்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு,

'பாவக் கதை'களில் ஒன்றான, நீங்கள் இயக்கிய 'லவ் பண்ணா உட்றணும்' படத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கருத்துகள், சில கேள்விகள், நிறைய வருத்தங்கள்!

திரைப்படத்தின் டிரெய்லரில் லெஸ்பியன் உறவை பற்றிய கதைப்போல காட்டியிருந்தீர்கள். 'தமிழில் இவ்வளவு வெளிப்படையாக பேசும் ஒரு படமா' என புளகாங்கிதம் அடைந்தேன். ஓடிடி மூலமாக வெளியாகும் படங்களுக்கு இன்னும் சென்சார் வரவில்லை என்பது எவ்வளவு பெரிய வரம் என நினைத்து மகிழ்ந்தேன். ஆனால், வசனங்கள் ஒன்றும், காட்சிகள் வேறொன்றும் என்ன என்னன்னவோ செய்துவைத்திருக்கிறார்கள்!

படம் முழுவதும் வரும் நகைச்சுவை வசனங்கள்/காட்சிகள், வில்லன்கள்மீது பார்வையாளர்களுக்கு ஒரு சிறு கோபம்கூட வரவிடாமல் பார்த்துக்கொள்வதில் குறியாக இருக்கும் உங்கள் மனநிலையையே காட்டுகின்றன.

பாவக் கதைகள்

கமர்ஷியல் சினிமாக்களில் கொலை செய்யும் வில்லன் நகைச்சுவை செய்வதே எரிச்சலாக இருக்கும். வில்லனை மேலும் அயோக்கியனாக காட்ட அப்படி ஒரு காட்சி என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் சாதி கலப்புத் திருமணங்களை எதிர்க்கும் ஒரு சமூகத்தில், கலப்புமணம் புரிந்தவர்களை கொலை செய்பவர்களுக்கு முக்கியத்துவம் தரும் நகைச்சுவையை ரசிக்கமுடியவில்லை.

நீங்கள் ஆணவக் கொலைகள் பற்றி செய்திகளில் படித்திருக்கிறீர்களா? என்றைக்காவது உடுமலை சங்கர், கௌசல்யா தம்பதியினர் கௌசல்யாவின் தந்தையால் கூலிப்படையை ஏவி நடுச்சாலையில் தாக்கப்பட்ட காணொலியையும், ஆந்திராவில் ஆறு மாத கர்ப்பிணிப் பெண் அம்ருதாவின் கண்முன்னே, அவரது கணவர் பிரணய் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் பார்த்திருக்கிறீர்களா?

சினிமா காட்சிகளைவிட பார்ப்பவர்களை பதறச் செய்யும் காட்சிகள் அவை. ஓர் ஆணவக்கொலையின் பாதிப்பு அப்படித்தான் இருக்கும். நகைச்சுவைக்கோ, ரொமாண்டிசைஸ் செய்வதற்கோ அதில் துளியும் இடமில்லை.

”உங்களுக்குப் பயந்து பசங்க கூட பேசறத நிறுத்தி, பெண்கள்கிட்ட மட்டும் பேசினதால லெஸ்பியன் ஆயிட்டேன்” என்கிறாள் ஜோதி (அஞ்சலி). ட்விஸ்டுக்குப் பிறகு இதுவொரு சமாளிப்பு என்று தெரிந்தாலும், தன்னுடைய உடல் சார்ந்த தேவைக்கு ஓர் ஆண் அந்த இடத்தில் இல்லாத சூழ்நிலையில் பெண்களிடம் அதை தேடிக்கொண்டதால் அப்படியே ஓர்பால் ஈர்ப்பாளர் (லெஸ்பியன்) ஆகிவிட்டேன் என்றுதானே அதற்கு அர்த்தம்? அப்படி எப்படி யோசிக்க முடிகிறது?

ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இயற்கையாக வருவது மட்டும்தான் காதலா? ஆணுக்கு ஆணின்மீதோ, பெண்ணுக்கு பெண்ணின்மீதோ உருவாகும் காதல் இயற்கையானது இல்லையா? சூழ்நிலை வசத்தால் வெறும் உடல் சார்ந்த தேவைக்கு ஏற்படுவதுதானா?

”கைய புடிச்சிட்டா ESPNஆ?”

”கன்னத்துல முத்தங் குடுத்துட்டா ESPNஆ?”

”வாய்ல முத்தங் குடுத்துட்டா ESPNஆ?”

பாவக் கதைகள்

நரிக்குட்டி இந்த கேள்விகளை உங்களை பார்த்துதான் கேட்கிறார், விக்னேஷ் சிவன்.

லெஸ்பியன் உறவு என்பது கையை பிடித்துக்கொள்வது, கன்னத்திலும், உதட்டிலும் முத்தம் கொடுத்துக்கொள்வது... அவ்வளவுதான், இல்லையா? அதற்குமேல் அங்கிருப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் விழித்தது அந்த பினலோபியும் ஜோதியும் அல்ல, நீங்கள்தான்.

கதையை திசைத் திருப்ப, லெஸ்பியன் உறவின் குறியீடாக உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் இரு பெண்களை காட்டுவதைவிட அபத்தம் எதுவுமில்லை. அது முழுக்க முழுக்க கிளுகிளுப்புக்காக வைக்கப்பட்ட தேவையில்லாத ஆணிதான். அதுபோக இன்னும் எவ்வளவு காலத்துக்கு உதட்டு முத்தங்களே தமிழ் சினிமாவில் காதலை நிரூபிக்க வேண்டும்?

ஆரம்பத்தில் இரு பெண்களும் படுக்கையில் இருக்கும் காட்சியிலிருந்து, அவர்கள் பகிர்ந்துகொள்ளும் ஆழமான முத்தம் வரை லெஸ்பியனாக சித்திரித்து காட்டிவிட்டு கடைசியில் ”இது வெறும் உல்லுல்லாயிக்கு... நாங்க லெஸ்பியன் இல்ல, அப்படி நடிச்சோம்” என்று சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை? “லெஸ்பியனாக இருந்தாலும் தப்பில்ல சார்” என்று ஒரு வரி கடைசியில்!

படம் முழுக்க சாதியைப்போற்றி பாடிவிட்டு இறுதிக்காட்சியில் அரிவாளை தூக்கிப்போட்டுவிட்டு ”புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா” போன்ற அயோக்கியத்தனங்களை கடந்து தமிழ் சினிமா இன்னும் பயணிக்கவே இல்லை என்பது பெரும் ஏமாற்றம்.

இரட்டையராக ஒட்டிப்பிறந்த அக்கா செத்துக் கிடக்கும்போது, தங்கை துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு உடையைத் தேடிப் போட்டுக்கொண்டு வந்து பின் ஆற அமர கதறும் செயற்கைத்தனங்களை எல்லாம் தயவுசெய்து நிறுத்துங்களேன் ப்ளீஸ்!
பாவக் கதைகள்

அப்புறம் அந்த பாட்டு, அடடே அதை யுகபாரதிதான் எழுதினாரா என இருமுறை சரிபார்த்துக் கொண்டேன். ”ஊர் உற்றார் தூண்டுதலால் செய்தேன் மகளே” என்ற பாடல் வரியின் மூலம் தன்மேல் தவறு இல்லை என்று சொல்கிறாரா வீரசிம்மன்?

”கீழே உன் அக்கா செத்துக் கிடக்கறா, உன்னையும் கொன்னு அவ பக்கத்துல பொதச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று தன் இளைய மகளை மிரட்டும் தந்தை, ”உயிர் பிழைக்க வேண்டுமானால் என் மகளைவிட்டு இப்போதே ஓடிடு” என்று தன் மகளின் தோழியை மிரட்டும் தந்தை, அன்றிரவே மகளை கொன்றதை தவறென்று உணர்ந்துகொள்கிறார், அழுகிறார், தூங்காமல் கிடக்கிறார்.

ஆனால், இதற்குமுன் அவ்வூரில் நடந்த சாதிய ஆணவக் கொலைகளுக்கு காரணமாக இருந்ததையும், தன் மகளை காதலித்த ஓட்டுநரை கொன்றதற்காகவும் வீரசிம்மன் வருந்தவில்லையே? அப்படியென்றால் ஆணவக்கொலைகள் சரி என்றும் தன் மகள் என்பதால் மட்டும் பாசத்தின் காரணமாக வருந்துகிறார் என்றும் அர்த்தமா?

அந்த பாடல் முழுவதும் வீரசிம்மனின் கதாபாத்திரத்தை ரொமான்ட்டிசைஸ் செய்திருக்கிறீர்கள். சாதியத் திமிரில், ஆணாதிக்க மனப்பான்மையில் சொந்த மகளை ஆணவக்கொலை செய்யும் ஒரு கொலைகாரனுக்கு மன்னிப்பு உண்டா?

நீங்கள் The Shawshank Redemption படம் பார்த்திருக்கிறீர்களா? ரெட் கதாபாத்திரத்தில் இருக்கும் மார்கன் 40 ஆண்டுகள் சிறையில் கழித்தபின்னும் ஒவ்வொரு நாளும் தான் அறியாத சிறுவயதில் செய்த குற்றத்திற்காக வருந்துவதாக பரோல் போர்டில் இருப்பவர்களிடம் கூறுவார். தன் தவற்றை உணர்ந்துகொண்டவன், அதை நினைத்து தினமும் வருந்துபவன் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவே செய்வான். சட்டத்தை ஏமாற்ற நினைக்க மாட்டான்.

வீரசிம்மனோ, மனசாட்சியையே ஏமாற்றுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இறுதிக் காட்சியில் வீடியோ காலில் பேசும் பினலோபி, வீரசிம்மனை சார் என்று அழைத்து தன்மையாகப் பேசுகிறார். நரிக்குட்டியை அவன் சொல்லிக் கொடுத்த அதே கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். அப்போது சத்தமாக சிரிக்கும் வீரசிம்மன் உனக்கு ஏற்ற பெயர்தான் என அந்த கெட்டவார்த்தையை குறிப்பிடுகிறார். தன் இளைய மகளை விரும்பியவளுடன் அனுப்பி வைப்பதன் மூலம் அதுவரை கொலைக்காரராக இருந்த வீரசிம்மன் திடீர் புனிதராகி, அந்த சிரிப்பின்மூலம் மொத்த பாவத்தையும் நரிக்குட்டியின் மீது ஏற்றி வைக்கிறார்.

பாவக் கதைகள்

காலங்காலமாக நடக்கும் இதுபோன்ற சமூக வன்முறைகளுக்கு முழுக்காரணகர்த்தராக இருக்கும் முதலாளிகள், பெரிய மனிதர்கள் போர்வையில் தப்பித்துக் கொள்வதும், கூலிக்கு வேலை செய்த அடியாட்கள் தண்டனை அனுபவிப்பதும் சரி என்பதுபோல் இருக்கிறது அந்த காட்சி.

ஒரு பெண்ணால் தன் உடன் பிறந்த சகோதரியை கொன்றவனை அப்பாவாகவே இருந்தாலும் தன்னோடு வைத்துக்கொண்டு வாழ முடியுமா? இருவரும் ஒன்று போலவே இருக்கும் மகள்களில் ஒருவரை தினமும் பார்த்துக்கொண்டே இருக்கும்போது குற்றவுணர்ச்சி இல்லாமல் அந்த அப்பாவால் ராப் பாடல் கற்றுக்கொள்ள முடியுமா? ஒருவேளை அதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது, தாராவியில் பிறந்த ஒருவனை (உங்கள் கதையின்படி தாழ்த்தப்பட்டவர்) ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை கொண்டவர் ஆகிறார் வீரசிம்மன் என்பதா?

Also Read: சினிமா விகடன்: பாவக் கதைகள்

நம்மை போன்றே சக மனிதர்களுக்கும் இங்கு வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் இருக்கிறது என்கிற அடிப்படை புரிதல் இல்லாத Privileged ஆட்கள், இந்த சமூகத்தின் குரூர ஆதிக்க மனநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் எல்லாம் தாங்கள் பரிதாபத்தினால் இடும் தானம் என்று நினைத்துகொள்வார்கள்.

வெளியே தன்னை முற்போக்காளராக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் இந்த மனநிலையில் இருப்பவர்கள் LGBTQ, மக்களின் காதல்/உறவு, பெண்கள் மீதான பாலியல்/சாதிய வன்கொடுமைகள் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் எடுக்கும் படங்களின் பட்டியலில் உங்கள் படத்தின் பெயரும் சேரும்.

பாவக் கதைகள்

படத்தில் பாராட்டவேண்டிய விஷயங்களும் உண்டு என்பது சிறு ஆறுதல். நடிகர்கள் தேர்வும், ஒளிப்பதிவும் குறிப்பிட்டு சொல்லும்படி மிகவும் நன்றாக இருந்தது. நரிக்குட்டியாக ஜாபர் சாதிக்கின் நடிப்பு, குரல் (தேனி ஈஸ்வர்), உடை மற்றும் வீரசிம்மனாக பதம்குமாரின் நடிப்பும், உடல்மொழியும் அருமை.

நமக்கு ஒரு விஷயத்தைப்பற்றி தெரியவில்லை/புரியவில்லை என்றால் அதை தெரியாது என்று ஒப்புக்கொள்வதுதான் நேர்மை. தெரியாத விஷயத்தைப்பற்றி கருத்து சொல்கிறேன் என்று மூக்கை நுழைத்து விஷத்தைப் பரப்பக்கூடாது. தமிழ் சமூகம் ஆண் தன்மை கொண்டது. இங்கே பெண்கள் மீதான வன்முறைகளை டார்க் ஹியூமர்/பிளாக் காமெடி வகையறாக்களில் சொல்லும்போது பெண்களின் இடத்தில் நின்று பேசவேண்டும்.

படத்தின் பெயர்: லவ் பண்ணா உட்றணும்!

சொல்லும் செய்தி: ஆணவக்கொலை பண்ணா உட்றணும்!



source https://cinema.vikatan.com/women/questions-to-director-vignesh-shivan-on-paava-kadhaigal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக