Ad

புதன், 23 டிசம்பர், 2020

`10 அசைன்மென்ட், 50 தொகுதி டார்கெட்!' -எடுபடுமா டி.டி.வி-யின் ஆர்.கே.நகர் ஃபார்முலா? #TNElection2021

டிசம்பர் 5-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள். அதற்காக அவர் சமாதிக்கு பெருந்திரளோடு வந்து அஞ்சலி செலுத்தினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். இன்னொரு பக்கம், டிசம்பர் 13-ம் தேதி, டி.டி.வி.தினகரனின் 57-வது பிறந்தநாளை, மாநிலம் முழுக்கவே தடபுடலாகக் கொண்டாடினார்கள் அ.ம.மு.க-வினர்.

நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு கேக் வெட்டினார். அதில், ``"ஏசு கோபப்பட்ட இடம் என்று பைபிளில் ஒரே ஒரு சம்பவம் வருகிறது. என் பிதாவின் வீட்டை திருடர்களின் குகை ஆக்கிவிட்டார்களே என்று அவர்களை சாட்டை எடுத்து விரட்டிய சம்பவம் கூறப்பட்டுள்ளது. நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார் என வேதத்தில கூறப்பட்டுள்ளது" என டி.டி.வி தினகரன் கூறியதும் தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

திடீரென, அ.ம.மு.க-வினரின் செயல்பாடுகளில் புதுவேகம் தெரிய, `என்னங்க, மீண்டும் தீவிரமாக முகம் காட்டத் தொடங்கிவிட்டீர்கள்... தேர்தல் நெருங்கிவிட்டதாலா?' என அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் வேடிக்கையாகக் கேட்டேன்.

டி.டி.வி.தினகரன்

``கொரோனா காலத்தில் எங்கள் பொதுச்செயலாளர் டி.டி.வி வெளியே வந்தால் அவரை பார்க்கப் பெரிய அளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால்தான் அப்போது வரவில்லை. ஆனாலும் சத்தமில்லாமல் எங்கள் பணிகளைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தோம். எங்கள் வீச்சு, இப்போது வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது' என அவர்களும் வேடிக்கையாக பதிலளித்த்தபடியே தொடர்ந்து, `எங்கள் வெற்றிக்கான முக்கியமான 10 சூத்திரங்களை வழங்கியிருக்கிறார் டி.டி.வி' என்றபடியே அவற்றை முழுமையாக விவரிக்கத் தொடங்கினர்.

``கடந்த சில நாட்களுக்கு முன்னர், மண்டல அளவிலான நிர்வாகிகளை அழைத்துத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது எங்கள் தலைமை. உள்ளூரளவிலான நம்முடைய செயற்பாடுகள், சசிகலா விடுதலை, ரஜினி அரசியல், இ.பி.எஸ் ஆட்சி ஆகியவற்றை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் எனப் பலவற்றையும் கேட்டார்கள் எங்கள் தலைமை நிர்வாகிகள். அதன் பிறகுதான், டி.டி.வி கூறிய முக்கிய வழிகாட்டல்களைத் தெரியப்படுத்தினர்'' என்றவர்கள், அவற்றை வரிசையாக அடுக்கினர்.

டி.டி.வி-யின் 10 அசைன்மென்ட்கள் !

``நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை அதிக அளவில் இருக்க வேண்டும்.

தொகுதிவாரியாக ஒன்றிய, நகர, பேரூராட்சியிலுள்ள வாக்காளர்கள் விவரங்களைத் திரட்ட வேண்டும். குறிப்பாக, கடந்தகாலத் தேர்தல்களில் ஆண் - பெண் வாக்காளர்கள் எவ்வளவு பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் வேண்டும். உதாரணமாக, பெண் வாக்காளர்கள் குறைந்த அளவில் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் கூடுதலாக கேன்வாஸ் செய்யலாம். அதன் மூலம் அவர்களை வாக்குச்சாவடி நோக்கிப் பயணிக்கவைத்து, சாதகமான வாக்குகளைப் பெறுவது.

தொகுதிவாரியாக நிர்வாகிகள் கமிட்டி அமைத்து உறுப்பினர் சேர்ப்பு, கழகம் அமைத்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும். இதில் நம் கட்சியில் இருந்தவர்கள், விலகியவர்கள், இங்கிருந்துகொண்டே வேறொரு கட்சியிலும் (முக்கியமாக அ .தி.மு.க) உறுப்பினர்களாக இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

நமது பிரஷர் குக்கர் சின்னதை ஒரு தெரு விடாமல் எழுத சுவர்கள், இடங்கள் எல்லாவற்றையும் ரிசர்வ் செய்வது. எந்த வீட்டுச் சுவரில் வரைகிறோமோ, அவர்களிடம் முறையான அனுமதியையும் பெறுவது.

குறைந்தது 25 பேர்கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

தினகரன்

மகளிர் மற்றும் இளைஞர்கள் பிரதிநித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும். திறமையான மகளிர், இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பரப்புரைகளில் பேசவும் தயார்ப்படுத்த வேண்டும்.

பூத் கமிட்டி நிர்வாகிகளின் முகவரி, செல் நம்பர் உள்ளிட்ட அத்தனையையும் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கிளை, ஒன்றியம், நகரம் என அனைத்துத் தளங்களிலும் ஆள் இல்லாமல் இருக்கக் கூடாது.

தொகுதியளவிலுள்ள சிறுபான்மையினர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட அளவிலுள்ள சிறு சிறு அமைப்புகள், நலச்சங்கங்கள், தன்னார்வக் குழுக்கள், சாதி, சமுதாய அமைப்புகள் குறித்த ஒட்டுமொத்த ஃபைல்களைத் திரட்டி அனுப்ப வேண்டும்...’’

என மூச்சுவிடாமல் கொட்டியவர்கள், சில விநாடி ஆசுவாசத்துக்குப் பிறகு ``இந்த 10 சூத்திரங்களோடு ஆர்.கே.நகர் ஃபார்முலாவையும் கடைப்பிடிக்கப் போகிறோம். வெற்றி நிச்சயம்’’ என்றார்கள்.

``எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்களே... அந்த 20 ரூபாய் டோக்கன் ஃபார்முலாவா?'’ என்றோம், ``அவர்கள் பார்வையில் அப்படியிருக்கலாம். ஆனால் இது முற்றிலும் வேறு...’’ என்றவாறே அதையும் விவரிக்கத் தொடங்கினர்.

ஆர்.கே.நகர் ஃபார்முலா:

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்களிடம் நன்கு அறிமுகமான இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களை மண்ணைக் கவ்வவைத்து, எங்கள் பிரஷர் குக்கர் வெற்றி அடைந்தது. அதற்கு முக்கியமான காரணம், எங்கள் டி.டி.வி வகுத்த வியூகம். ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள பல்வேறு மீனவச் சங்கங்கள், சலவைத் தொழிலாளர் சங்கங்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு சுய உதவிக்குழுக்கள் என இப்படியான பல்வேறு அமைப்புகளுடன் கூட்டணிவைத்தோம். உதாரணமாக, ஒரு மீனவச் சங்கத்தில் 10,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கென்றே தனிக்குழு அமைத்து, தொடர்ந்து கேன்வாஸ் செய்து ஆதரவு கேட்டோம்.

அவர்கள் கோரிக்கையை தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றோம். இப்படி தொகுதிக்குள் இருக்கும் ஒவ்வோர் அமைப்புக்கும் ஒவ்வொரு தனித்தனித் திட்டம் அமைத்து, அணுகினோம். மேலும், தொகுதிக்குள் சுமார் 15% சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்து தனித் திட்டத்தின் மூலம் களப்பணி செய்தோம். மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கடுமையாக முழங்கினோம். இவையெல்லாமே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க பக்கம் வாக்குகள் செல்லாமல் அத்தனையையும் எங்கள் பக்கம் திருப்பி, எங்கள் டி.டி.வி-யை சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏ-வாக அனுப்பிவைத்தது.

ஆர்.கே.நகர் தேர்தல்: டி.டி.வி.தினகரன்

அதே ஃபார்முலாவைத்தான் தற்போது தொடரப்போகிறோம். இதற்காகத்தான் தொகுதிக்குள் இருக்கும் பல்வேறு அமைப்புகளின் பட்டியல்கள் மற்றும் சிறுபான்மையினர் விவரங்கள் அனைத்தையும், எங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் , மாநில நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக தென்மாவட்டங்களிலுள்ள பல்வேறு சாதி, சமுதாய இயக்கங்களிடமும் பேசிவருகிறோம். இவ்வாறு வட்டார அளவிலான கூட்டணி, தனித் திட்டம் எல்லாம் நிச்சயம் 2021-ல் எங்களை வெற்றிபெற வைக்கும்’’ என்றார்கள் உற்சாகமான குரலில்.

டார்கெட் - 50

``இப்படி ஒருபக்கம் வேலைகள் தொடங்கிவிட்டாலும், மாநில அளவிலான பொறுப்பாளர்கள், பெரிய கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தீவிர ஆலோசனைகளைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். சமீபத்தில், அம்மா சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, எங்கள் தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையை நிகழ்த்தினார் டி.டி.வி.

அதன் பிறகும் செல்பேசி வாயிலாகவும், பல்வேறு மா.செ-க்களின் கருத்துகளைக் கேட்டுவருகிறார் .

டி.டி.வி.தினகரன்

ரஜினி-யுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சிலர் சொன்னார்கள்; மூன்றாவது அணி முயற்சியை முன்னெடுக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். சிலரோ `அ.தி.மு.க-அ.ம.மு.க விரைவில் இணைய வேண்டும்’ என்றும், வேறு சிலரோ, `நமக்குத் தனிச் சின்னம் இல்லாமலேயே கடந்த மக்களவைத் தேர்தலில் 5.13% வாக்குகளைப் பெற்றோம். தற்போது அதே பிரஷர் குக்கர் சின்னமும் கிடைத்திருக்கிறது. தனித்தே நின்றாலும் கணிசமான வெற்றிகளைப் பெற முடியும்' என்றும் கருத்துகளைத் தெரிவித்தனர். இறுதியாக, `மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகளின் பட்டியலை எடுத்தோம். செல்வாக்கு அதிகமுள்ள தொகுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறோம். அவற்றில், சுமார் 50 சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து பணிகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறது தலைமை. இந்த 50-ல் வெற்றி நிச்சயம்’’ என்கிறார்கள் டி.டி.வி-க்கு நெருக்கமாக வலம்வரும் நிர்வாகிகள்.

Also Read: `டி.டி.வி தினகரன் சிப் என்னிடம் இருக்கிறது; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்!’ - கொந்தளித்த புகழேந்தி

அம்மா ஆட்சியே அ.ம.மு.க ஆட்சி!

அ.ம.மு.க-வின் இப்படியான ஒட்டுமொத்தமான திட்டங்கள் குறித்து, அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெ.பழனியப்பனிடம் கேட்டேன்.

``பூத் கமிட்டிகளை ஏற்கெனவே பலப்படுத்தியிருக்கிறோம். மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தற்போதைய எடப்பாடி ஆட்சி, அம்மா ஆட்சியே இல்லை. இது, மக்கள் விரோத ஆட்சி. உண்மையான அம்மா ஆட்சியை எங்களால் மட்டுமே வழங்க முடியும். மற்றபடி எங்கள் இலக்கு என்பது 234 தொகுதியிலும் வெல்வதுதான்" எனச் சிரித்தவரிடம், `எந்தக் கூட்டணியில் இடம் பெறத் திட்டம்?’ என்று கேட்க, ``கூட்டணி உள்ளிட்ட எதையும் எங்கள் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்தான் முடிவு செய்வார். அவர் முடிவை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான் எங்கள் பணி" என்றார் சுருக்கமாக.

டி.டி.வி.தினகரன்

2021 தேர்தலுக்காக 10 அசைன்மென்ட்கள் , ஆர்.கே.நகர் ஃபார்முலா, 50 தொகுதி டார்கெட் என பக்கா பிளான்களோடு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அனைத்துக் கட்சிகளும் தங்களின் வாக்கு வேட்டைக்கு வியூகம் அமைத்துள்ளன. எல்லோரையும் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்காளர்கள்..!

`மைக்ரோ லெவல் பிளான்; ஆபரேஷன் சேலம்!'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்? #TNElection2021

Also Read: `மைக்ரோ லெவல் பிளான்; ஆபரேஷன் சேலம்!'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்? #TNElection2021

`ரஜினி அரசியல்... டார்கெட் மு.க.ஸ்டாலின்!’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்! #TNElection2021

Also Read: `ரஜினி அரசியல்... டார்கெட் மு.க.ஸ்டாலின்!’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்! #TNElection2021



source https://www.vikatan.com/government-and-politics/politics/ttv-dinakarans-10-assignment-and-target-action-plan-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக